‘கல்முனை பிரதேசசெயலமாக தரமுயர்த்தப்படா விட்டால் ரெலோ வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கக் கூடாது’: செல்வம் அடைக்கலநாதனிற்கு அடுத்த ‘கண்டம்’!

தமிழீழ விடுதலைக் கழகம் (ரெலோ)வின் உயர் நிர்வாக அமைப்பான அரசியல் உயர்பீடத்தின் சந்திப்பு நேற்று முன்தினம் (10) வவுனியாவில் இடம்பெற்றது.

அரசியல் உயர்பீடத்தின் அங்கம் வகிக்கும் ஒன்பது உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். செல்வம் அடைக்கலநாதன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரம், இந்திரகுமார் பிரசன்னா, ஹென்ரி மகேந்திரன், வினோ நோகராதலிங்கம், விந்தன் கனகரட்ணம் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக்கூடாது என ரெலோவின் செயலாளர் என்.சிறிகாந்தா, தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட முயற்சி பற்றி ஆரம்பத்தில் விவாதிக்கப்பட்டது.

“காலஅவகாசம் வழங்கும் பரிந்துரையுடன் வெளியான ஐ.நா மனித உரிமைகள் பேரவை செயலாளரின் அறிக்கையை கூட்டமைப்பு வரவேற்றுள்ள நிலையில், ரெலோ அதற்கு எதிர்நிலைப்பாட்டை எடுக்கிறது. காலஅவகாசம் வழங்கும்படி கூட்டமைப்பு அனுப்பிய கடிதத்தை, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். கூட்டமைப்பிற்குள்ளேயே இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகள் உள்ளன.“ என கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும், சிறிகாந்தா அதை மறுத்தார். “கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளான தமிழரசுக்கட்சி, புளொட் என்பவற்றின் தலைவர்கள் கையொப்பமிட சம்மதித்துள்ளனர். ஐந்து கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிடுவார்கள். அதுவொரு வலுவான முயற்சி.“ என விளக்கமளித்தார்.

இதன்பின்னரே, இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் கடிதத்தில் செல்வம் அடைக்கலநாதன் கையொப்பமிட்டார்.

கல்முனை உப பிரதேசசெயலகத்தை, பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் விவகாரம் அங்கு பேசப்பட்டது. அண்மையில் ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். ரெலோ அமைப்பின் பிரமுகர் ஹென்ரி மகேந்திரனே இந்த விடயத்தின் பின்னணியில் இருந்தார்.

அவர் இந்த கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கறாராக, கல்முனை விடயத்தை பேசினார். “தனி பிரதேச செயலகமாக மாற்ற தேவையான மக்கள் தொகை, கிராமசேவகர் பிரிவுகள் உள்ளன. கிழக்கின் மற்ற இடங்களை போல அதையும் முஸ்லிம்களின் பிரதேசமாக மாற்ற அனுமதிக்ககூடாது. தனி பிரதேசசெயலகமாக தரமுயர்த்தாவிட்டால், தமிழர்களின் பாரம்பரிய நிலமான கல்முனையில் எஞ்சியுள்ள பகுதியும் பறிபோய்விடும். உடனடியாக பிரதமரை சந்தித்து இந்த விடயத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். வரவு செலவு திட்டத்தின் முன்னர், அழுத்தம் கொடுத்து உத்தரவாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படி உத்தரவாதம் தரப்படாவிட்டால், ரெலோவின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரவு செலவு திட்டத்தை ஆதரித்து வாக்களிக்கக்கூடாது. மீறி வாக்களித்தால், கட்சிக்குள் வகிக்கும் சகல பொறுப்புக்களையும் துறந்து விட்டு, சாதாரண ஒரு உறுப்பினராக மட்டுமே நீடிப்பேன். இந்த அரசியல் உயர்பீட கூட்டங்களிலெல்லாம் அதன்பின்னர் கலந்துகொள்ளவே மாட்டேன்“ என உணர்ச்சிவசப்பட்ட நிலையில், கறாராக பேசினார். அவர் அப்படி பேசுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் எல்லோரும் உறைந்து போயிருந்தனர்.

கல்முனை உப பிரதேச செயலகமாக தரமுயர்த்தினால் அரசிலிருந்து விலகுவோம் என முஸ்லிம் காங்கிரஸ் மிரட்டல் விடுத்துள்ளது. அந்த கூட்டத்தில் இருந்தபடியே, சுமந்திரன் எம்.பியுடன் ரணில் பேசினார். இதனால் வரவு செலவு திட்டம் வரை, கூட்டமைப்பு இந்த விடயத்தில் நெருக்கடி கொடுக்காது என தெரிகிறது. அதேபோல, கூட்டமைப்பாக- சம்பந்தன், சுமந்திரன் எடுத்த முடிவை- ரெலோவின் இரண்டு எம்.பிக்களும் மீறி நடப்பதுமில்லை. அதனால், வரவு செலவு திட்ட வாக்களிப்பு சமயத்தில், ரெலோவிற்குள் எதிர்வரும் நாட்களில் குத்துவெட்டு சில நடக்குமென எதிர்பார்க்கலாம்.

அரசியல் உயர்பீட கூட்டத்தில் அலசப்பட்ட இன்னொரு விவகாரம், கோவிந்தன் கருணாகரம் எழுப்பிய ஒழுங்குப் பிரச்சனை.

ஐ.நாவில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படக்கூடாது என வலியுறுத்தி ரெலோ பிரமுகர்கள் ஒரு முயற்சிறை ஆரம்பித்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா, தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் இந்த சந்திப்புக்களில் கலந்து கொண்டனர். கட்சிக்கு புதிதாக வந்த, அரசியலில் அனுபவமற்ற புதியவர்களை அழைத்துக் கொண்டு, மூத்த தவலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொள்வது, அரசியல் நாகரிகமற்றது, அதேவேளை கட்சியின் மூத்த உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் யாழில் இருந்தும் அவரை இதில் இணைக்கவில்லையென ஒழுங்குப்பிரச்சனை கிளப்பினார்.

அதை பலரும் ஆமோதித்தனர். ஏனைய கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும்போது, கட்சியின் மூத்த உறுப்பினர்களை தவிர்த்து, புதியவர்களுடன் சென்று முக்கிய விவகாரங்களில் பேச்சு நடத்துவது, அந்த கட்சிகளின் தலைவர்களையும் அவமதிப்பதாக அமையும் என சுட்டிக்காட்டினார்கள். வினோ நோகராதலிங்கம், ஹென்ரி மகேந்திரன், இந்திரகுமார் பிரசன்னா என பலரும் இதை ஆமோதித்தனர்.

“விந்தனிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தினாலும், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை“ என சிறிகாந்தா நிலைமையை சமாளிக்க முயல, “இல்லை. அப்படி யாரும் என்னை தொலைபேசியில் தொடர்புகொள்ளவில்லை. என்னை ஓரங்கட்டும் முயற்சியை இங்குள்ள சிலர் மேற்கொள்கிறார்கள்“ என விந்தன் கூற, அங்கு பரபரப்பு எகிறியது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here