மட்டக்களப்பில் புதிதாக உருவாகும் முஸ்லிம் பிரதேசசபை… கல்முனைக்கு மட்டும் வேறு நியாயம்!

©தமிழ்பக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிலவற்றிலிருந்து நிலப்பரப்பை பிரித்தெடுத்து புதிய பிரதேச செயலாளர் பிரிவொன்றை அமைக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று வடக்கு- வாகரை கோறளைப்பற்று தெற்கு- கிரான். கோறளைப்பற்று- வாழைச்சேனை ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய நிலப்பரப்பை பிரித்து புதிதாக ஒரு கோறளைப்பற்று மத்தி பிரதேசசபையினை உருவாக்கும் முயற்சியில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அதன் பின்புலத்தில் உள்ள அமைப்புக்களும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.

அதன் ஒரு அங்கமாக அன்மையில் திருகோணமலைக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதியினை சந்தித்த, குறித்த அமைப்புக்கள் முஸ்லிம் சமூகம் நில பங்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிப்புக்களை எதிர் கொண்டு வருவதாகவும், குறுகிய நிலப்பரப்பில் அதிகளவாக சனத்தொகையினர் வாழ்ந்து வருவதாகவும், அதனால் தமக்குரிய உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டி தமக்கென தனியான ஒரு பிரதேசசபையினை உருவாக்கி தருவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப்பிரிவுக்கான சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்கான சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கான ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவும் புதிதாக உருவாக்க திட்டமிடப்படும் பிரதேசசபையின் எல்லைக்குள் செல்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. விவசாய நிலங்கள் மற்றும் வனவள காணிகள் மற்றும் குளங்கள் என்பன குறித்த பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் அபாயமுள்ளது.

ஆரம்ப காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பிரதேச செயலகப்பிரிவுகளாக இயங்கிவந்த வேளையில், 2002ம் ஆண்டு காலப்பகுதியில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கோறளைப்பற்று மத்தி முஸ்லிம் பிரிவு பிரதேச செயலகமும், கோறளைப்பற்று தெற்கு கிரான் தமிழ் பிரதேச செயலகமும் உருவாக்கப்பட்டன. இதில் கிரான் பிரதேச செயலகம் மாத்திரமே அதிகளவான நிலப்பரப்பை கொண்டு அமைந்துள்ள பிரதேசம்.

குறித்த இரண்டு பிரதேச செயலகங்களும் உருவாக்கப்பட்டாலும் இவற்றிற்கு பிரதேச சபையாக காணப்படுவது வாழைச்சேனை பிரதேசசபையே.

புதிய பிரதேச செயலகங்களிற்கான எல்லைகள் இன்றுவரை சரியாக வரையறுக்கப்படவில்லை. கோறளைப்பற்று வாகரை பிரதேசசபைக்கான எல்லையில் உள்ள கிராமங்களின் நிர்வாகம் மற்றும் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக எல்லையில் உள்ள கிராமங்களின் நிர்வாகங்களை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் தற்போது வரைக்கும் கையாண்டு வருகிறது. இதுவரை எந்த தமிழ் அரசியல் தலைமைகளும் சுட்டிக்காட்டியதும் இல்லை, வாய் திறந்து பேசியதுமில்லை. அதைப்பற்றி அறிந்திருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. இவர்களின் மெத்தனத்தால், தமிழ் எல்லை கிராமங்கள் பாதுகாக்கப்பட முடியாமல், முஸ்லிம் பிரதேச எல்லைக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்படி விழுங்கப்படும் தமிழ் பாரம்பரிய நிலங்கள், இறுதியில் தமிழர்களின் அடையாளங்களை இழந்து, கல்முனை பிரதேச செயலகத்திற்கு நேர்ந்த கதியைத்தான் அடையும்.

கடந்த காலங்களில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்கு சொந்தமான சில காணிகளை முறையற்ற விதத்தில் அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்து கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் கையாண்டது கணக்காய்வு திணைக்கள அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டது. நாடாளுமன்ற கோப் குழு விசாரணை வரை இந்த விடயம் சென்றுள்ளது.

கோறளைப்பற்று மத்திக்கு மாத்திரம் தனியான- புதிய பிரதேசசபையை அமைக்க முஸ்லிம் தலைமைகள் முயற்சி எடுப்பது போல், பெரும்பான்மை நிலப்பரப்பை கொண்ட கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசசபைக்கான தனி ஒரு பிரதேச சபையினை உருவாக்கும் முயற்சியினை இதுவரை அரசுக்கு ஆதரவு கொடுக்கும் தமிழ் தலைமைகள் உருவாக்க முயற்சி மேற்கொள்ளவில்லை.

கிரான் பிரதேச செயலகப் பிரிவானது இயற்கை வளங்கள் நிறைந்தது. வனவளம், விவசாயத்திற்கான நிலத்தை கொண்டது. போராட்ட காலத்தில் விடுதலைப்புலிகளின் கேந்திர நிலையமாக காணப்பட்ட பிரதேசத்தில் இன்று இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. கட்டுப்படுத்த முடியாமல் காடுகள் வெட்டப்படுகிறது, மணல் அகழப்படுகிறது. எல்லைப்பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்கள் திட்டமிட்டு மேற் கொள்ளப்படுகிறது.

தமிழ் பாரம்பரிய பிரதேசத்தை அழிந்து போக அனுமதித்துவிட்டு, அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் தமிழ் தலைமைகள் எதிர்கால சந்ததிக்கு விட்டு வைக்கப்போவது எதனை?

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here