சொந்த நாட்டில் இந்தியாவிற்கு உதை: தொடரை வென்றது அவுஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரையும் 3-2 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

டில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று (13) நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய இந்தியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 237 ரன்களுக்கு வீழ்ந்தது.

அவுஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக உஸ்மான் காஜா 100 ரன்கள் விளாசினார். இந்தியத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய இன்னிங்ஸில் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் அடம் ஸம்பா 3 விக்கெட்டுகள் சாய்த்திருந்தார்.

இந்த ஆட்டத்தில் இரு அணிகளிலுமே மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்தியாவில் யுவேந்திர சாஹலுக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜாவும், லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக முகமது ஷமியும் சேர்க்கப்பட்டிருந்தனர். அவுஸ்திரேலிய அணியில் ஷோன் மார்ஷுக்குப் பதிலாக மார்கஸ் ஸ்டாய்னிஸும், ஜேசன் பெஹ்ரென்டார்ஃபுக்குப் பதிலாக நதன் லயனும் அணியில் இணைந்திருந்தனர்.

முன்னதாக, ரொஸ் வென்ற அவுஸ்திரேலியா முதலில் ஆட தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, கப்டன் எரோன் ஃபிஞ்ச் களமிறங்கினர். இதில் ஃபிஞ்ச் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் அதிரடியாக ஆட, அவுஸ்திரேலியா ஸ்கோர் உயர்ந்தது. கவாஜா 102 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட சதமடித்தார். அந்த ரன்களுடனேயே அவர் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார்.

அடுத்து வந்த கிளென் மக்ஸ்வெல் ஒரு ரன்னுக்கு வெளியேற்றப்பட்டார். மறுமுனையில் 4 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்திருந்த பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 52 ரன்களுக்கு அவுட்டானார்.
பின்னர் வந்தவர்களில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 20, ஆஷ்டன் டர்னர் 20, அலெக்ஸ் கேரி 3, ரிச்சர்ட்சன் 29, பட்ரிக் கம்மின்ஸ் 15 ரன்களில் வெளியேற, கடைசியாக நதன் லயன் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 3, ஜடேஜா 2, முகமது ஷமி 2, குல்தீப் யாதவ் 1 விக்கெட் சாய்த்தனர்.

பின்னர் 273 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் ரோஹித் சர்மா மட்டும் 4 பவுண்டரிகள் உள்பட 56 ரன்கள் அடித்தார். அடுத்தபடியாக புவனேஷ்வர் குமார் 46 (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்), கேதார் ஜாதவ் 44 (4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) ரன்கள் அடித்தனர்.

தவன் 12, கோலி 20, ரிஷப் பந்த் 16, விஜய் சங்கர் 16, ஷமி 3, குல்தீப் 8 ரன்களுக்கு வெளியேற, ஜடேஜா டக் அவுட்டானார். பும்ரா ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார்.
அவுஸ்திரேலிய தரப்பில் அடம் ஸம்பா 3, பட்ரிக், ரிச்சர்ட்சன், ஸ்டாய்னிஸ் தலா 2, நதன் லயன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன், தொடர் நாயகன்-உஸ்மான் கவாஜா.

ரோஹித் 8000

இந்த ஆட்டத்தில் 56 ரன்கள் எடுத்த இந்திய அணியின் துணை கப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8010 ரன்களை தொட்டுள்ளார். அவர் தனது 206ஆவது ஒருநாள் போட்டியில் எட்டியுள்ளார்.

இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேக 8000 ரன்கள் அடித்த 3ஆவது வீரர் என்ற பெருமையை முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்தப் பட்டியலில், விராட் கோலி முதலிடத்திலும் (175 இன்னிங்ஸ்கள்), தென்னாப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் 2ஆவது இடத்திலும் (182) உள்ளனர்.

 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் அவுஸ்திரேலியா வென்றுள்ள முதல் ஒருநாள் தொடர் இதுவாகும். அதேபோல், ஒரு தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியிருந்து, பிறகு அந்தத் தொடரை ஒரு அணி கைப்பற்றுவது இது 5ஆவது நிழ்வாகும்.

 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் தொடரை இந்தியா இழப்பது இது முதல் முறையாகும். அந்த ஆண்டில் தென்னாபிரிக்காவிடம் தொடரை இழந்த இந்தியா, அதன் பிறகான தொடர்களில் வெற்றிநடை போட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

 இந்திய அணி, ஒருநாள் தொடரில் 2-0 என்ற முன்னிலையில் இருந்த பிறகும் இவ்வாறு தொடரை இழப்பது இது 2ஆவது முறையாகும். உலகளவில் இவ்வாறு 2ஆவது முறையாக ஒருநாள் தொடரை இழந்துள்ள ஒரே அணி இந்தியா ஆகும்.

 ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கடந்த 37 ஆண்டுகளில் 250 ரன்களுக்கு கூடுதலான இலக்குகளை இந்தியா எட்டியதில்லை. கடைசியாக 1982ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 278 ரன்களை சேஸ் செய்து வென்றது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here