அமெரிக்க இராணுவ முகாமின் அருகிலேயே வாழ்ந்த தலிபான் தலைவர்: அமெரிக்க உளவுத்துறைக்கே தண்ணீர் காட்டிய கில்லாடி!

தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா ஓமர், அமெரிக்கா இராணுவ முகாம் அருகே அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வந்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. சிலமுறை முல்லா ஓமரின் வீட்டுக்கு சோதனைக்கு வந்த அமெரிக்க இராணுவத்தினர், அவருடன் பேசியும், அடையாளம் காணாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.

‘சேர்ச்சிங் ஃபோர் அன் எனிமி'(Searching for an Enemy) எனும் தலைப்பில் நெதர்லாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பெட் டொம் புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தககத்தில் தலிபான் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் முல்லா ஓவர் குறித்து சுவாரஸ்யமான தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புத்தகம் எழுதுவதற்காக ஏறக்குறைய 5 ஆண்டுகள் ஆய்வு செய்துள்ள பத்திரிகையாளர் பெட் டொம், முல்லா ஓமரின் தனிப்பட்ட பாதுகாவலர் ஜாபர் ஓமரியுடன் பேசிப் பழகி நேர்காணல் செய்து பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளார்.

அதில் முக்கியமானது, ஆப்கானிஸ்தானில் தன்னுடைய குடும்பத்தினரை விட்டு ஒதுங்கி துறவி போல் கடைசி வரை வாழ்ந்துள்ளார் முல்லா ஓமர். குடும்பத்தினர் தன்னை வந்து சந்திப்பதை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை என ஜாபர் ஓமரி தெரிவித்துள்ளார்.

பிபிசியின் பாஷ்டா மொழி ஒலிபரப்புகளை மாலை நேரத்தில் முல்லா ஓமர் விரும்பி கேட்டுள்ளார். ஒசமா பின்லேடன் மறைவு குறித்து அறிந்த பின், வெளி உலகம் குறித்து மிகவும் அரிதாகவே முல்லா ஓமர் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

2001ம் ஆண்டு அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பின் தலிபான் நிறுவனர் முல்லா ஓமர் தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத்தொகையை அமெரிக்க அரசு அறிவித்தது. இதனால், அச்சமடைந்த முல்லா ஓமர் ஜாபுல் மாநிலத்தில் உள்ள காலத் நகரில் ஒரு சிறிய வீட்டில் பதுங்கி தனது அடையாளத்தை மறைத்து வாழ்ந்துள்ளார்.

அந்த குடியிருப்பில் வாழ்ந்த மற்ற குடும்பத்தினர்களிடம் தன்னுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து வாழ்ந்த முல்லா ஓமர், தன்னை விருந்தினர் போலவே காட்டிக்கொண்டார். இந்த வீட்டுக்கு இருமுறை சோதனையிட அமெரிக்க இராணுவம் வந்தும் முல்லா ஓமரிடம் பேசியும், அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கூடுதல் சுவாரஸ்யமானது.

ஒருமுறை அமெரிக்க இராணுவத்தினர் முல்லா ஓமர், ஜாபர் ஓமரியின் வீட்டுக்கு வந்துள்ளனர். ஆனால், இருவரும் வீட்டுக்குள் இருந்த சிறிய மரப்பலகையின் பின்னால் ஒளிந்து கொண்டதால், வீட்டுக்குள் வராமல் சென்று விட்டனர்.

2வது முறை முல்லா ஓமர் வீட்டுக்குள் வந்து தேடுதல் வேட்டையில் அமெரிக்க இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், வீட்டுக்குள் இருந்த இரகசிய இடத்தில் ஓமர் பதுங்கியதால், அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் சென்றனர்.

இந்த சம்பவத்துக்கு பின் முல்லா ஓமர் வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்தார். அந்த வீடு அமெரிக்க இராணுவ முகாமுக்கு அருகே இருந்தது. அமெரிக்க இராணுவ முகாமில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இருந்தும் முல்லா ஓமரை அமெரிக்க உளவுத்துறையால் கண்டுபிடிக்க இயலவில்லை.

கடந்த 2004ம் ஆண்டு, அமெரிக்க புதிய இராணுவ முகாமுக்கான கட்டிடம் கட்ட முடிவு செய்தபோதுதான் முல்லா ஓமர் அங்கிருந்து வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தார். வெளியில் அதிகமாக நடமாடுவதை தவிர்த்த முல்லா ஓமர் வீட்டுக்குள் கட்டியிருந்த இரகசிய அறையிலும், குகைகளிலுமே பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்.

முல்லா ஓமர் அதிகமாக தன்னுடைய சமையல்காரரிடமும், பாதுகாவலரிடமும்தான் பேசுவார். பழங்கால நோக்கியா செல்போன் ஒன்றை வைத்திருந்த முல்லா ஓமர், அதில் சிம் கார்டு ஏதும் போடாமல், குரான் வாசகங்களை பேசி பதிவு செய்து தனக்குத்தானே கேட்டுக்கொள்வார்.

அமெரிக்க இராணுவ முகாமுக்கு மிக அருகே தங்கி இருந்தும், கடைசிவரை முல்லா ஓமரை அமெரிக்க உளவுத்துறையால் கண்டுபிடிக்க முடியாத நிலைதான் நிலவியது என புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here