EXCLUSIVE: ஐ.நா விவகாரத்தில் மைத்திரி- ரணில் மோதலை சமரசப்படுத்திய தமிழரசுக்கட்சி… ஜெனீவா சுபம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்தை எதிர்க்கக்கூடாது என ஜனாதிபதியை சந்தித்து இலங்கை தமிழ் அரசுக்கட்சி வேண்டுகோள் விடுத்தது.

நேற்று (12) நாடாளுமன்றத்திற்கு ஜனாதிபதி வந்தபோது, தமிழரசுக்கட்சி அவரை சந்தித்து, இந்த வேண்டுகோளை விடுத்தது.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர். இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக  செயற்பட்டு வரும் மேற்படி தலைவர்கள், அந்த நிலைப்பாட்டை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களையும் வளைத்திருந்தார்கள்.

எனினும், இலங்கை தனது பிரச்சனையை தானே கையாளுமென்ற நிலைப்பாட்டை எடுத்த ஜனாதிபதி, தனது சார்பில் பிரதிநிதிகளையும் அனுப்ப தீர்மானித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதியை, தமிழரசுக்கட்சியின் மூன்று பிரமுகர்களும் சந்தித்து பேசினர். இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் ஐ.நா தீர்மானத்தை எதிர்க்கக்கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்த தகவல்களை ஜனாதிபதி தெரிந்து கொள்ளாமல் இருந்ததை அவதானிக்க முடிந்ததாக, சந்திப்பில் கலந்து கொண்ட மூத்த தமிழரசுக்கட்சி தலைவர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார். ஜனாதிபதியுடன் முட்டிமோதி செயற்பட்டு, ஜெனீவா விவகாரம் தொடர்பாக எந்த தகவலையும் ஐ.தே.க அரசு பகிராமல் செயற்பட்டதால் ஜனாதிபதி எந்த தகவலையும் அறிந்து கொள்ள முடியாமல் போயுள்ளது. ஐ.தே.கவின் நடவடிக்கை தவறானதென்பதை தமிழரசுக்கட்சியும் ஏற்றுக்கொண்டது.

இதன்பின்னர், இந்த விவகாரத்தில் இணக்கப்பாடு ஏற்படுத்தும் முயற்சியில் தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டனர்.

இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் குறித்து- மேற்கு நாடுகள், அரசு, தமிழரசுக்கட்சி இணைந்து எப்படியான தீர்மானத்தை உருவாக்கியிருக்கிறது என்பதை- ஜனாதிபதி அறியாமல் இருந்துள்ளார். நேற்றைய சந்திப்பிலேயே, அதை தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் விளக்கினார்கள்.

சில நாட்களின் முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையா நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என ஜனாதிபதி கேள்வியெழுப்பியதாகவும், இலங்கை ஏற்கனவே வாக்களித்தவற்றை நிறைவேற்றுவதாக மீண்டும் வாக்களித்தாலே போதுமென்றும் தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் சமரசம் செய்தனர் செய்தனர் என்று வேறு நம்பகரமான மூலங்களில் இருந்து தமிழ்பக்கம் அறிந்தது.

புதிய தீர்மானம் குறித்து, எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்தார்.

சில திருத்தங்களுடன் அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லையென ஜனாதிபதி குறிப்பிட்டார். ஜனாதிபதியின் பிரதிநிதிகளும், அரசின் பிரதிநிதிகளும் இணைந்து, மனித உரிமைகள் பேரவைக்கு செல்வதென இந்த சந்திப்பில் முடிவாகியது. ஐ.நாவின் புதிய தீர்மானத்தில் சில திருத்தங்களை ஜனாதிபதியின் பிரமுகர்கள் கோருவதில் தமக்கு எந்த ஆட்சேபணையுமில்லையென தமிழரசுக்கட்சியினர் தெரிவித்தனர்.

இதன்பின்னர், வெளிவிவகார அமைச்சரை அழைத்து, ஜெனீவா விவகாரம் குறித்து தனக்கு ஏன் எதையும் தெரியப்படுத்தவில்லையென ஜனாதிபதி கடுமையாக கண்டித்துள்ளார்.

இதன்பின்னரே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில்  வெளிவிவகார ​அமைச்சர் திலக் மாரப்பன, கலாநிதி சரத் அமுனுகம, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஏ.நெரின் புள்ளே ஆகியோர் அடங்கிய குழு செல்வதென தீர்மானமாகியது.

அத்துடன், இனிவரும் காலத்தில் ஐ.நா மனித உரிமைகள் விவகாரத்தில் எந்த தீர்மானம் எடுத்தாலும், தனக்கு தெரியாமல் எடுக்கக்கூடாதென பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருக்கு கடுமையான உத்தரவிட்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here