Exclusive: முஸ்லிம் ஜிகாத் ஆயுதக்குழுவால் உயிராபத்து:ஹக்கீம், ரிசாட் மேலதிக பாதுகாப்பை கோரினர்!

அண்மையில் இடம்பெற்ற புத்தர்சிலை உடைப்புக்களின் பின்னர், சிஐடியினர் நடத்திய விசாரணைகளில் இரகசியமாக இயங்கிய முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் பற்றிய சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருந்தன. புத்தளம் வணாத்துவில்லு பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில், வெடிபொருள்களுடன் குழுவொன்று கைதானது.

முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்களில் இணையும் இளைஞர்கள், ஆயுதப்பயிற்சி பெற்று, ஆயுதக்குழுக்களாக இயங்குவது பற்றிய தகவல்கள் அரசல்புரசலாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த தகவல்களை முஸ்லிம் சமூகமே- அதன் தலைவர்களே, இதுவரை உறுதிப்படுத்தியதில்லை. அந்த இயக்கங்களால் இதுவரை முஸ்லிம் தலைவர்கள் குறிவைக்கப்பட்டிருக்கவில்லை.

இதுவரை, இதுதான் நிலவரம்.

இப்போது, அந்த நிலைமை மாறிவிட்டது. முஸ்லிம் சமூகத்தில் உள்ள இரண்டு வெகுஜன கவர்ச்சிமிக்க தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன் ஆகிய இரண்டு தலைவர்களும், தமது சொந்த சமூகத்தின் அடிப்படைவாத இயக்கங்களால் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இதை நாம் சொல்லவில்லை. அந்த தலைவர்களே சொல்லியிருக்கிறார்கள். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் இருவரும், தமக்கு ஜிகாத் அடிப்படைவாத இயக்கத்தால் உயிராபத்து உள்ளதென பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளனர் என்ற தகவலை நம்பிக்கையான மூலங்களில் இருந்து தமிழ்பக்கம் பெற்றுள்ளது.

மாவனெல்ல பகுதியில் கடந்த 9ம் திகதி அதிகாலை ஒரு துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தது. அமைச்சர் கபீர் ஹாசிமின் இணைப்புச் செயலாளர் மொஹமட் ரஸாக் தஸ்லீம் என்பவர் மீதே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. அதில் அவர் படுகாயமடைந்து, கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாவனெல்ல பகுதியில் கடந்த சில மாதங்களின் முன்னர் இடம்பெற்ற புத்தர்சிலை உடைப்பு தொடர்பான பல தகவல்களை, சிஐடியினருக்கு இவர்தான் வழங்கியிருக்கிறார். இவரது தகவல்களின் உதவியுடன்தான், சிஐடியினர் பலரை கைது செய்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம் ஜிகாத் ஆயுதக்குழுவே இந்த தாக்குதலை நடத்தியதாக, பொலிஸ் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பின்னணியில், நேற்று பொலிஸ் தலைமையகத்திற்கு மு.க தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா தலைவர் ரிசாட் பதியுதீன் இருவரும் ஒன்றாக சென்றனர். அவர்களின் சட்டத்தரணிகளும் கூடவே சென்றிருந்தனர்.

முஸ்லிம் அடிப்படையவாத ஜிகாத் குழுவால் தமது உயிருக்கு ஆபத்துள்ளது என்றும், அதனால் தமக்கு மேலதிக விசேட அதிரப்படை பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் எழுத்துமூலம் விண்ணப்பித்துள்ளனர் என்ற தகவலை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. அத்துடன், ஜிகாத் ஆயுதக்குழு தொடர்பில் சிஐடியினரிமும் முறையிட்டுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here