கூட்டமைப்பு எம்.பிக்கள் இருவர் வாக்களிக்கவில்லை: ஒருவர் மானஸ்தன்… மற்றவர், வாக்களிப்பு நாளையே மறந்து விட்டாராம்!

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடந்தது. இதில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவாக வாக்களித்தது.

எனினும், இரண்டு உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்ய தகவல்களை தமிழ்பக்கம் பெற்றுள்ளது.

இன்றைய வாக்களிப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பில் செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. செல்வம் அடைக்கலநாதன் இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்தார். வாக்கெடுப்பிற்கு முன்னதாக நடந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார்.

எனினும், வாக்களிப்பு சமயத்தில் சபா மண்டபத்திற்கு வராமல், தனது அறையிலேயே தங்கியிருந்து விட்டார்.

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாமல், வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க கூடாதென, ரெலோவின் அரசியல் உயர்பீடத்தில் நேற்று முன்தினம் முடிவெடுக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் செல்வம் அடைக்கலநாதன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

எனினும், ரெலோவின் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான கோடீஸ்வரன் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, ஆதரவாக வாக்களித்தார்.

இதேவேளை, தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி ஈ.சரவணபவனும் இன்றைய வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார். இன்று மதியத்தின் பின்னர்தான், வாக்களிப்பிற்கு முன்னதாக, கூட்டமைப்பு எம்.பிக்களின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடத்தப்பட்டது. 14 பேரும் வாக்களிக்க வேண்டுமென்பதில் கூட்டமைப்பு தலைமை கவனமாக இருப்பதால், கூட்டத்தில் இல்லாதவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, “எங்கே இன்னும் ஆளைக்காணவில்லை?“ என விசாரித்து இழுத்தெடுப்பார்கள்.

சரவணபவன் எம்.பியை தொலைபேசியில் தொடர்புகொண்டது, தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா. “இன்றைக்கு வாக்கெடுப்பா?… நான் நாளைக்கு என நினைத்து யாழ்ப்பாணத்தில் அல்லவா நிற்கிறேன்“ என ஒரே போடாக போட்டுள்ளார் சரா எம்.பி.

வாக்கெடுப்பு நாளை மறந்த ஒரே எம்.பியாக சரா எம்.பியே இருப்பார் போல தெரிகிறது!

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here