ஐ.நாவில் ரெலோ சமர்ப்பிக்கும் வரைபின் உள்ளடக்கம்: இன்று காலையில் புளொட்டும் கையொப்பமிட்டது!

இலங்கை வெிவகாரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ரெலோ சமர்ப்பிக்கும் வரைபில் புளொட் அமைப்பும் கையொப்பம் இட்டுள்ளது. கையொப்பமிடுவதில்லையென்ற தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, இன்று காலையில் கையொப்பமிட்டுள்ளனர்.

நேற்று இரவே சிவாஜிலிங்கம் இலங்கையிலிருந்து ஜெனீவா நோக்கி விமான பயணத்தை ஆரம்பித்துள்ள போதும், இன்று காலையில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கையொப்பமிட்டு, மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.

இதன்படி, க.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், ஆனந்தசங்கரி, சுரேஷ் பிரேமச்சந்திரன், த.சித்தார்த்தன் என்ற வரிசைப்படி கையொப்பமிடப்பட்டுள்ளது. இதில் செல்வம் அடைக்கலநாதனே முதலில் கையொப்பமிட்டிருந்தாலும், க.வி.விக்னேஸ்வரனிற்கு முதல் கையொப்பத்திற்கான இடத்தை விட்டு, இரண்டாவது வரிசையில் தனது கையொப்பத்தை இட்டார்.

இந்த வரைபில் கையொப்பமிடுவதில்லையென புளொட் ஏற்கனவே தெரிவித்திருந்தது. பின்னர், இன்று கையொப்பமிட்டிருந்தது. இந்த திடீர் மாற்றம் ஏன் என, புளொட் தகவல் மூலங்களில் தமிழ்பக்கம் ஆராய்ந்தது.

ஜெனீவாவிற்கு புறப்படுவதற்கு முன்னர், சிவாஜிலிங்கம் தொலைபேசி வழியாக புளொட் பிரமுகர்கள் பலரை தொடர்புகொண்டு, கையெழுத்திடுமாறு வற்புறுத்தி கேட்டுள்ளார். எனினும், ரெலோ தரப்பில் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பதாக புளொட் குறிப்பிட்டதாகவும், அதற்கு சிவாஜிலிங்கம் சம்மதித்ததையடுத்து, அந்த திருத்தங்களின்படி இன்று காலையில் கையெழுத்திட்டு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

தற்போதைய நிலவரப்படி, ரெலோ தரப்பால் சமர்ப்பிக்கப்படும் இறுதி ஆவணத்தில்-

ஐ.நாவின் விசேட கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அவர் 6 மாதங்களிற்கு ஒருமுறை கண்காணிப்பு அறிக்கையை ஐ.நாவிற்கு சமர்ப்பித்து, இலங்கை ஒப்புக்கொண்டவற்றை நிறைவேற்றுகிறதா என்ற முன்னேற்ற விடயங்கள் ஆராயப்பட வேண்டும்.

30/1, 34/1 தீர்மானங்களை நிறைவேற்ற காலஅட்டவணை உருவாக்கப்பட வேண்டும். அந்த காலஅட்டவணையில் இலங்கை அவற்றை நிறைவேற்றாவிட்டால், இந்த விவகாரம் ஐ.நா பாதுகாப்புசபைக்கும், குற்றவியல் நீதிமன்றத்திற்கும் பாரப்படுத்தப்பட வேண்டும் என்ற அம்சங்களே இதில் முக்கிய உள்ளடங்கங்களாக உள்ளன.

இதேவேளை, ரெலோவின் இந்த வரைபில் ஜெனீவாவில் தங்கியிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று கையெழுத்திடுவார் என சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here