ஹிட்லருக்கும் பொன்.சிவகுமாரனுக்கும் ஒரே சோதிட குறிப்பு!- முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா எழுதுகிறார்!

©தமிழ்பக்கம்

1969களில் உயர்தரப் பரீட்சை எடுத்துவிட்டுப் பல்கலைகழக அனுமதிக்காக காத்திருந்தேன். இந்த சமயத்தில் கொக்குவிலைச் சேர்ந்த சிவயோகநாதன் என்ற பாடசாலை நண்பன் மூலம் சென் பற்றிக்ஸ் மாணவர்கள் சிலர் இணைந்து இளைஞர் இயக்கம் ஒன்றை ஆரம்பித்த தகவலை அறிந்தேன். அந்த அமைப்பின் முதலாவது கூட்டம் ஏற்கவே நடந்துள்ளதாகவும், இரண்டாவது கூட்டம் கொக்குவில் மேற்கு ஞானபண்டித வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாகவும், அதில் என்னையும் பங்குபற்றும்படி கோரியிருந்தார். கூட்டத்திற்கு சென்றிருந்தேன்.

அந்தக்கூட்டமே எனது அரசியல் பயணத்தின் முதலாவது பிரவேசம் ஆகும். அங்குதான் தமிழரசுக் கட்சியின் இளைஞர் செயற்பாட்டாளரான மாவை.சேனாதிராசாவை முதலில் சந்தித்தேன். அவர் தவிர தேசிய இலங்கை மன்னன், மைக்கல் தம்பிநாயகம், வில்வராஜா, முத்துக்குமார் (குமார்), கனகசுந்தரி, விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் லோரன்ஸ் திலகர் என பின்னாளில் அறியப்பட்ட ஜோன் என பலரும் கலந்து கொண்டனர். அந்த இயக்கத்தின் பெயர் ஈழ விடுதலை இயக்கம் எனத் தீர்மானிக்கப்பட்டது. ஈழம் என்ற சொல்லை அமைப்பின் பெயரில் சேர்த்த முதல் இயக்கமாக அது இருக்குமென நம்புகின்றேன்.

சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பயன்படுத்தி அப்பொழுது நிகழ்ந்த பௌத்த மத மாற்றத்தை எதிர்த்தல், காணி பறிபோவதை தடுத்தல், தமிழரசுக்கட்சியின் மந்த கதியினாலான செயற்பாடுகள்  இனத்திற்கு விடிவை தராது என்ற கருத்துக்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் முன்வைக்கப்பட்டது. காணி பறிபோவதற்கெதிராக போராட புறப்பட்ட போராட்டத்தின் முடிவில் இன்று அன்றிலும் பார்க்க எத்தனையோ மடங்கு காணிகள் பறிபோகப்பட்டுள்ளதென்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

இவ்விடயங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி சந்தியிலிருந்து ஒரு ஊர்வலம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. தமிழர்களின் உரிமைப் போராட்டம் பாரம்பரிய தமிழ்க் கட்சிகள், தலைவர்களின் கையிலிருந்து இளைஞர்கள் போராட்டத்தைக் கையிலெடுத்த முதல் நிகழ்வாக இதனைக் கருதலாம்.

1970 மே மாதம் நடைபெற்ற தேர்ததலில் இவ்வமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அவரவர் இயைபிற்கேற்றபடி கட்சி ரீதியாக வெவ்வேறு கோணங்களில் நின்று செயற்பட்டனர். நான்  தமிழரசுக்கட்சியிலிருந்து பிரிந்து  வீ. நவரத்தினம் தலைமையில் செயற்பட்ட சுயாட்சிக்கழகத்தை ஆதரித்திருந்தேன். அதன் நல்லூர் தொகுதி வேட்பாளரான இரத்தினம் என்பவரிற்காக பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். அப்போது சுயாட்சிக்கழகத்தின் தீவிரப் பிரசாரளராக செயற்பட்டவர் தற்போதைய ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த சிறீகாந்தா. அத் தேர்தலின் பின்னர் சுயாட்சிக்கழகத்தின் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கவகையில் அமைந்திருக்கவில்லை.

அந்த சமயத்தில் அரசியல் தெளிவு, தூரநோக்கு எதுவுமில்லாத இளைஞனாகவே நான் இருந்தேன். தமிழ் மக்களின் அரசியல் விடிவென்ற ஒன்றுதான் மனத்திலிருந்தது. அதே நேரம் கொம்யூனிஸ்ற் கட்சியைச் சேர்ந்த வீ.பொன்னம்பலத்தின் அரசியல் வகுப்புக்களிற்கும் போனேன். கொக்குவிலில் உள்ள முதலி, கட்சிக்கூட்டங்களிற்கு வருபவர்களிற்காக நன்றாக செலவு செய்வார். வகுப்பு முடிந்ததும் வாப்பா கடையில் சாப்பாடு, ஐஸ்கிறீம் எனக் களை கட்டும். இதற்காகவும் நாங்கள் சிலர் வகுப்பிற்கு போனதுண்டு.

கொக்குவிலில் முத்துகுமாரசுவாமி என்ற ஆங்கில ஆசிரியர் இருந்தார். தமிழரசுக் கட்சியின் அரசியற் போராட்டங்களில் ஈடுபட்டவர். 1970 தேர்தலில் சுயாட்சிக் கழகத்திற்காக அர்ப்பணித்துப் பணியாற்றியவர்.  கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொன்.சிவகுமாரனும் (முதலில் சயனைட் உட்கொண்டு மரணமானவர்) அவரிடம் ஆங்கிலம் படிக்க வந்தார். நானும் அவரிடம் ஆங்கிலம் படித்தேன். ஆங்கிலத்துடன் சேர்த்துப் பல அரசியல் விடயங்களையும் சொல்லித் தருவார். அங்குதான் சிவகுமாரனுடனான நெருக்கமான நட்பு ஆரம்பித்தது.

அப்போது அவர் தீவிர வன்முறை செயற்பாடுகளில் நாட்டம் கொண்டிருந்தார். சிவகுமாரன் வாழ்வில் நடந்த சம்பவமென நான் கேள்விப்பட்டதனை முதலில் பதிவு செய்ய விரும்புகின்றேன். குட்டிமணியின் அண்ணனின் மகன் ஒருவரும் கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரியில் படித்துள்ளார். இருவருக்குமிடையில் நெருக்கம் ஏற்பட்டு, குட்டிமணியின் வல்வெட்டித்துறையிலுள்ள கோழிப்பண்ணைக்கு சென்றிருக்கிறார். அப்பொழுது வல்வெட்டித்துறையைச் சார்ந்தவர்கள் கடத்தலில் ஈடுபடுவதாகக் கருதப்பட்டதனால் கடற்படையினருடன் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படுவது வழக்கம்.  இந்த முரண்பாடுகளினால் குட்டிமணி, கோழிப்பண்ணை என்ற போர்வையில் வெடிகுண்டுகள் தயாரிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வந்தார்.

சிவகுமார் அங்கு சென்று வெடிகுண்டுகள் தயாரிக்க பழகியுள்ளார். ரின்பால் பேணியில் வெடிகுண்டு செய்வது பற்றியெல்லாம் எம்முடன் பேசுவார். எங்களுக்கு இந்தக் கதைகள் புதிது. அதனால் ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருப்போம். உரும்பிராயிலுள்ள அவரது வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்று வெடிகுண்டு தயாரித்தல் பற்றிக் கற்றுத் தந்தார்.

முத்துகுமாரசுவாமியின் தம்பி ஆனந்தகுமாரசுவாமியும் தீவிர இனப்பற்றாளர். அதுபோல ஞானசுந்தரம் என்ற இளைப்பாறிய பொலிஸ்காரர் ஒருவர் இருந்தார். வன்முறைப் பாதைதான் தமிழர்களிற்கு தீர்வு தருமென்று இளைஞர்கள் மத்தியில் தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார்.

குட்டிமணியின் பாற்பண்ணையிலிருந்து கொண்டு வந்த சில வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களை ஆனந்தகுமாரசுவாமியின் வீட்டில்தான் சிவகுமாரன் மறைத்து வைத்திருந்தார். ஒருநாள் திடீரென ஆனந்தகுமாரசுவாமியிடம் வந்து, யாழ்ப்பாணத்திற்கு வரும் அமைச்சருக்கு குண்டு வைக்கப்போகிறேன் என்றுள்ளார். ஆனந்தகுமாரசுவாமி தடுத்தும் சிவகுமாரன் கேட்காது அவர் வீட்டிலிருந்த வெடிகுண்டுப்  பொருட்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டு போய்விட்டார்.

சிறிமா அரசில் ஆயுள்வேதப் பிரதியமைச்சராக இருந்த சோமவீர சந்திரசிறீ உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு நிகழ்வொன்றிற்காக வந்திருந்தார். சிவகுமாரன் அவரது காரின் முன் ரயரிற்குப் பின்புறமாக குண்டை வைத்துள்ளார். பிரதியமைச்சர் மேடையில் பேச்சை முடித்ததும், சாரதி காரை இயக்கி, பின்னால் செலுத்த முயலக் குண்டு வெடித்துள்ளது. வெடிகுண்டுத் தயாரிப்பின் முதல் காலகட்டம் அது. அதனால் பெரிய பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

சிவகுமாரன் உரும்பிராய் சந்தியில் நின்று வழக்கமாக வன்முறை அரசியல் தொடர்பாக வீராப்பாகப் பேசுபவர். அதனால் இதை செய்தது யார் என்பதில் ஊரில் சந்தேகமிருக்கவில்லை. பொலிசுக்கும் தகவல் போய், சிவகுமாரன் கைதானார். பொலிசார் அடித்ததில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி சிவகுமாரன் சொல்லிவிட்டார்.

சிவகுமாரன் பிடிபட்டதால் எங்களுக்கும் பிரச்சனை வருமென எல்லோரும் எதிர்பார்த்தோம். மறுநாள் இரவு முத்துக்குமாரசுவாமியின் வீட்டில் கூடி அடுத்து என்ன செய்யலாமென பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது வீட்டு வாசலுக்குப் பொலிசார் ஜீப்பில் வந்தனர். விபரீதம் என்பதை உணர்ந்து எல்லோரும் பின்பக்கத்தால் ஓடிச்சென்று வேலி கடந்து தப்பித்து விட்டோம். முத்துக்குமாரசுவாமி தானொரு ஆசிரியர் என்பதனாலும், தனக்கு இதில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதனாலும் பிரச்சனையில்லையென நினைத்தார். ஆனந்தகுமாரசுவாமியைத் தேடிய பொலிசார், அவரை வரச்செய்வதற்காக முத்துகுமாரசுhமியை கைது செய்துகொண்டு சென்றனர். நாங்கள் நான்கைந்து பேர் அதில் தப்பித்ததற்கு காரணம், எங்களது வீடுகள் சிவகுமாரனிற்குத் தெரியாதது.

சிலநாள் தலைமறைவாக இருந்த ஆனந்தகுமாரசுவாமி பின்னர் பொலிசில் சரணடைந்தார். விசாரணையின் பின் ஆனந்தகுமாரசுவாமியையும், சிவகுமாரனையும் அனுராதபுர சிறைக்கு மாற்றிவிட்டனர். சிவகுமாரனைப் பிணையில் எடுப்பதற்காக அவரது தாயாருடன் பல இடங்களிற்கும் சென்று முயற்சிகள் செய்தேன்.

நான் உட்பட இதில் சம்பந்தப்பட்ட சிலர் அமிர்தலிங்கத்திடம் சென்று விடயத்தைச் சொன்னோம். நீலன் திருச்செல்வத்தின் தந்தையார் திருச்செல்வத்திற்கு ஒரு கடிதத்தைத் தந்து கொழும்பு சென்று அவரைச் சந்திக்குமாறு கூறினார். கொழும்பிலிருந்த திருச்செல்வத்தின் வீட்டுக்கு நானும் சிவகுமாரின் தாயாரும் சென்றோம். அது பெரியதொரு மாளிகை. அழைப்பு மணியை அழுத்தி அவர் வெளியில் வந்ததும் கடிதத்தைக் கொடுத்தோம். படித்துவிட்டு, “எங்களை கேட்டா குண்டு வைச்சனீங்கள்“ எனப் பேசினார். ஒரு மாதிரி அவரை சமாளித்து, அவரை ஆஜராக வைத்தோம். சிவகுமாரன் பிணையில் விடுதலையானார்.

என்னுடைய தந்தையார் ஒரு ஆசிரியர். சாத்திரமும் பார்ப்பார். பிரபலமான உலகத்தலைவர்கள் பற்றிய சோதிடக் குறிப்புகள் அவரிடம் இருக்கும். எனக்கு இன்றுவரை சாத்திரத்தில் நம்பிக்கையில்லை. மகன் சிறையில் இருந்தபோது, அவரது குறிப்பை எனது தந்தையாரிடம் காட்ட சிவகுமாரனின் தாய் விரும்பினார். சிவகுமாரனின் தாய் எனது வீட்டுக்கு வந்தால், நான் வீட்டில் அகப்பட்டு விடுவேன். நான் படிக்கிறேன் என்று மட்டும்தான் வீட்டில் நினைத்தார்கள். அதனால் சிவகுமாரனின் குறிப்பை என்னிடம் தாருங்கள், கேட்டு சொல்கிறேன் என வாங்கிக்கொண்டு அக் குறிப்பை எனது தந்தையாரிடம் கொடுத்தேன். குறிப்பைப் பார்த்துவிட்டு அவர் கூறிய முதல் வார்த்தை- “இவனின் சாதகமும் ஹிட்லரின் சாதகமும் ஒரே மாதிரியாகவுள்ளது” என்றும,; குறுகிய காலத்தில் பிரகாசித்து மறைவான் என்றும் கூறினார்.

ஒருநாள், பேராதனைப் பல்கலைகழகத்தில் படிப்பை முடித்து வந்திருக்கும் நண்பர் ஒருவரை சந்திக்க வருமாறு சிவகுமாரன் கேட்டார். அந்த நண்பரும் தீவிர இனப்பற்றாளரென்று என்னிடம் கூறினார். இவ்வாறாக சத்தியசீலன் அவரது உரும்பிராய் இல்லத்தில் வைத்து அறிமுகப்படுத்தப்பட்டார். இதன்பின்னர் பல்கலைகழகத் தேர்வில், இனரீதியான தரப்படுத்தல் முறைமை அறிமுகமானது. இதனால் எனது பல்கலைகழக அனுமதி வாய்ப்பும் தவறியது.

(தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here