Exclusive: ‘கோத்தபாய ஜனாதிபதியானால், நான் பிரதமர்’: மைத்திரியின் மெகா டீல்!

சிறிலங்கா சுதந்திரக்கட்சி- பொதுஜன பெரமுனவிற்கிடையிலான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தற்பொழுது  (நண்பகல் 12.15) ஆரம்பித்து நடந்து வருகின்றன. எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் இந்த பேச்சுக்கள் நடந்து வருகின்றன.

இந்த பேச்சுக்களின் இதுவரையான நிலவரங்கள் என்ன, பேச்சுக்களின் பின்னணி தகவல்கள் பற்றி தமிழ்பக்கம் வாசகர்களிற்காக சில சுவாரஸ்ய தகவல்களை தருகிறோம்.

நேற்று (13) பசில் ராஜபக்ச ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில் சில விசயங்களை சொன்னார். நாங்கள் யாருக்கும் நிபந்தனை விதிக்கவில்லை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தமது விருப்பத்தை சொல்லலாம் என்பது பசில் சொன்ன முக்கிய விடயங்கள்.

மைத்திரி இதுவரை பகிரங்கமாக தனது விருப்பதை சொல்லவில்லை. இப்போதே, பகிரங்கமாக சொன்னால், இருக்கும் ஆதரவையும் சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் மூலம் நாறடித்து விடுவார்கள் என்பது மைத்திரிக்கு தெரியும். அதைத்தான் ராஜபக்ச அணி விரும்புகிறது. மைத்திரியை இப்போதே சொல்ல வைக்க வேண்டுமென முயற்சிக்கிறார்கள்.

மறுபுறமாக, கட்சியே தீர்மானித்து, தன்னை ஜனாதிபதி வேட்பாளராக்குவதை போன்ற நிலைமையை அவர் உருவாக்க விரும்புகிறார். அது சாத்தியமா? ஒரு கொசுறு தகவல் மூலம் அதை புரிய வைக்கலாம். அதை இறுதியாக குறிப்பிடுகிறோம்.

கோத்தபாய ராஜபக்சதான் வேட்பாளர் என்ற விருப்பமில்லாத- தவிர்க்க முடியாத- முடிவிற்கு மஹிந்த ராஜபக்ச வந்திருக்கிறார். மைத்திரியை வேட்பாளராக்கவும் அவர் தயாராக இருக்கிறார். ஆனால், அவரது அணிக்குள் அதற்கு துளியும் ஆதரவில்லை. அதனால் அவரால், கோத்பாயவை வேட்பாளராக்கும் முடிவை மீற முடியவில்லை.

கோத்தபாயவை வேட்பாளராக்கலாமென்ற இன்னொரு சமரச திட்டத்துடன், சுகவின் அணியொன்று தீவிரமாக  வேலை செய்தது. அவர்கள் மைத்திரி- மஹிந்த முகாமிற்கு மாறிமாறி ஓடித் திரிந்தார்கள்.

இதன்போது, ஆரம்பத்தில் மைத்திரி ஒரு டீல் போட்டார். அதாவது, கோத்தபாய ஜனாதிபதி என்றால், நான் பிரதமர் என!

அதற்கு அவர் நியாயமான காரணமொன்றையும் சொன்னார்- இம்முறையுடன் நான் ஒதுங்கினால், ஐ.தே.கவினர் என்னை சும்மா விட மாட்டார்கள். வழக்கு மேல் வழக்கு தொடர்ந்து தொல்லைப்படுத்துவார்கள், அதனால் கௌரவமான பதவியொன்று அவசியம் என குறிப்பிட்டார்.

இது, மஹிந்தவை சிக்கல்படுத்தும் விடயம். கோத்தாவோ, மைத்திரியோ ஜனாதிபதியாகிக் கொள்ளலாம், ஆனால் பிரதமர் பதவி எனக்குத்தான் என்பதே அவரது நிலைப்பாடு. அரசியல் அதிகாரத்தை தொடர்வதற்கு, பிரதமர் பதவி தேவையென்பது அவரது நிலைப்பாடு.

இதுதான் ஆரம்பத்தில் கூட்டணிப் பேச்சு சிக்கலானதன் காரணம்.

சரி, முதலில் கூட்டணிணை அமைப்போம்… பின்னர், வேட்பாளரை தீர்மானிப்போம் என இரண்டு தரப்பும் முடிவெடுத்து, கூட்டணி பேச்சை ஆரம்பித்தன. அதிலும், பெரிய சிக்கல்கள்.

புதிய கூட்டணியின் தலைவர் பதவி மஹிந்த ராஜபக்சவிற்கு, செயலாளர் பதவியிலும் பொருத்தமான ஒருவரை நியமிப்போம், இணைத்தலைவராக மைத்திரி இருக்கலாம், தேசிய அமைப்பாளர் பதவியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்பது, பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு.

ஆனால், மைத்திரி தரப்பு- சுதந்திரக்கட்சி- அதற்கு தயாரில்லை. கூட்டணியின் இணைத்தலைவராக மைத்திரி இருப்பதெனில், செயலாளர் பதவியை தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

சுதந்திரக்கட்சியை விட, பொதுஜன பெரமுனவே பலமான கட்சி என, மஹிந்த ராஜபக்ச தரப்பு சொல்கிறது.

இல்லை, ஜனாதிபதி தேர்தலில் தேசிய ரீதியான செல்வாக்கு- சிறுபான்மையினரின் ஆதரவு உள்ளிட்டது- தேவை. அது, பெரமுனவிற்கு இல்லை. சுதந்திரக்கட்சிக்கு மாத்திரமே அது உள்ளது. ஆகவே, நாம் கேட்பது நியாயம்தான் என மைத்திரி தரப்பு விடாப்பிடியாக நிற்கிறது. அதேவேளை, பசில் ராஜபக்ச தேவையற்ற நிபந்தனைகளை விதித்து, கூட்டணி பேச்சை குழப்புகிறார் என மைத்திரி கருதுகிறார். கடந்த சில தினங்களின் முன்னர், இரு தரப்பிற்கும் நெருக்கமானவர்களுடன் பேசும்போது, பசில் குறித்து கடுமையான விமர்சனம் வைத்துள்ளார்.

இரண்டு தரப்பும் சேராத பட்சத்தில், ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைய முடியாது என்ற யதார்த்தம், இரண்டு தரப்பிற்கும் தெரியும்.

இதனால்தான், நேற்று பசில் ராஜபக்ச செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். கூட்டணி உடைந்தால், அந்த பழி தம்மீது விழக்கூடாது என்று பசில் கருதுகிறார். இதனால் நேற்று செய்தியாளர் சந்திப்பு நடத்தி, மைத்திரிக்கு ஒரு “லொக்“ போட முயன்றார். அதாவது, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள், அதை பகிரங்கமாக சொல்ல வேண்டும் என்ற ரீதியில் “லொக்“ போட முயல்கிறார்.

இன்று இரண்டு தரப்பும் மீண்டும் சந்திக்கிறார்கள். இந்த சந்திப்பிற்கு முன்னதாக, நேற்று முன்தினம் திங்கள்கிழமை தயாசிறி ஜயசேகரவுடன், மைத்திரி ஆலோசனை நடத்தினார். தயாசிறிதான், கூட்டணி பேச்சில் சு.க சார்பில் கலந்து கொள்கிறார்.

தமது நிபந்தனைக்கு பெரமுன ஒத்துவராவிட்டால், அங்கு மல்லுக்கட்டிக் கொண்டு நிற்க வேண்டாம். அளவிற்கு மீறி அவர்களிடம் இறங்கி போக வேண்டாம். இல்லையென முரண்டுபிடித்தார்கள் எனில், வந்துவிடுங்கள் என்பதே மைத்திரி கொடுத்த செய்தி!

அதாவது, நாமும் தனிவழி செல்வோம் என்பதை அவர்களிற்கு புரிய வையுங்கள் என்பதே, மைத்திரி கொடுத்த செய்தி.

மைத்திரி தனிவழி செல்ல தயாராகி விட்டார் என்பதை, கடந்த சில தினங்களாகவே தமிழ்பக்கத்தில் சொல்லி வந்தோம்.  சிங்கப்பூரில் இருந்து விசேட புகைப்பட கலைஞர்களை அழைத்து வந்து, புகைப்படம் எடுப்பதை சில நாட்களின் முன்னர் வெளிப்படுத்தியிருந்தோம்.

இன்று நடக்கும் பேச்சுக்கள் எப்படி முடியும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கட்சியே தன்னை ஜனாதிபதி வேட்பாளராக்குவதை போன்ற நிலைமையை உருவாக்க மைத்திரி விரும்புகிறார், அது சாத்தியமா என்பதை இறுதியில் சொல்வதாக, ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். அந்த கொசுறு தகவலை தருகிறோம்.

கடந்த 8ம் திகதி கண்டியில் பொதுஜன பெரமுன கூட்டம் நடந்தது. இதில் சு.கவினர் சிலர் கலந்துகொள்ள முடிவெடுத்திருந்தனர். ஆனால், யாரும் போகக்கூடாது என மைத்திரி தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். மைத்திரியின் முடிவையும் மீறி, எஸ்.பி.திசாநாயக்க அங்கு கலந்துகொள்ள முடிவெடுத்தார். மஹிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்து, அதை சொல்லியுமிருக்கிறார். “பொதுஜன பெரமுனவியே இனி நான் போட்டியிடுவேன். சு.கவிற்கு எதிர்காலம் இல்லை. ஆனால், கண்டி கூட்டத்தி்ற்கு யாரும் போகக்கூடாதென மைத்திரி உத்தரவிட்டுள்ளார். நான் நிச்சயம் கலந்துகொள்வேன்“ என கூறியிருக்கிறர்.

இந்த தகவல் சுற்றிவளைத்து, மைத்திரியின் காதிற்கு வர, கூட்டத்திற்கு முதல்நாள் தொலைபேசியில் எஸ்.பியை அழைத்த மைத்திரி, கூட்டத்திற்கு போகக்கூடாதென கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார். சிறிதுநாள் பொறுத்துக் கொள்ளுங்கள், எல்லாம் சரிவரும் என்றும் ஒரு உத்தரவாதம் கொடுத்தாராம். சு.கவின் கட்டுப்பாடு மைத்திரியிடம் இல்லாத போது, மூத்த தலைவர்களே, கட்சியை விட்டு வெளியேற விரும்பும்போது, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை தீர்மானிக்கும் முடிவை, கட்சிக்குள் எடுக்க வைப்பது மைத்திரிக்கு சுலபமாக இருக்காது என்றுதான் தோன்றுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here