பொறுப்பு தவறிய சமுர்த்தி வங்கி முகாமையாளர்: மண்டூர் சமுர்த்தி வங்கி ஊழல்கள்!

தலை சுற்ற வைக்கும் ஊழல் தொடர் 04

மட்டக்களப்பின் சமுர்த்தி மோசடிகள் பற்றிய இந்த தொடரை வெளியிட தொடங்கிய பின்னர், தமிழ் பக்கத்தின் பிரதேச செய்தியாளர்கள் சிலர் கிழக்கில் அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது தனிநபர்களிற்கோ, நிறுவனங்களிற்கோ எதிரான/ சேறுபூசும் தொடரல்ல. மாறாக, ஆதாரபூர்வ தகவல்களுடன்- மட்டக்களப்பு அரச நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையை சரிசெய்யும் முயற்சி. இந்த முயற்சியை எந்த சூழலிலும் தமிழ் பக்கம் கைவிடாது.

மட்டக்களப்பு சமுர்த்தி முறைகேட்டு புலனாய்வு தொடரில் இந்தவாரம் போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேசசெயலர் பிரிவில் உள்ள மண்டூர் சமுர்த்தி வங்கியில் இடம்பெற்ற ஊழல்களை வெளியிடுகிறோம்.

கணக்கு இல 25/2309 ஐ உடைய பயனாளியின் பெயரில் 2015. 02.27 அன்று விவசாய கடனாக 50,000 வழங்கப்பட்டு, அந்த கடன் திருப்பி செலுத்தாமல் இருக்கும்போதே, 2015.06.23 இன்று அதே பயனாளிக்கு திரியசவிய கடனாக 80,000/= விடுவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கடனை பயனாளி பெற்றுக்கொள்ளவில்லை. இந்த பயனாளியின் தேசிய அடையாள அட்டை 425943448V ஆகும். ஆனால் விடுவிக்கப்பட்ட திரியசவிய கடன் ஆள்சார் பேரேட்டில் தே.அ.அட்டை இலக்கம் 421632801V என போலியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பயனாளியின் பெயரில் 2015. 02.27 அன்று விடுவிக்கப்பட்ட 50,000/= பயிர்செய்கை கடனுக்கு எந்தவித ஒப்பந்தமும் பயனாளியுடன் செய்யப்படவில்லை. விடய எழுதுனர், உதவி முகாமையாளர் ஆகியோரின் கையொப்பமில்லாமல், முகாமையாளர் கையொப்பமிட்டுள்ளார்.

கணக்கு இல 68/2812 என்ற பயனாளியின் பங்கு வைப்பில் 3,000/= மீதியாக இருக்கும்போது, 30,000/= மட்டும் கடன்பெற தகுதியாகும். ஆனால் இவருக்கு 50,000/= 12.09.2014 அன்று விடுவிக்கப்பட்டுள்ளது. பயனாளி விண்ணப்பித்த தொகை 30,000/= .ஆனால் விடுவிக்கப்பட்டது 50,000/= என்பதை கவனிக்கவும்.

இந்த விவசாய கடன் 50,000/= ஐ 13.01.2015 அன்று வட்டி 2022/= உடன் திருப்பி செலுத்தியுள்ளார் பயனாளி. இதற்கான பதிவுகள் பயனாளியின் வைப்பு புத்தகம், கடன் ஆள்சார் பேரேடு என்பவற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், 13.01.2015 திகதி பணவரவு புத்தகத்தில் பதிவுசெய்யப்படவில்லை. குறித்த பணம் 52,022/= சுமார் 10 மாதங்கள் வரையில் முகாமையாளரின் சொந்த தேவைக்கு பயன்படுத்தப்பட்டு, 30.10.2015 ம் திகதி நாளாந்த பணவரவு புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பணம் விடுவித்த திகதியில் இருந்து, பணம் செலுத்திய தினம் வரை (12.09.2014- 13.01.2015) வட்டி, தண்ட வட்டி உள்ளடங்களாக 9,305/= ஐ செலுத்த வேண்டியிருந்தும், 2,975/= மட்டுமே அறவிடப்பட்டுள்ளது. 6,330/= மோசடியாக மறைக்கப்பட்டு, வங்கியின் வருமானம் குறைக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான உள்ளக கணக்காய்வாளரின் அனுமதியுடன் மட்டக்களப்பு மாவட்ட உள்ளக கணக்காய்வாளர்கள் நடத்திய கணக்காய்வில் இந்த வங்கியில் நடந்த மோசடிகளும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இன்னும் சில விபரங்களையும் குறிப்பிடுகிறோம்.

இந்த வங்கியின் முகாமையாளராக கடமையாற்றியவர் வங்கி சுற்றுநிருப எல்லையை மீறி செயற்பட்டுள்ளார். அரச நிதி பிரமாணங்களை மீறியுள்ளார். வங்கி பயனாளிகளின் பெயரை தவறாக பாவித்து கடன் பெற்றுள்ளார். வங்கியின் எழுத்துமூல ஆவணங்களை தனது சொந்த தேவைக்கு ஏற்ப மாற்றியுள்ளார்.

வங்கிப் பணியாளர்களுக்கு கடமை பகிர்வுகள் கையளித்து, பொறுப்புகூறும் நிலையிலுள்ள போதும், ஒப்படைக்கப்பட்ட கடமையை அவர்களுக்கு தெரியாது, தான் தனது தேவைக்கேற்ப பணியாளர்களுக்கு தெரியாது மறைத்து மேற்கொண்டுள்ளார். இப்படியாக பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here