இராஜசிங்கனால் அமைக்கப்பட்ட தொன்மையான இந்து ஆலயம், பௌத்த மயமாகும் துயரம்!

முதலாம் இராஜசிங்க மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமொன்று சிதைவடைந்த நிலையில், இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆலயம் கொழும்பின் புறநகர்ப் பகுதியான அவிசாவளையில் அமைந்துள்ளது.

அவிசாவளை நகரிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தல்துவை பகுதியில் இந்த ஆலயம் -பெரண்டி ஆலயம் எனப்படுகிறது- அமையப் பெற்றுள்ளது.

சீதாவக்கை அரசை ஆட்சி செய்த மாயாதுன்னை மன்னனின் ஆட்சிக் காலத்தில் அவரது மகனான முதலாம் இராஜசிங்க மன்னனால் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

தனது தந்தையை கொலை செய்து, ஆட்சிப் பீடத்தை கைப்பற்றிய பாவத்திலிருந்து விடுபடும் நோக்கில், மதகுருமார்களின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த ஆலயம் கி.பி. 1581 – 1593 காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து சிற்பிகள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு, பெருமுயற்சி எடுத்து இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து வந்தவர்களில், அரிட்டுகே என்பவரும் ஒருவர். இவர் சிற்பத்துறையில் மாத்திரமன்றி, சாஸ்திரங்களிலும் சிறந்து விளங்கியுள்ளார்.

சீதாவாக்கை ஆற்றை இடைமறித்து, ஆற்றை வேறு திசைக்கு திருப்பி ஆலயம் நிர்மாணிக்கப்பட வேண்டும் என மன்னன், சிற்பத்துறை நிபுணரான அரிட்டுகேவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆற்றை திசை திருப்பி ஆலயம் நிர்மாணிப்பது பாவச் செயல் எனவும், ஆறு திசை திருப்பப்பட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் மன்னனிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரிட்டுகேயின் எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ளாத மன்னன், ஆலயத்தை நிர்மாணிக்குமாறு பணித்துள்ளார்.

இதன்படி, சிவனின் வடிவமான வைரவரை மூலக் கடவுளாக கொண்டு இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அரிட்டுகேயின் எச்சரிக்கையை மீறி இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு, குறுகிய காலத்தில் முதலாம் இராஜசிங்கன் இறந்ததாக சொல்லப்படுகிறது.

எனினும், இந்த ஆலயத்தில் காளி அம்மன் வழிபாடு நடைபெற்றதாக இலங்கை தொல்பொருள் திணைக்களம் அப்பகுதியில் காட்சிப்படுத்தியுள்ளது.

எனினும், அப்பகுதி மக்கள் இன்றும் அந்த இடத்தில் வைரவர் வழிபாடே இடம்பெற்றதாக நம்பி வருகின்றனர்.

வைரவர் காவல் தெய்வம் என்பதற்காக அந்த பகுதி மக்கள் ‘வைரவயா எனவோ” (வைரவர் வாறார்) என இரவு நேரங்களில் கூறி அச்சப்பட்டுள்ளனர்.

இதுவே பிறகு பெரண்டி என பெயர் மருவியதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். சீதாவாக்கை ஆறு ஊடறுத்து செல்லும் சிறிய குன்றுப் பகுதியில் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கருவறை, அர்த்த மண்டபம் ஆகியனவும், சிதைவடைந்த கற்களும், கல்வெட்டுக்களும் இந்த ஆலயத்திற்கான பழமை சான்றுகளை வெளிப்படுத்துகின்றன.

இவ்வாறான வரலாற்று சான்றுகளை கொண்ட இந்த ஆலயம், தற்போது அடித்தளத்தை மாத்திரமே கொண்டுள்ளது.

இந்த ஆலயத்தை இலங்கை தொல்பொருள் திணைக்களம் பாதுகாத்து, பராமரித்து வருகின்றது.

இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க இந்த பெரண்டி ஆலயம், இன்று முழுமையாக சிதைவடைந்துள்ள நிலையில், அதனை சிங்கள பௌத்தர்கள் ஆக்கிரமித்துள்ளதைக் காண முடிகிறது.

 

இந்த ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்கும் பகுதியில் புத்தப் பெருமானின் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
புத்தர் சிலைக்கு அருகில், பௌத்த மதத்தை பிரதிபலிக்கும் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.

அத்துடன், பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் அங்கு ஒன்று திரண்டு, ஆலயத்தை சூழ பராமரித்தும் வருவதும் காணக்கூடியதாக உள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here