முதலமைச்சருக்கு பொருத்தமானவரா மாவை?

நம்மாழ்வார்

வடமாகாணசபையின் ஆயுள்காலம் அடுத்த செப்ரெம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அனேகமாக செப்ரெம்பரின் பின்னர் வடமாகாணசபை தேர்தல் நடக்க வேண்டும். இதே அரசியல் சூழ்நிலை நீடிக்குமென்றால், தேர்தல் பின்னால் செல்ல வாய்ப்பில்லை. இப்பொழுதுதான் உள்ளூராட்சிசபை தேர்தல் பரபரப்பை முடித்த கட்சிகளிற்கும், மக்களிற்கும் மீண்டும் ஒரு தேர்தல் காலத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

தேர்தலென்பது நமது ஜனநாயக கடமைதானே. அதை சந்திப்பதில் சிக்கல் ஒன்றுமிருக்காது. ஆனால், தமிழ் அரசியல் எப்படி சின்னாபின்னப்படும் என்பதை நினைக்கத்தான், படபடப்பு கூடுகிறது.

வடமாகாணசபையை கைப்பற்றும் வாய்ப்பு யாருக்கு உண்டு? யார் முதலமைச்சராவார்? கூட்டாட்சிக்கான வாய்ப்பு ஏற்படுமா? என்ற ஏராளம் கேள்விகள் உள்ளன. இந்த கேள்விகள் எல்லாவற்றிற்கும் அடிப்படையான விசயம்- அடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரனா? மாவை சேனாதிராசாவா? என்பதே.

இந்த கேள்வியிலிருந்தே மேலேயுள்ள கேள்விகளிற்கான விடையை கண்டறிய வேண்டியுள்ளது.

அடுத்த வடக்கு முதலமைச்சராவதற்கான வாய்ப்பு இரண்டு பேருக்கு மட்டுமேயுள்ளது. ஒன்று- க.வி.விக்னேஸ்வரன். மற்றது- மாவை சேனாதிராசா.

அடுத்த தேர்தலில் இருவருமே எதிரெதிர் முனையில் களத்தில் நிற்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி நின்றால், தமிழ் அரசியலில் என்றுமில்லாத கொதிநிலையுடன், மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு. அல்லது, எதிர்பார்க்கப்பட்ட இருவரில் யாராவது ஒருவர் களத்தில் நிற்காமலிருக்கவும் வாய்ப்புண்டு. இரண்டு சந்தர்ப்பங்களில் அது நடக்கலாம்.

முதலாவது, மாவையின் தெரிவை சம்பந்தன் நிராகரிக்கலாம். (அதற்கான வாய்ப்புள்ளதா என்பதை இந்த கட்டுரையின் பின்பகுதியில் சொல்கிறேன்). அப்படி நடந்தால், விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார். இரண்டாவது, மாவைதான் தமிழரசுக்கட்சியின் வேட்பாளராக களமிறக்கப்படும்போது, போட்டிக்களத்தில் இருந்து விக்னேஸ்வரன் வெளியேற வேண்டும். இதற்கு வாய்ப்புள்ளதா? மாவையின் வெற்றி வாய்ப்பு என்ன? அவர் முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமானவரா? இவற்றிலிருந்து இந்த கட்டுரையை ஆரம்பிக்கலாம்.

மாவை சேனாதிராசாவின் அப்டேற் வெர்சன்தான் விக்னேஸ்வரன். அப்டேற் வெர்சனே இந்தளவு சொதப்பி, விமர்சனங்களை சந்தித்தால், அடிப்படை வெர்சன் (basic version) எப்படியிருக்குமென்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மக்களை உணர்ச்சிமயப்படுத்தும் வழக்கமான தமிழ் தேசிய பேச்சு, அரசியல் மொழியின் மேம்பட்ட வடிவமாகத்தான் விக்னேஸ்வரன் இருக்கிறார். அதுதான் அவரது கவர்ச்சி. நீதியரசர், இந்து தோற்றம் என்பன மேலதிக ப்ளஸ். இவையெல்லாவற்றிலும் மாவை, வெகுவாக விக்னேஸ்வரனை விட பின்தங்கியிருக்கிறார். தமிழரசுக்கட்சி ஆதரவுத்தளமும், நீண்டகால அரசியலிருப்பும்தான் அவரது அடித்தளம்.

தொலைபேசி நிறுவனங்கள் ஒரு வெற்றிகரமான உற்பத்தியை செய்தால், நீண்டகாலத்திற்கு அதன் அப்டேற் வெர்சன்களை உருவாக்கிக் கொண்டிருக்கும். சம்சுங் கலக்சி, அப்பிள் ஐ என்பன நம் வாழும்கால உதாரணம். நொக்கியா, விண்டோஸ் நிறுவனங்களில் அப்டேற் வெர்சன்கள் சறுக்கிய சமகால உதாரணமும் உள்ளது. அவையெல்லாம் அடிப்படை வெர்சன்களிற்கே திரும்பி சென்றன. இந்த தொழில்நுட்ப உதாரணம், நம் அரசியல் களத்திலும் நடக்குமா என்பதை ஆராயலாம்.

உள்ளூராட்சிசபை தேர்தலை நடத்துவதற்கு மைத்திரிபால சிறிசேன விரும்பாமலிருந்தது ஒன்றும் இரகசியமல்ல. அவரது விருப்பமின்மைக்கு காரணம், இந்த தேர்தலில் சறுக்கினால், தொடர்ந்து சறுக்க வேண்டியதாகிவிடும் என்பதே. வெகுஜன மனநிலை என்பது தேர்தல் களத்தில் அனேகமாக ஒரேவிதமாகவே செயற்படுகிறது. ஒரு தேர்தலில் சறுக்கி, சடுதியாக அடுத்த தேர்தலில் மேலெழுவதென்பது, ஏதாவது விதிவிலக்கான சம்பவங்கள் அமைந்தால் மாத்திரமே சாத்தியம். சறுக்கல் நிகழ்ந்தால், ஒரு கால இடைவெளியின் பின்னரே மக்கள் தூக்கி நிறுத்துவார்கள். இந்த உறைக்கும் பாடத்திலிருந்தே தமிழரசுக்கட்சி முடிவுகளை எடுக்க வேண்டும்.

இன்றைய திகதியில், தமிழரசுக்கட்சியின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன் அல்ல. அது, மாவை சேனாதிராசாதான். இம்முறை மாவை போட்டியிடுவதில் பெருமளவிற்கு மாற்றம் இருக்காதென்றுதான் தெரிகிறது. கடந்த தேர்தலிலும் மாவை இப்படியான கனவுகளுடன்தான் திரிந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. இம்முறையும் அப்படி அவர் கனவு கண்டு, கடைசியில் அது பலிக்காமல் விட வாய்ப்பிருக்கிறதல்லவா என்று யாரும் கேட்கலாம். அக,புற அடிப்படையில் சூழ்நிலையை புரிந்துகொண்டால், இந்த கேள்விக்கான பதிலை கண்டடையலாம்.

விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டுமென சம்பந்தன் விரும்பிய அரசியல் சூழ்நிலை இப்போதில்லை. அதற்கு நேர் எதிரானது. கொழும்பு அரசுடன் அதிகபட்சமாக இணங்கி செல்லும் அரசியல் போக்கைத்தான் தமிழரசுக்கட்சி விரும்புகிறது. விக்னேஸ்வரன் முதலமைச்சராக சமயத்தில், மஹிந்த ராஜபக்சவுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள் தமிழர்கள். மாகாணசபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியமான அரசியல் அங்கமாக இருக்குமென அப்பொழுது சம்பந்தர் திட்டமிட்டார். எனினும், விக்னேஸ்வரன் நீளக்கயிற்றில் நடக்க தொடங்க, மாகாணசபையை ஒரு அரசியல் முனையாக உருவாகவிடாமல் செய்ததில் தமிழரசுக்கட்சிக்கும் கணிசமான பங்குண்டு. தீர்மானமெடுக்கும் தமிழ் தேசிய அரசியலில் விக்னேஸ்வரனின் பங்கை இல்லாமல் செய்ய வேண்டுமென்பதிலும், கட்சி கவனமாக இருந்தது. மொத்தத்தில், 2013 இல் விக்னேஸ்வரன் அரங்கிற்கு அழைத்து வரப்பட்ட புறச்சூழல் இப்பொழுது இல்லை.

கட்சிக்குள்ளான அகச்சூழலும் முன்னரைப் போல இல்லை. சம்பந்தரின் பிடி கட்சிக்குள் பெருமளவு இளகிவிட்டது. தனது வயதை கருத்தில் கொண்டு, கட்சியின் அன்றாட செயற்பாட்டில் பெருமளவிற்கு தலையிடுவதை தவிர்த்துவிட்டார். முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ்பெற வைப்பதற்கு சம்பந்தர் அதிகளவில் ரிஸ்க் எடுக்க வேண்டியிருந்தது. ஒரு வார்த்தையில் விசயத்தை முடிப்பதென்பது இல்லாமல் போய், கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருடன் தனித்தனியாக பேச வேண்டியிருந்தது. இப்படியொரு ரிஸ்க் எடுத்து விக்னேஸ்வரனை இன்னொருமுறை கட்சிக்குள்ளால் முதலமைச்சர் வேட்பாளராக்க முடியுமா என்பது தெரியவில்லை.

விக்னேஸ்வரனிற்கும் இது தெரியும். அவர் எப்படி இதை கையாளப்போகிறார் என்பதுதான் தெரியவில்லை. விக்னேஸ்வரன் அடுத்த மாகாணசபை தேர்தலில் களமிறங்குவார் என்றுதான் தெரிகிறது. ஆனால், அதை அவர் இன்னும் பகிரங்கமாக்காமல் இருக்கிறார். அவரது மௌனத்திற்கு இரண்டு காரணம்தான் இருக்க முடியும். ஒன்று-அரசியலை மிக சுலபமாக புரிந்து வைத்திருக்க வேண்டும். அல்லது, அதிக சிரமமானதாக நினைக்கலாம்.

நம்பிக்கையில்லா பிரேரணை சமயத்தில் திரண்ட இளைஞர்கள், எழுக தமிழில் திரண்ட மக்களை பார்த்துவிட்டு, எந்த சமயத்தில் தான் வீதிக்கிறங்கினாலும் மக்கள் பின்னால் வருவார்கள் என அவர் நினைக்கலாம். இரண்டு நிகழ்விலும் மக்களை திரட்டியதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு கணிசமான பங்குண்டு. அந்த சனக்கூட்டத்தை தன்னுடையதாக மட்டும் நினைப்பதால், அரசியலை மிகச்சுலபமானதாக அவர் நினைக்ககூடும்.

அல்லது, அதிக ரிஸ்க்கியானதாக நினைத்து, மௌனம் காக்கிறாரோ தெரியவில்லை. இப்பொழுதே நகர்வுகளை ஆரம்பித்தால், தனது போட்டியாளர்களிற்கு (தமிழரசுக்கட்சி) கையாள வாய்ப்பாக அமைந்துவிடும் என நினைக்கலாம். ஆனால், இதிலுள்ள பாதகம் என்னவென்றால், விக்னேஸ்வரனிற்கு அரசியல் நண்பர்களென யாரும் இப்பொழுது கிடையாது. அவரது மௌனத்தை மொழிபெயர்த்தபடி பின்தொடரும் குருகுல பரம்பரையெதுவும் கிடையாது.

தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறினால் விக்னேஸ்வரன் பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்க முடியுமா என்ற கேள்வியும் உள்ளது. ஏனெனில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்றவற்றுடன் கூட்டு வைக்க முடியாதென அவர் நினைக்கிறார். மாற்று அணி பிரமாண்டமாக இருந்தால், ரெலோ மற்றும் புளொட் என்பன எப்படியான முடிவெடுக்குமென உறுதியாக கூற முடியாது. மாவை சேனாதிராசா சிறப்பான முதலமைச்சர் தெரிவாக இருப்பார் என்று கருத முடியாதென்ற அபிப்பிராயம் இரண்டு கட்சிகளிடமும் உள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாகாணசபை தேர்தலில் மதில்மேல் பூனையாக இருந்து, முதலமைச்சர் தனி அணியாக களமிறங்கினால், மாற்று அணி பிரமாண்டாக உருவாக வாய்ப்பிருக்காது.

இந்த களச்சூழல்தான் மாவை சேனாதிராசாவை துணிச்சலாக களமிறங்க வைத்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் இரண்டையும் தவிர்த்து விக்னேஸ்வரன் களமிறங்கினால் சுலபமாக தோற்கடிக்கலாமென கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.

இந்த சூழலை அடிப்படையாக வைத்தே, மாவை சேனாதிராசா தனது வெற்றியில் அபரிதமான நம்பிக்கை வைத்துள்ளார். ஆனால், இந்த சூழல் ஒன்றே மாவை சேனாதிராவை கரையேற்றுமா?

நிச்சயம் இல்லை. ஏனெனில், மாகாணசபை தேர்தல் சமயத்தில் இதேவிதமான சூழல் நிலவுமென சொல்ல முடியாது. இந்த சூழலை தவிர்த்து, கவனத்தில் கொள்ள வேண்டிய நிறைய விடயங்கள் உள்ளன.

முக்கியமாக, வடமாகாணசபைக்கு அப்டேற் வெர்சனே அவ்வளவாக பலனளிக்கவில்லையென தமிழரசுக்கட்சியினர் குற்றம்சாட்டிவரும் நிலையில், அடிப்படை வெர்சன் பலனளிக்குமா?

மாவை சேனாதிராசா நீண்டகால செயற்பட்டாளராக இருந்தார். அதில் இரண்டாவது கேள்விக்கு இடமில்லை. ஆனால் வெற்றிகரமான தலைவரா? சிறந்த நிர்வாகியா? என கேட்டால், அதற்கு பதிலளிப்பது சிரமம். அவர் தமிழரசுக்கட்சியின் தலைவராக பதவியிலுள்ள சில வருடகாலத்தைதான் அளவுகோலாக கொள்ள முடியும்.

இரண்டு உதாரணங்கள் சொல்கிறோம். உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சி தலைவர்கள் சந்தித்து ஆசனப்பங்கீட்டை முடித்திருந்தார்கள். இந்த பங்கீடு முடிந்ததும், தமிழரசுக்கட்சியின் “சிற்றரசர்கள்“ பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவை சேனாதிராசாவிற்கு குடைச்சல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளை இரத்து செய்துவிட்டு, பங்காளி கட்சி தலைவர்களை மீண்டும் அழைத்தார். பங்காளி கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில், மாவைக்கு குடைச்சல் கொடுத்த உறுப்பினர்களையும் அழைத்து வைத்திருந்தார். கட்சி தலைவர்கள் மட்டும் கூடி முடிவெடுக்க வேண்டிய விசயத்தில், கட்சியின் பிரதேசமட்ட தலைவர்களையும் அழைத்து வைத்திருந்தார். இதனாலேயே பங்காளி கட்சிகளுடன் மோதல் ஏற்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறுவதாக ரெலோ அறிவித்தது. பின்னர், சம்பந்தன் தலையிட்டே நிலைமையை சுமுகமாக்கினார்.

மற்றது, உள்ளூராட்சி தேர்தலிற்காக சாவகச்சேரி நகரசபை வேட்புமனு தாக்கல் செய்தது. வேட்புமனுவில் குளறுபடி நடந்துவிட்டதாக கூறி மார்ட்டின் வீதியில் அருந்தவபாலன் குமுறிக்கொண்டிருக்க, “சாவகச்சேரி எங்கள் கையை விட்டு சென்றுவிட்டது“ என கூறிவிட்டு மாவை வெளியேறி சென்றுவிட்டார். பின்னர் “சிலபல“ வேலைகள் செய்து, சிவாஜிலிங்கம்தான் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்திருந்தார்.

கட்சிக்கு பலமான தலைமைத்துவம் கொடுக்க மாவை சேனாதிராசாவால் இதுவரை முடியவில்லை. மாவையிடம் தமிழரசுக்கட்சி தலைமையை ஒப்படைத்துவிட்டு, கூட்டமைப்பின் அன்றாட நடவடிக்கைகளிலிருந்து சம்பந்தன் ஒதுங்கிக்கொண்ட பின்னர், கூட்டமைப்பிற்குள் அதிகமான முரண்பாடுகள் தோன்றின. முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது.
மொத்தத்தில் மாவை தன்னையொரு ஆளுமையான தலைவராக நிலைநிறுத்திக் கொள்ளவில்லை.

விக்னேஸ்வரனும் பதவிக்கு வர முன்னர் அப்படி நிரூபிக்கவில்லைத்தான். பதவியேற்ற பின்னரும் நல்லதொரு நிர்வாகியாக நிரூபிக்கவில்லை. ஆனாலும், அவர் மீதான வெகுஜன கவர்ச்சியால் அந்த விமர்சனங்கள் மேலெழவில்லை. மாவைக்கு அப்படியொரு வெகுஜன கவர்ச்சி கிடையாது. மாறாக, சமீபகாலத்தில் அளவிற்கதிகமான விமர்சனத்தைதான் வாங்கி வைத்திருக்கிறார்.

தமிழ் அரசியலுக்கு அடிப்படையாக தகுதியாக உள்ள, “ஏ சிங்கள அரசே… சமஷ்டி அடிப்படையில் தீர்வைத்தா. இல்லாவிட்டால் ஐ.நாவில் முறையிடுவோம். சர்வதேச சமூகத்தின் உதவியுடன் சமஸ்டியை ஏற்படுத்துவோம். பிரபாகரன் ஒரு மாவீரன்“ என்றவிதமான பேச்சில் மாவையும் நன்றாக ஸ்கோர் செய்வார்தான். ஆனால் இந்தவகை பேச்சில் இப்பொழுது அப்டேற் வெர்சன்களாக நிறையப்பேர் வந்துவிட்டனர். அந்த வெர்சன்களே சலிப்பூட்டிக் கொண்டிருக்க, basic version வெர்க் அவுட் அகுமா? இந்த ஒற்றை காரணமே மாவையை முதலமைச்சராக்குமா?

விக்னேஸ்வரனை போலவே, மாவையும் மூத்தவர். போதாதற்கு உடல்நல பிரச்சனைகளும் உள்ளன. முற்றிலும் இளைய, சரியான நிர்வாக அச்சு ஏற்படுத்தப்படாத வடமாகாணசபைக்கு புத்துயிர் ஊட்ட மாவையால் முடியாது. அதிகம் பேசிப்பேசியே அரசியல் செய்து வந்த அரசியல் வழியில் வளர்ந்தவர் மாவை. அவரால் அதை மட்டுமே செய்ய முடியுமென்பதைதான், தமிழரசுக்கட்சியின் தலைவர் என்ற அவரது பதவிக்காலம் நமக்கு சொல்லும் உண்மை.

மாவைக்கு எதற்கு இன்னொரு சுமை?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here