பிரிட்டன்- ஜேர்மனி கூட்டு தீர்மானம்: இலங்கைக்கு மேலும் 2 வருட காலஅவகாசம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, பிரிட்டனும் ஜேர்மனியும் இணைந்து புதிய தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளன. இந்த தீர்மானம் நேற்று முன்தினம முன்வைக்கப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு கனடா,அயர்லாந்து, மொன்டினிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்“ என்ற தலைப்பில் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு அமைய, 2015ம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த, இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43வது கூட்டத் தொடரில், 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் விரிவான அறிக்கை ஒன்று 2012 மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பில், மனித உரிமைகள் பேரவையில் விவாதம் நடத்தப்படும் என்றும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளிற் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, 30/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ளது. ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஏ.எல்.ஏ.அலீஸ் கையொப்பமிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு தெரியாமல், பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரின் ஆலோசனையின் பெயரில், தூதர் கையொப்பமிட்டது இலங்கை அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளதை நேற்று குறிப்பிட்டிருந்தோம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here