தவராசாவிற்கு வராத வெட்கம், எதற்காக விக்னேஸ்வரனிற்கு வர வேண்டும்?

வடக்கு எதிர்கட்சி தலைவர் சி.தவராசாவிற்கு தற்போது இரண்டு வேலைகள்தான் உள்ளன. ஒன்று மாகாணசபைக்கு போய் கதைப்பது. மற்றது, வீட்டில் இருந்து ஒன்றுவிட்ட ஒரு நாள் அறிக்கை தயாரித்து ஊடகங்களிற்கு அனுப்புவது.

இந்தவகையில் இந்த வாரத்திற்கான அறிக்கையாக, ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி என்ற தலைப்பில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வழக்கமாக மாகாணசபைக்குள் ஓரளவு தர்க்கமாக பேசும் தவராசா, அண்மைக்காலமாக அதையெல்லாம் தவறவிட்டுத்தான் பேசுகிறார்.அது ஏன்?

ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து நிதிப்பிரச்சனை காரணமாக தவராசா வெளியேறியிருந்தார். ஈ.பி.டி.பி அமைப்பிலிருந்து வெளியேறிய பின்னர், அவர் மாகாணசபை எதிர்க்கட்சி தலைவராக செயற்படவில்லை. அவரை நன்கு அவதானித்தால், தமிழரசுக்கட்சியின் “குழப்ப அணி“ உறுப்பினராகவே செயற்பட்டது தெரியும். அதாவது, தமிழரசுக்கட்சிக்குள் நல்ல பிள்ளை பெயர் எடுத்து, தமிழரசுக்கட்சிக்குள் ஏதாவது அரசியல் அடித்தளம் அமைத்து கொள்ளலாமென அவர் நினைக்கிறார். அதனால்தான் வாண்டட்டாக போய் தமிழரசுக்கட்சி வண்டியில் ஏறி, நானும் ரௌடிதான் என காட்ட முயற்சித்து கொண்டிருக்கிறார்.

வடக்கில் ஏராளம் நிர்வாக குறைபாடுகள் உள்ளன. அதெல்லாம் மாகாணசபையாக சேர்ந்து தீர்க்க வேண்டிய விசயங்கள். ஆனால் தவராசா வகையறாக்கள் என்ன செய்கிறார்கள்? தீர்க்க வேண்டிய பிரச்சனையை கவனிக்காமல், அதில் தமது பங்கை ஏற்காமல்- அனைத்தையும் முதலமைச்சர் மீதே தள்ளிவிடும் அசிங்க அரசியலைதான் செய்கிறார்கள். இதன்மூலம் வடக்கில் உள்ள வெகு சாதாரண அரசியல்வாதிகளில் ஒருவர்தான் நான் என்பதையே தவராசா மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டிருக்கிறார்.

தவராசா ஏன் ஈ.பி.டி.பியை விட்டு வெளியேறினார் என்பதையும், தவராசாவிற்கும் தமிழரசுக்கட்சிக்கும் உள்ள டீலிங்கையும் தமிழ் பக்கம் ஏற்கனவே பகிரங்கப்படுத்தியிருந்தது. அதை இன்று மீள் பிரசுரம் செய்வோம்.

முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமயத்தில் சுமந்திரன், சீ.வீ.கே.சிவஞானம் இருவரும் தவராசாவுடன் பேச்சு நடத்தியிருந்தனர். நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடாமல், வாக்கெடுப்பில் ஆதரிப்பதாக தவராசா அப்பொழுது வாக்களித்திருந்தார்.

இந்த பின்னணியிலேயே தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலக திறப்பு விழாவில் முதலமைச்சர் பங்கேற்றதை கண்டித்தும், யாழ் மாநகரசபை மேயர் ஆனோல்டிற்கு வழங்கிய அறிவுரையை கிண்டல் செய்தும் தவராசா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வடமாகாண அமைச்சர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி தலைவர் தவராசா உள்ளிட்ட எந்த வடமாகாணசபை உறுப்பினரும் ஊழல் செய்யவில்லையென நாம் சொல்லமாட்டோம். ஆனால் வடமாகாண அமைச்சர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கை பக்கச்சார்பானது, ஏற்க முடியாதது என்பது எழுத்துக்கூட்டி வாசிக்க தெரிந்த அனைவரிற்கும் புரியும் விசயம். இது தவராசாவிற்கு தெரியாததுதான் விசித்திரம்.

கணக்காய்வு மேற்கொள்ளாத விசாரணை அறிக்கை அது. ஐங்கரநேசன், குருகுலராஜா, டெனிஸ்வரன் மீது அது எழுந்தமான குற்றங்கள் சுமத்தியிருந்தது. அனேக குற்றச்சாட்டுக்கள் அதிகாரத்தை மீறி செயற்பட்டதென்பதே. 13வது திருத்தத்தின் மூலம் உருவான மாகாணசபை முறையின் அதிகாரங்கள் போதாதென போராடி வரும் இனமொன்று, அந்த அதிகாரத்தை மீறியதற்காக பொன்னாடைதானே போர்த்த வேண்டும்?

ஐங்கரநேசன் இலஞ்சம் வாங்கினார் என அறிக்கையில் எந்த இடத்திலும் குற்றம்சாட்டப்படவில்லை. ஒரேயொரு இடத்தில், ஒரு முதலீட்டாளரை நேரில் சந்திக்க அழைத்தது, இலஞ்சம் வாங்கவாக இருக்கலாமென ஊகத்தினடிப்படையில் குற்றம்சாட்டியிருந்தது. இந்த லொஜிக் எடுபடும் என்றால், யாழ் மாநகரசபையை ஈ.பி.டி.பி நிர்வகித்த சமயத்தில் நடந்த ஊழல்களில் தவராசாவிற்கும் ஒரு தொகை கொமிசன் சென்றதென யாரும் கூறலாம். ஏனெனில், அந்த நேரம் தவராசாவும் ஒரு முக்கியஸ்தர்தானே!

அதேபோல, வடக்கிற்கு தேவையற்ற கடல்நீரை சுத்திகரிக்கும் தொழிற்சாலையை அமைக்க தவராசா எடுத்த முயற்சிகள் ஒன்றும் இரகசியமல்ல. அந்த ஆலை திட்டத்தை முன்னகர்த்த, கொக்குவிலில் மதுபான விருந்துடன் தவராசா மேற்கொண்ட இரகசிய சந்திப்பும் ஊரறிந்தது. எழுந்தமானமாக குற்றம்சுமத்துவதெனில், இதற்கு பின்னால் ஏதோ டீல் இருப்பதாக சொல்லலாம் அல்லவா? ஆனால் அப்படி யாரும் சொல்லவில்லை. ஏனெனில் பொறுப்புணர்வின் அடிப்படையில் செயற்பட்டதே காரணம்.

இன்னொரு வளமாக தவராசாவின் கூஜா தூக்கும் அரசியலை புரிந்துகொள்ளலாம். ஐங்கரநேசனின் கூட்டத்திற்கு முதலமைச்சர் சென்றது வெட்கப்பட வேண்டியதாகுமாம். சரி வெட்கப்படலாம். ஐங்கரநேசனை போலத்தானே குருகுலராஜாவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். அந்த குற்றம் சுமத்தப்பட்ட பின்னர் சுமார் நான்கு தடவைக்கும் அதிகமாக சம்பந்தனும், குருகுலராஜாவும் ஒரே மேடையில் உட்கார்ந்து விட்டார்கள்.

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவருடன் ஒரே மேடையில் உட்கார, அவர் உரையாற்றுவதை கேட்டுக்கொண்டிருக்க சம்பந்தனிற்கு வெட்கமாக இல்லையா என வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா எத்தனை அறிக்கை விட்டுவிட்டார்?

தவராசாவின் பேச்சுக்களிற்கும் செயலிற்கும் உள்ள வித்தியாசத்தை புலப்படுத்தும் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிடுகிறோம். கடந்தவருடம் ஓகஸ்ட் மாதமளவில் வடமாகாணசபை அமர்வில் நடந்த சம்பவம் அது. பிறமாகாணசபைகள் சில தமது உறுப்பினர்களிற்கு வழங்கும் அதிக சலுகைகள், வசதி வாய்ப்புக்களை பற்றிய தகவல்களை முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் திரட்டிக்கொண்டு வர, வடமாகாணசபை அமர்வு சமயத்தில் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர், சபை அமர்வு நடந்து கொண்டிருந்த சமயத்தில் தனியாக இன்னொரு கூட்டம் வைத்து, எப்படி வசதி வாய்ப்புக்களை பெறுவதென திட்டம்போட்டனர். இது ஒருநாள் அல்ல, பலநாள் நடந்தது.

101வது அமர்வில் சபை அமர்வு நடக்கும் சமயத்தில் 40 நிமிடம் அமர்வை நடக்கவிடாமல் அஸ்மின், தவராசா, ஆனோல்ட் உள்ளிட்ட பலர் சலுகையை பெறும் கூட்டம் நடத்தினர். சபையை நடத்தும் கோரத்தை அவைத்தலைவர் 3 முறை ஒலிக்கவிட்டும், சலுகை உறுப்பினர்கள் அங்கு வரவில்லை. அவைத்தலைவர் அமர்வை நடத்த அணியும் அங்கியை கழற்றிவிட்டு, கௌரவ எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை தேடி வந்து, சபைக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்த பின்னரே அமர்விற்கு வந்தனர்.

உங்கள் சலுகைகளிற்காக மக்களின் வரிப்பணத்தை வீணாக்கினோம் என என்றைக்காவது எதிர்க்கட்சி தலைவர் வெட்கப்பட்டாரா? தவராசாவிற்கு வராத வெட்கம், எதற்காக விக்னேஸ்வரனிற்கு வர வேண்டும்?

தவராசாவின் அண்மைய அரசியல், அறிக்கைகள்- அரசியல் வாங்குரோத்தான ஒருவர் புதிய எஜமானர்களை தேடும் முயற்சியாகவும் இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here