வீழ்ச்சியடையும் வடக்கு முன்பள்ளி கல்வித்தரம்: காரணங்களும், தீர்வுகளும்!

வவுனியா முன்பள்ளி நிகழ்வொன்றில் எடுக்கப்பட்ட படம்

©தமிழ்பக்கம்

வடக்கு கிழக்கு முன்பள்ளி கல்வி பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் இலங்கையின் 9 மாகாணங்களிலும் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் முன்பள்ளிக் கல்வியில் இறுதி நிலையில் உள்ள விடயம் தெரிய வந்தது. புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தரவரிசையை போல் முன்பள்ளிக் கல்வியும் இறுதி நிலையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு கிழக்கு முன்பள்ளி கல்வி சார்ந்த கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளே பின்னடைவிற்கு காரணம் என கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வடக்கு கிழக்கு முன்பள்ளிகளுக்கான பௌதீக வளப்பற்றாக்குறை மிக முக்கிய குறைபாடாக காணப்படுகின்றது. பல முன்பள்ளிகள் கட்டிடம் இல்லாமல் தற்காலிக கொட்டில்களில் இயங்கி வருகின்றன. சில முன்பள்ளிகளுக்கு கட்டிடங்கள் இருந்தாலும் அவை காற்றோட்ட வசதியற்றதாக உள்ளன. யாழ் மாவட்டத்தில் தீவகப் பகுதிகளில் கட்டிட வசதிகளின்மையால் பல முன்பள்ளிகள் சீராக இயங்க முடியாத நிலையில் உள்ளன.

கிராமப்புற முன்பள்ளிகள் பல குடிநீர் வசதி, மலசலகூட வசதி இல்லாமல் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்குகின்றனர். சிறார்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் இல்லாமலும் முன்பள்ளிகள் இயங்குகின்றன.

சிறார்களுக்கான மேசைகள் கதிரைகள் இல்லாத முன்பள்ளிகளில் பிள்ளைகளை தரையில் அமர்ந்து கல்வி கற்கும் நிலையை காணக்கூடியதாக உள்ளது.
ஆனால் ஒரு சில கிராமங்களில் பிள்ளைகள் குறைவு என்ற காரணத்தினால் முன்பள்ளிக் கட்டிடங்கள் பயன்பாடின்றியும் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய கல்வித் தகுதி பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய சுற்று நிருபத்தின் படி ஆசிரியர்கள், க.பொ.த உயர்தர சித்தியுடன் முன்பள்ளி டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். ஆனால் வடக்கு கிழக்கில் பெரும்பாலான ஆசிரியர்கள் சாதாரண தரத்துடன் பல வருடங்களாக கற்பித்து வருகின்றனர். அவர்கள் முன்பள்ளிக் கல்வியில் டிப்ளோமா முடித்திருந்தாலும் உயர்தரம் சித்தி இல்லாத காரணத்தினால் பணியிலிருந்து நீக்கப்படும் அபாயத்தினை எதிர்கொண்டுள்ளனர்.

இவ்வாறு நீக்கப்படும் ஆசிரியர்களின் பல வருட அனுபவங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இவ்வாறு வடக்கு கிழக்கில் பல ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு அவர்களின் சேவைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் ஆசிரியர்கள் மத்தியில் கல்வித் தகுதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளது. உயர்தர சித்தியுடன் முன்பள்ளி டிப்ளோமா பூர்த்தி செய்த ஆசிரியர்கள், சாதாரண தரத்துடன் பலவருட அனுபவத்துடன் கற்பிக்கும் ஆசிரியர்கள், உயர்தரத்துடன் டிப்ளோமா கல்வி கற்றுக்கொண்டு கற்பிக்கும் ஆசிரியர்கள் என வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.

முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாக குறைவான சம்பள மட்டம் உள்ளது. கல்வி அமைச்சினால் முன்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு மாதாந்தம் 4000 ரூபா மாத்திரமே தற்போது வழங்கப்படுகின்றது. சில முன்பள்ளிகளில் பிள்ளைகளிடம் இருந்து சில தொகை அறவிடப்பட்டு ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படுகின்றது. பதிவு செய்யப்படாத நிலையில் உள்ள முன்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எந்த ஒரு கொடுப்பனவிற்கும் உரித்து இல்லாத நிலையில் பணியாற்றுகின்றனர்.

இதனால் முன்பள்ளி ஆசிரியர்கள் பொருளாதார ரீதியாக மன அழுத்தங்களை சந்திக்கின்றனர். ஆர்வமின்றியும் குறைதொழில் மட்டத்திலும் கற்பிக்க வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர்.

முன்பள்ளி டிப்ளோமா கற்கைநெறிக்காக ஆசிரியர்களிடம் 17,500 ரூபா அறவிடப்படுகின்றது. இது அதிகரித்த தொகை என முன்பள்ளிஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முன்பள்ளி கல்விநேரம் 3 மணித்தியாலங்கள் என்றாலும் தாம் மேலதிக நேரத்தை பிள்ளைகளுடன் செலவிடுவதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். எந்த ஒரு பிள்ளையையும் தனியே வீட்டுக்கு அனுப்புவதில்லை. பெற்றோர் வரும் வரை காத்திருந்து அவர்களுடனேயே அனுப்புகின்றனர். சராசரியாக ஒரு பாடசாலையின் செயற்பாட்டு நேரத்தை தாங்களும் முன்பள்ளியில் செலவிடுவதாக கூறுகின்றனர்.
குறைந்தளவான சம்பளத்திற்கு அதிகளவான நேரத்தை முன்பள்ளியில் செலவிடுவதனால் குடும்பத்தில் பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார்கள்.

அதிகளவு வேலைச்சுமையையும் சுமக்கிறார்கள். 20 பிள்ளைகளுக்கு 1 ஆசிரியர் என்ற எல்லையை மீறி ஆசிரியர்கள் அதிகளவான பிள்ளைகளுக்கு கற்பித்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு பிள்ளையின் மீதான தனிக் கவனம் என்பது கேள்விக்குள்ளாகின்றது. மேலும் அரசாங்கத்தின் பால் வழங்கும் திட்டம், போஷாக்கு திட்டங்களால் தங்களுக்கு வேலைச்சுமை அதிகரித்துள்ளதாகவும் ஆசிரியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இடப்பற்றாக்குறை காரணமாக 03 வயது, 04 வயது, மற்றும் 05 வயது பிள்ளைகளை வேறுபடுத்தாது ஒன்றாக கற்பிக்கும் காரணத்தினால் பிள்ளைகளின் வயதிற்கேற்ற செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது உள்ளதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆசிரியர்களுக்கிடையிலான முரண்பாடும் முன்பள்ளிக் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. கல்வித்தகுதி, அனுபவ அடிப்படையில் இவ் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

பெற்றோர்கள் பிள்ளைகளை முன்பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். வீட்டிலும் முன்பள்ளி கல்வி சார்ந்த விடயங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் தவறவிடப்படுகின்றது. பிள்ளைகளுக்கு வீட்டிலும் பராமரிப்பு வழிகாட்டல்கள் தேவையாக உள்ளது. பெற்றோர் தமது வேலைச்சுமை காரணமாக பிள்ளைகளுக்கு கார்ட்டூன் இறுவெட்டுக்கள், டிவியை பார்க்க விடுகின்றனர். இங்கு பிள்ளைகள் வன்முறை மற்றும் சண்டைகளை கற்றுக் கொள்கின்றது. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுப்பதாக ஆசிரியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் முன்பள்ளி முகாமைத்துவக் குழுக்கள் வினைத்திறனற்ற செயற்பாட்டை கொண்டிருக்கின்றன. முன்பள்ளி முகாமைத்துவக் குழு உறுப்பினர்களுக்கிடையில் பதவி முரண்பாடுகள் நிலவுகின்றன. மற்றும் நிதிப் பற்றாக்குறையையும் எதிர்நோக்குகின்றன. இவை முன்பள்ளிக் கல்வியின் வினைத்திறனை பாதிக்கின்றன. முகாமைத்துவ குழுவிற்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் ஏற்படும் மனஸ்தாபங்கள் காரணமாக அதிரடியாக ஆசிரியர்களை இடைநிறுத்தும் செயற்பாட்டை முகாமைத்துவகுழுக்கள் மேற்கொள்வது முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகின்றன.

முன்பள்ளி ஆசிரியர்கள் சங்கமும் வினைத்திறனற்ற செயற்பாட்டை கொண்டிருக்கின்றது. ஆசிரியர்களிடமிருந்து அங்கத்துவ கட்டணமாக 250 ரூபா அறவிடப்படுகின்றது. ஆனால் வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கம் ஆசிரியர்களின் நலன் தொடர்பாக எந்த ஒரு ஆரோக்கிய நடவடிக்கையையும் எடுக்காமல் மௌனமாக உள்ளது. வடமாகாண முன்பிள்ளை பருவகல்வி அபிவிருத்தி பிரிவு முன்பள்ளி ஆசியர்களுடனும் முன்பள்ளி முகாமைத்துவக் குழுக்களுடனும் சுமுகமாக உறவை பேண தவறிவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்பள்ளி ஆசிரியர்கள் தங்களது பிரச்சினைகளை பொதுக்கூட்டங்களில் கதைப்பதற்கு தயங்குகின்றனர். ஏதாவது கதைத்தால் தாம் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவோம் என்று அவர்கள் பயப்படுகின்றார்கள். அவர்கள் கதைப்பதற்கு சந்தர்ப்பங்களை கொடுக்க வேண்டும்.

முன்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் சிறப்பாக செயற்பட வேண்டும். கல்வித் தகுதியினால் தகுதி நீக்கப்படும் முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக ஆசிரியர் சங்கம் விசேட கரிசனை கொள்ள வேண்டும்.

முன்பள்ளிக் கல்வி மீது கவனம் செலுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனால் முன்பள்ளிக் கல்வியை முன்னேற்ற வேண்டிய உயர் அதிகாரிகளே தனியார் முன்பள்ளிக் கல்வி நிலையங்களை உருவாக்கி அதன் மூலம் இலாபம் கண்டுவருகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.


கலாநிதி தனபாலன்
நிபுணத்துவ ஆலோசகர்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி 

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி தரமற்றதாக காணப்படுகின்றது. பிள்ளைகளுக்கு முன் எழுத்து தேர்ச்சி, மண் விளையாடுதல், கிளே விளையாடுதல், கீறுதல், வெட்டுதல் செயற்பாடுகள் முன்பள்ளிகளில் இடம்பெறவில்லை.
பிள்ளைகள் நடத்தல், ஓடுதல், கையை உயர்த்துதல் செயற்பாடுகளை செய்யாமல் 3 மணித்தியால நேரமும் கதிரையிலேயே இருத்தப்படுகின்றனர். அடிப்படைத் தேர்ச்சிகள், கைப் பயிற்சிகள், புலப்பயிற்சி, உபகரணங்களைகையாளும் பயிற்சிகள் என்பன கொடுக்கப்படாமல் உள்ளன.

முன்பள்ளிகளுக்கு பெற்றோர்களின் நிதிப் பங்களிப்பு போதுமானதாக இல்லை. எழுத்துக்களை இனம்காணும் பயிற்சிதான் முன்பள்ளி பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் ஆனால் எமது முன்பள்ளிகள் பலவற்றில் எழுத்து பயிற்சி வழங்கப்படுகின்றது. இது சிறார்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்துகின்றது.

வடக்கு மாகாண நியதிச் சட்டங்களில் ஒன்றாக முன்பள்ளிக் கல்வி அபிவிருத்தி உள்ளது. ஆனால் இன்னும் அது வடக்குமாகாண சபை நிர்வாகத்தினால் அடையப்படவில்லை. தற்போது மாகாணசபையினால் முன்பள்ளிகள் பற்றிய பதிவுகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றுக்கு அப்பால் முன்பள்ளிகளின் பௌதீக வளத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வடக்கு மாகாண உறுப்பினர்களாக உறுப்பினர்களாக வருபவர்கள் முன்வர வேண்டும்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 8000 ரூபா குறைந்த பட்ச சம்பளம் வழங்கப்பட வேண்டும். அதுதான் அவர்களின் உழைப்பிற்கு கொடுக்கும் மரியாதை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here