மாகாணசபை to மாநகரசபை மேயர்… சக்ஸஸாக்கிய ஒப்ரேசன் ஜெயசேகரம்!

ஆனோல்ட்டை மேயராக்கிய சுமந்திரனின் ஒப்ரேசனின் முழு விபரம்!

சில வார இழுபறியின் பின், யாழ் மாநகரசபை மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆனோல்ட் தெரிவாகிவிட்டார். சிலர் எதிர்பார்த்த, பலர் எதிர்பாராத முடிவிது. ஆனோல்ட்டிற்கு ஈ.பி.டிபிக்குள் எதிர்ப்பு, கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு, கரடியே காறித்துப்பியது என சமூக ஊடகங்களில் எதிர்ப்பு, உள்ளூர் மக்களிடம் எதிர்ப்பு என பலவித கருத்துக்கள் இருந்தபோதும் ஆனோல்ட் மேயராகி விட்டார்.

அது எப்படி?

ஆனோல்டின் திறமையா?, தமிழரசுக்கட்சியின் செல்வாக்கா?, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கூட்டணியா?

இல்லை. இவையெதுவும் ஆனோல்ட்டை மேயராக்கவில்லை. ஆனோல்ட் மேயரானது- சுமந்திரன் என்ற தனிமனிதனால்!
இதை பேஸ்புக்கில் கூவும் தமிழரசுக்கட்சியின் விசிலடிச்சான் குஞ்சுகளிற்கு கூட நம்ப சிரமமாக இருக்கும். தனியொருவர்தான் ஆனோல்ட்டின் வெற்றிக்கு காரணமா? அப்படியென்றால் கட்சி, ஆதரவாளர்கள் எல்லாம் சும்மாவா என்று எகிறுவார்கள்.

ஆம், ஆனோல்ட் விசயத்தில் அப்படித்தான் நடந்தது.
ஆனோல்ட் எப்படி மேயரானார்?
அதற்கு பதில் தெரிவதற்கு, 2015 ஆம் ஆண்டிற்கு போக வேண்டும்.

2015 இன் ஆரம்பம். வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொஞ்சம் கட்சி பிடியை விட்டு எகிற தொடங்கினார். விக்னேஸ்வரனை கட்டுப்படுத்த கட்சிக்குள் சிலபல முயற்சிகள் செய்து பார்த்தார்கள். கட்சிக்குள் இருந்த மூத்தவர்களால் ஒன்றும் முடியவில்லை. கட்சிக்குள் இருந்த மூத்தவர்கள் அவ்வளவு ஜனவசியம் மிக்கவர்களாகவும் இருக்கவில்லை. முதலமைச்சரின் பின்னால் ஒட்டிக்கொண்டு நிற்பவர்களாகத்தான் இருந்தார்களே தவிர, தனித்து ஓடுபவர்களாக தெரியவில்லை.

இந்த சமயத்தில்தான் எம்.ஏ.சுமந்திரன் அரங்கிற்கு வந்தார். மாகாணசபைக்குள் உள்ள நம்மவர்களை வைத்தே ஏதாவது தலைவலி கொடுத்தால் என்ன என்று யோசித்தார். ஆனால் அதற்கு பொருத்தமானவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

இந்த சமயத்தில்தான் பாராளுமன்ற தேர்தலும் வந்தது. சுமந்திரன் துரோகி என இப்போதுள்ளதை போல அப்போதும் ஒரு சாரர் சொன்னார்கள். சுமந்திரனின் வாசம் வந்தாலே கட்சிக்காரர்கள் அப்போது பின்கதவால் தப்பியோடினார்கள். சுமந்திரனின் சகவாசம் இருந்தாலே ஆள் காலியென நினைத்தார்கள். அப்பொழுது சில மாகாணசபை உறுப்பினர்கள் சுமந்திரனிற்காக தயங்கி தயங்கி வேலை செய்தார்கள். அவர்களில் ஒருவர்தான்- இமானுவேல் ஆனோல்ட்.

ஏற்கனவே மாகாணசபை ஒப்ரேசனிற்காக மெல்லமெல்ல ஏற்படுத்திய அறிமுகம், அவரை பாராளுமன்ற தேர்தலில் பணியாற்ற வைத்தது.
யாரும் யாரையும் சும்மா ஆதரிப்பார்களா?
இதென்ன விடுதலை போராட்டமா? உள்ளம், உடல், பொருள், ஆவியனைத்தையும் ஈந்து போராட?

தன்னுடன் நின்ற உறுப்பினர்களிற்கு சிலபல சலுகைகளை சுமந்திரன் பெற்றுக்கொடுத்தது ஒன்றும் பரகசியமல்ல. அதில் முக்கியமானது, வெளிநாட்டு சுற்றுலா.

தமிழரசுக்கட்சியின் நிதிமூலமாக கனடாவிற்கு சென்று வந்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்களின் பட்டியலை ஒருமுறை கவனித்தால், நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பது புரியும்.

மாகாணசபை உறுப்பினர்களிற்குள் சுமந்திரனின் அதிக நம்பிக்கைக்கு பாத்திரமானவர் ஆனோல்ட். தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவரை யாழ் மேயராக்குவதென சுமந்திரன் மனதிற்குள் நீண்டகாலத்திற்கு முன்னரே முடிவெடுத்து விட்டார்.
அதை விளையாட்டாக ஆனோல்ட்டிடம் இரண்டு வருடங்களின் முன்னர் சொல்லியுமிருந்தார்.
உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதும், யார் மாநகரசபை மேயர் வேட்பாளர் என்ற விவாதம் ஏற்பட்டது. அப்பொழுது ஆனோல்ட் பல முறை சுமந்திரனின் மனதை அறிய முயன்றார். சுமந்திரனின் உதவியாளர்கள் மூலமும் நகைச்சுவையாக பேசி, அவரது மனதை அறிய முயன்றார். ஆனால் சுமந்திரன் இலகுவில் பிடிகொடுக்கவில்லை.

தமிழரசுக்கட்சிக்குள்ளேயே இன்னும் இரண்டு பேர் மேயர் வேட்பாளர்களாக வாக்களிக்கப்பட்டிருந்தனர். ஒருவர் ஜெயசேகரம். எழுக தமிழ் நேரம் கதவடைப்பை பிசுபிசுக்க வைக்க முயன்ற சமயத்தில், மாநகரசபை மேயர் வேட்பாளர் வாக்குறுதி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

மற்றவர்- சொலமன் சிறில். கடந்த மாகாணசபை தேர்தல் சமயத்தில் அவருக்கு ஆசனம் வழங்கப்படாமல், மேயர் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு வாக்குறுதியையும் வழங்கியவர் மாவை சேனாதிராசா!

தமிழரசுக்கட்சியின் தலைவர் வழங்கிய இரண்டு வாக்குறுதியை மீறி, ஆனோல்ட்டை மேயராக்குவதில் சுமந்திரன் அதிக சிரமப்படவில்லை.

தமிழரசுக்கட்சிக்குள்ளேயே புத்திசாலித்தனமாக, திட்டமிட்டு, நுணுக்கமாக காய்நகர்த்தவல்ல ஒரே மூத்த தலைவர் என்பதால், சுலபமாக ஆனோல்ட்டை முதல்வர் கதிரைக்கு அழைத்து வந்தார்.
அதை சுமந்திரன் செயற்படுத்திய விதம்தான் அலாதியானது. மற்றைய அரசியல் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது.

முதலில், ஆனோல்ட்தான் மேயர் வேட்பாளர் என்ற செய்தியை கசிய விட்டார். இந்த செய்தியை கசிய விட்டபோது, ஆனோல்ட்டிடம் விசயத்தை சொல்லியிருக்கவேயில்லை.

இது சர்ச்சையானபோது, தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டப்பட்டது. அப்போது, வெட்டு ஒன்று துண்டு இரண்டாக சுமந்திரன் சொன்னது- நான் அவருக்கு வாக்களித்து விட்டேன். அதை மீற முடியாது என.

சுமந்திரனின் முடிவில் மாவைக்கு மட்டும் அதிருப்தியிருந்தது. அதை சமாளிக்க சுமந்திரன் வித்தியாசமான பாணியை கையாண்டார். மாவையுடன் பேசி விசயத்தை சிக்கலாக்காமல், ஜெயசேகரத்துடன் பேசி சமரசப்படுத்தினார்.
அடுத்து சிறில்.

சிறிலை வித்தியாசமான கையாண்டார். சிறிலுடன் சுமந்திரன் தனிப்பட்ட பேச்சுவார்த்தை வைக்கவில்லை. காரணம், சிறிலின் பின்னால் சிறிதரன் இருந்தார். சிறிலை அழைத்து சென்று சம்பந்தனிடமும் பேச வைத்தார்.

நல்லூரில் நடக்கவிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகம் தள்ளிவைக்கப்பட்டது. காரணம்- சிறில், ஆனோல்ட் உள்மோதல்.
ஆனோல்ட்டின் மதம், சமூகம் எல்லாம் தேர்தலில் தாக்கம் செலுத்துவதாக இருந்தது. இந்து, வெள்ளாள பின்னணியுடையவர்கள்தான் யாழ் மாநகரசபை மேயராக வேண்டுமென தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் கூட நினைத்தார்கள்… நினைக்கிறார்கள். இப்படி பல சவாலை கடந்துதான் தேர்தலில் ஆனோல்ட் போட்டியிட்டார்.

கட்சிக்குள் சிக்கலை கடந்தால், ஆனோல்ட்டிற்கு அடுத்த சிக்கல் மச்சானின் வடிவத்தில் வந்தது. அது ரெமீடியஸ். ஈ.பி.டி.பியின் மேயர் வேட்பாளர். ஒரு உறைக்குள் இரண்டு வாள் இருக்க முடியாதல்லவா. பரஸ்பரம் ஒருவரையொருவர் தோற்கடிக்க இருவரும் கடும் முயற்சி செய்தனர். காரணம், இருவரில் ஒருவரின் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பிருந்தது. வெல்பவர் மேயரானால், மற்றவரின் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடும்.

தேர்தல் முடிவு வெளியாகும் வரை ஆனோல்ட் பதற்றத்துடன், வெற்றியில் முழுமையான நம்பிக்கையில்லாமல்தான் இருந்தார். ஆனோல்ட் அளவு அவநம்பிக்கை இல்லாவிட்டாலும், சுமந்திரனும் கொஞ்சம் பதற்றத்துடன் இருந்தார். ஆனால் தேர்தலில் ஆனோல்ட் வென்றார்.

ஆனால் அடுத்த சிக்கல்- த.தே.கூ, த.தே.ம.மு, ஈ.பி.டி.பி மூன்றும் நெருக்கமான எண்ணிக்கையில் ஆசனத்தை பெற்றிருந்தன. வடக்கு கிழக்கில் கணிசமானவை தொங்கு சபைகளானதும், தேர்தல் முடிவு வெளியானதும், டக்ளஸ் தேவானந்தாவிற்கு தொலைபேசி அழைப்பை எடுத்து சுமந்திரன் பேச்சு நடத்தினார். இதன்போதே அதிக ஆசனம் வென்ற கட்சிஆட்சியமைப்பதென்ற முன்மொழிவை வைத்தார்.

சுமந்திரன் தொலைபேசியில் டக்ளசுடன் பேசியது, கட்சிக்குள் கலந்து பேசி முடிவுசெய்ததல்ல. அதனால், ஆனோல்ட்டை முதல்வராக்க என்ன லெவலுக்கும் அவர் இறங்குவார் என்ற விமர்சனமும் எழுந்தது.
இதற்கு பின்னர் சில வாரங்கள் எல்லாம் அமைதியாக இருந்தன.

யாழ் மாநகரசபை மேயர் தெரிவுக்கு சில நாட்கள் இருந்தபோது, சுமந்திரன் அமெரிக்காவில் நின்றார். யாழில் இருந்த மாவை உள்ளிட்ட மற்ற கட்சி பிரமுகர்களிற்கு, மாநகரசபை விசயத்தில் என்ன முடிவெடுப்பதென தெரியவில்லை. ஏற்கனவே, டக்ளசுடனும், பிள்ளையானுடனும் பேச வேண்டாமென சம்பந்தன் கூறியிருந்தார்.

23ம் திகதி கொழும்பு வந்ததும், டக்ளஸ் தேவானந்தாவிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி, ஆனோல்ட்டை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். ஆனோல்ட்டை ஆதரிப்பதில் டக்ளசிற்கு பிரச்சினையிருக்கவில்லை. இன்னொரு விதத்தில் சொன்னால், ஆனோல்ட்டை ஆதரிப்பதை தவிர டக்ளசிற்கு வேறு வழியில்லை. காரணம், த.தே.ம.முன்னணியை ஆட்சியமைக்க விட்டு, இரண்டாவது சக்தியாக வளரவிட்டால் தமது இருப்பு காலியாகிவிடும் என்று நினைத்தார்கள்.
ஆனால் முடியப்பு ரெமீடியஸ், யோகேஸ்வரி ஆகியோர் அதை எதிர்த்தனர். இந்த நிலைமைமை சுமந்திரனிடம் புரிய வைத்தார் டக்ளஸ். இந்த சமயத்தில், “ஒப்ரேசன் ஜெயசேகரத்தை“ கையிலெடுத்தார் சுமந்திரன்!

அதாவது ஜெயசேகரத்தை சமாளிக்க கையாண்ட அதே போர்முலா. டக்ளசின் கட்சி பேச்சாளர் ரெமீடியசை மறுநாள் 24ம் திகதி யாழில் சந்தித்து பேசினார் சுமந்திரன். இதன்போது சிலபல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

இந்த சந்திப்பு விசயங்கள் எதுவுமே மாவை சேனாதிராசாவிற்கு தெரியாது என்பதுதான் கவனிக்கத்தக்க விசயம். சத்தமில்லாமல் ஆனோல்ட்டிற்கான ரூட்டை கிளியர் பண்ணுவதிலேயே குறியாக இருந்தார். இந்த சந்திப்பில் ரெமீடியஸ் சொன்ன விசயம்- எதுவென்றாலும் நீங்கள் பகிரங்கமாக கேட்க வேண்டும். இப்படி திரைமறைவில் ஆதரவு கேட்க முடியாது என.

இதையடுத்து 25ம் திகதி காலையில் மாரட்டின் வீதி அலுவலகத்தில் மாவை சேனாதிராசாவை சந்தித்தார் சுமந்திரன். அப்பொழுது, டக்ளசுடன் பேசுமாறு சுமந்திரன் சொன்னார். ஈ.பி.டி.பியிடம் உத்தியோகபூர்வமாக உதவி கேட்பதாக காட்டவே இந்த ஏற்பாடு.

அந்த சமயத்தில் டக்ளஸ் தேவானந்தா உறக்கத்தில் இருந்தார். அதனால் அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து சித்தார்த்தனும் மாவையுடன் பேசிவிட்டு, டக்ளசிற்கு அழைப்பேற்படுத்தினார். அதற்கும் பதிலில்லை.

மாலையில் இரண்டு பேரிற்கும் டக்ளசே அழைப்பேற்படுத்தினார். இந்த சமயத்திலேயே, நாம் நேற்று குறிப்பிட்ட- பிரபாகரனிற்கே பயப்பிடாத நான், ஆனோல்ட்டிற்கு பயப்பிடுவேனா என டக்ளஸ் கேட்டிருந்தார்.

நேற்று இரவு ஈ.பி.டி.பியின் பிரமுகர்கள் கூடி ஆராய்ந்தும் முடிவொன்றும் எட்டப்படவில்லை. இரவே விசயத்தை சுமந்திரனிடம் தெரிவித்துவிட்டார் டக்ளஸ். இதன்போதே, ஈ.பி.டி.பி தனித்து போட்டியிடும் திட்டம் உருவானது. ஈ.பி.டி.பி தனித்து போட்டியிட்டால் சுலபமான ஆனோல்ட் வெற்றிபெறலாமென்பதுடன், ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் மேயரானாரென்ற அவப்பெயர் உருவாகாது என கணக்கு போட்டனர்.
ஈ.பி.டி.பியின் ரெமீடியஸ் விடாப்பிடியாக நின்று, ஆனோல்ட்டை எதிர்க்க வேண்டுமென வலியுறுத்தினார். அவரை சமரசப்படுத்த டக்ளஸால் முக்கியஸ்தர் ஒருவர் அமர்த்தப்பட்டிருந்தார். அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. இதன்பின்னர்தான், ரெமீடியசிற்கு போக்குகாட்டும் முடிவை டக்ளஸ் எடுத்தார்.

ரெமீடியசுடன் ஓடுவது போல காட்டி, ஆனோல்ட்டை வெற்றியடைய வைக்கும் திட்டத்தை கச்சிதமாக செய்தார். ஆனால் இது டக்ளஸ் உருவாக்கிய ஸ்கிரிப்ற் அல்ல. அனைத்தமே சுமந்திரன்தான்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சொந்த கட்சியின் ஒரு பகுதியினர், கணிசமான மக்கள், சமூக ஊடகத்தில் பெரும்பகுதி எதிர்த்தபோதும், நுணுக்கமான காய் நகர்த்தலின் மூலம், தனது விசுவாசியொருவரை மேயராக்கி விட்டார் சுமந்திரன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here