விந்தையான உலகில் விலங்குகளின் விசித்திரங்கள் – விலங்குகளின் நுண்ணறிவும், உளவியலும்

காலிங்கராசா ஹரிச்சந்திரா,
தொழிநுட்ப அலுவலர்,
மீன்பிடியியல் விஞ்ஞானதுறை, விஞ்ஞான பீடம்,
யாழ் பல்கலைக்கழகம்.

நமக்குப் பசியெடுத்தால் சமைத்து சாப்பிடுகிறோம். ஆனால் விலங்குகள்? ஒன்றையொன்று சார்ந்து வாழ்கிற வாழ்க்கைதான் விலங்குகளுக்கு. இரையாவதும், இரையாகாமல் தப்பிப்பதுமே அவற்றின் வாழ்க்கை முறை. சில விலங்குகள் தங்களிடம் இருக்கும் சில சிறப்பு அம்சங்களை வைத்தே, இரையாகாமல் தப்பித்துக்கொள்ளும். பச்சோந்தி, மரப்பல்லி, பாலைவன பாம்பு போன்ற விலங்கினங்கள் சுற்றியிருக்கும் சூழலுக்கு ஏற்ப தங்களுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும்.

மான், கங்காரு போன்ற விலங்குகளுக்கு கால்களே கேடயம். எதிரிகள் வருவதைப் பார்த்துவிட்டால் போதும், இவை ஓட்டமெடுத்துவிடும். முயலும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். அதுவும் நேராக ஓடாமல் இடமும் வலமும் மாறி மாறி ஓடும். இந்தத் திசை மாற்றம், துரத்தும் எதிரியைக் குழப்பும். துரத்தும் விலங்கு ஓயும்வரை, முயல்கள் ஓடுவதை நிறுத்தாது.

அணில்கள் மரமேறுவதில் மட்டுமல்ல, ஒளிந்து கொள்வதிலும் தேர்ச்சி பெற்றவை. எதிரியைப் பார்த்துவிட்டால் போதும். உச்சாணி கிளைக்குத் தாவிவிடும். நிச்சயம் அதுவரை மற்ற விலங்குகள் வர முடியாது என்று அவற்றுக்குத் தெரியும். போஸம் எனப்படும் மரங்களில் வாழும் அமெரிக்க உயிரினம், தந்திரத்தால் தப்பித்துவிடும்.

சில விலங்குகள், இறந்த விலங்குகளைச் சாப்பிடாது. அதனால் எதிரியைப் பார்த்ததும் போஸம், இறந்ததுபோல சுருண்டு படுத்துவிடும். கண்கள் நிலைகுத்தி, நாக்கு வெளியே தள்ளி தத்ரூபமாக நடிக்கும். அதைப் பார்க்கும் வேட்டையாடும் விலங்குகள், அது இறந்துவிட்டதாக நினைத்து விலகிச் சென்றுவிடும்.

தப்பித்து ஓடுவதைவிட எதிரியை ஒரு கணம் ஸ்தம்பிக்க வைப்பதில் தேர்ச்சி பெற்றவை சில வகை தேரைகள். தன் முன்னால் எதிரி வந்ததுமே நுனிக்கால்களில் நின்றுகொள்ளும். முடிந்தவரை காற்றை உள்ளிழுத்து, உடம்பைப் பெரிதாக்கும். பார்த்துக்கொண்டிருக்கும்போதே மூன்று மடங்கு பெரியதாக மாறிய தேரையைப் பார்த்து எதிரி பயந்து ஓடிவிடும்.

இதேபோல ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு வகையில் தன்னைத் தற்காத்துக் கொள்வதோடு சில விந்தையான திறமைகளையும் கொண்டுள்ளன.

உதாரணமாக சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத்தான் எழுப்பும். ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும். ஒட்டகப் பறவை என்று நெருப்புக் கோழி அழைக்கப்படுகிறது. இது ஒட்டகத்தைப் போல பல நாட்கள் தண்ணீர் குடிக்காமலேயே வாழக் கூடியது என்பதால் அதற்கு இந்த பெயர்.

ஒரு மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தித் தள்ள முடியும். காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும். ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 லட்சம் குவளை பால் கொடுக்கும். டொல்பின்கள் ஒரு கண்ணை மட்டும் மூடிக் கொண்டு தூங்கும். நீலத் திமிங்கலம் எழுப்பும் ஒரு வித விசில் ஒலி, விலங்குகள் எழுப்பும் ஒலிகளிலேயே மிகவும் பலமானதாகும். அதன் அளவு 188 டெசிபல்கள். ஜெல்லி மீனில் 95 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. மனிதனுக்கு அடுத்தபடியாக சிந்திக்கும் திறன் உள்ள பிராணி சிம்பன்ஸி குரங்குதான்.

விலங்கு காட்சி சாலையில் புலி இளைஞரைக் கடித்தது, கிராமத்தில் வளர்க்கப்பட்ட பயிர்சேனைகளை பன்றிகள் நாசப்படுத்தி விட்டன, தொண்டமனாறு பகுதியில் முதலைகள் குடிமனைக்குள், தோட்டத்தில் புகுந்த யானைகள் காட்டுக்குத் திரும்பவில்லை, சிங்கராஜா அருகே சிறுத்தை நடமாட்டம்… இப்படிப்பட்ட செய்திகளில் ஏதாவது ஒன்றைத் தினசரிக் கேள்விப்படுகிறோம்.

இந்தச் சம்பவங்கள் மூலம் விலங்குகள் நமக்கு உணர்த்துவது என்ன? தேவையில்லாத வீண் பிரச்சினைகள், எப்போதும் பயம், நம்மை இயல்பாக வாழவிடுவதில்லை என்பதா? நிச்சயமாக இல்லை. இந்தச் சம்பவங்கள் அனைத்துக்கும் முழு காரணம் சம்பந்தப்பட்ட விலங்குகள்தான் என்று நாம் நம்புகிறோம். ஆனால், அதுவா உண்மை?

பிரதனமாக இயல்பு மாற்றம் – மனித நடவடிக்கைகளால் விலங்குகளின் இயல்பு எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பற்றி விலங்குகளின் நடத்தையை ஆராயும் ஆய்வாளரும், பத்திரிகையாளருமான ஜெஃப்ரி மொசெஃப் மேஸான் எழுதிய “பீஸ்ட்ஸ்“ புத்தகம், நமது புரிதலுக்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும். விலங்குகள், மனிதர்களிடத்தில் பகை உணர்வைக் காட்டுவதற்கு அவற்றின் உணவு மற்றும் வாழிடம் அழிக்கப்படுவதுதான் முதன்மைக் காரணம்.

இப்போது “கனிபலிஸம்” (Canibalism) எனப்படும் தன் இனத்தைத் தானே கொல்லும் இயல்புடையதாக சில விலங்குகள் மாறியிருக்கின்றன. மனிதர்களிடத்தில் காணப்படும் இந்தக் குணம், இதற்கு முன்பு விலங்குகளிடம் காணப்பட்டதில்லை. அதற்கு, நாம்தான் காரணம்.

அடுத்ததாக உணவு அழிப்பு – பொதுவாகவே புலியோ, சிங்கமோ அல்லது முதலையோ மனிதர்களைக் கொன்றுவிட்டால், உடனே அவற்றுக்கு “மனித இரத்த வாடை பிடித்துவிட்டது. அதனால் மனிதனை உணவாக்கிக் கொண்டுவிட்டது” என்று பலரும் பிதற்ற ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. உயிர்ச் சூழலில் உணவுச் சங்கிலி மிக முக்கியமானது. உலகைக் கட்டுப்படுத்தும் திறனைப் பெற்றிருப்பதால், உணவுச் சங்கிலியில் மனிதன் உச்சத்தில் இருக்கிறான். அதனால் தனக்குக் கீழே இருக்கும் உயிரினங்களை மனிதன் உணவாக உட்கொள்வானே தவிர, அந்த உயிரினங்களுக்கு எப்போதும் அவன் உணவாவதில்லை.

அடுத்து வளர்ப்பும் அத்துமீறலும் – விவசாயம் தோன்றுவதற்கு முன்பு மனித இனம், விலங்குகளை வேட்டையாடி உண்டது. அப்போது நாய், மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகள் வளர்ப்பு விலங்காக மாறியிருக்கவில்லை. விவசாயம் தோன்றிய பிறகு, தேவைக்கேற்ப விலங்குகளைப் பழக்கப்படுத்தி வளர்க்கும் கலாசாரமும் தோன்றியது. ஒரு கட்டத்தில் மனிதன் தன்னுடைய உணவுப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்காக, மற்ற உயிரினங்களின் உணவை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தான். தனது தேவைகளுக்காக அவற்றைப் பழக்கப்படுத்தினான். இதனால் மற்ற இரைகொல்லிகளுக்கு உணவு கிடைக்காத பிரச்சினை தோன்றியது.
இதைத் தொடர்ந்து அந்த இரைகொல்லி விலங்குகள், மனிதர்களின் வாழிடங்களுக்குள் நுழைய ஆரம்பித்தன. அவற்றை மனிதன் வேட்டையாடினான்.

ஒரு கட்டத்தில் இந்த வேட்டை குறிப்பிட்ட சில உயிரினங்களை அழிக்கும் நிலைக்கே இட்டுச் சென்றது. இதற்கு உதாரணமாக வடஅமெரிக்காவில் ஓநாய்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டதை சொல்லலாம். எப்படி என்றால், அங்கே ஒரு ஓநாய்கூட இல்லை என துடைத்தழிக்கப்படும் அளவுக்கு!

அதேபோல ஒரு காலத்தில் அமெரிக்காவில் 3-6 கோடி இருந்த அமெரிக்கக் காட்டெருமைகள், தற்போது 15,000 மட்டுமே இருக்கின்றன.

அடுத்தது போலி போட்டி – மனிதர்கள் செய்யும் இன்னொரு மிகப்பெரிய தவறு, விலங்குகளுக்கு உணவளிப்பது. சிம்பன்ஸி குரங்குகளைப் பற்றி பல வருடங்களாக ஆய்வு செய்துவரும் பிரபல ஆராய்ச்சியாளர் ஜேன் குடால் தனது அனுபவங்களைக் குறிப்பிட்டபோது, ‘ஆய்வுக்காகச் சில சிம்பன்ஸிகள் கூட்டமாகக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன. அவை காடுகளில் இருந்தவரை சுயமாக உணவு தேடிக்கொண்டன. ஆனால், இங்கே மனிதர்கள் உணவு வழங்க ஆரம்பித்ததில் இருந்து, அந்த உணவுக்காகச் சிம்பன்ஸிகள் போட்டி போட்டு அடித்துக் கொண்டன’ என்கிறார். விலங்குகளின் இயல்பு வலுக்கட்டாயமாகத் திரிக்கப்படுவதை, இதில் புரிந்துகொள்ளலாம்.

இறுதியாக வாழிட அழிப்பு – வாழிட அழிப்பாலும் விலங்குகளின் குணாதிசயங்கள் அதிகளவில் மாறுகின்றன. உதாரணத்துக்கு,“போலார் பீர்”(Polar Bear) எனப்படும் பனிக் கரடியை எடுத்துக்கொள்வோம். இது புலியைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிக இறைச்சியை உணவாக உட்கொள்ளும். பூமியில் மிக அதிகளவு இறைச்சியை உட்கொள்ளும் உயிரினம் இது.ஆனால், சமீப காலமாகத் தீவிரமடைந்துவரும் பருவநிலை மாற்றத்தால் (Climate change) அதற்கான உணவு முழுமையாகக் கிடைப்பதில்லை. எனவே, இவை மனித வாழிடங்களுக்குள் நுழைகின்றன.

இப்போது கனடாவில் உள்ள ஹட்சன் பே, பனிக் கரடிகளின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. காரணம், பனிக் கரடிகளின் வரவு அந்த அளவுக்கு அதிகரித்து விட்டதுதான். ஊருக்குள் வரும் பனிக் கரடிகளைப் பிடிப்பதற்காகவே அங்கு ‘பியர் போலீஸ்’ என்ற படை உருவாக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் வரும் கரடிகளைப் பிடித்த பின்னர் விலங்கு காட்சிசாலையில் விட்டுவிடுகிறார்கள். ஒரு நாளைக்குச் சுமார் 80 கி.மீ. தொலைவு சுற்றக்கூடிய இயல்பு கொண்டவை பனிக் கரடிகள். இவற்றைக் குறுகிய விலங்கு காட்சி சாலை அறைக்குள் பூட்டி வைத்தால், அவை என்ன செய்யும்? அறையில் இருக்கும் மற்றொரு பனிக் கரடியைக் கொன்றுவிடும் சம்பவங்கள் தான் நடைபெறும்.

ஆக, அவற்றின் இயல்பான வாழிடங்களுக்கு மாறாகப் புதிய இடத்தில் அடைக்கப்படும்போது, அவற்றின் இயல்பு மாறுவது தெளிவாகிறது.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, விலங்குகளுடன் மனிதர்கள் இணக்கமாக வாழவே முடியாதா என்ற கேள்வி எழுகிறது.

ஏன் முடியாது? வட ஆபிரிக்கப் பகுதியான மொரியானாவில் நைல் முதலை வகை கிட்டத்தட்ட அழிந்துவிட்டது என்று இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) 1992-ம் ஆண்டு கருதியது. ஆனால், இன்றைக்கு அங்கு அவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. அதற்குக் காரணம், அப்பகுதி மக்கள் அவற்றை வேட்டையாடுவதில்லை. ‘வேட்டையாடினால் தங்கள் குடும்பத்துக்கு ஆகாது’ என்று அவர்கள் நம்புகிறார்கள்.

அதேபோல, கானா நாட்டிலும் முதலைகள் கொல்லப் படுவதில்லை. முதலைகள் இருக்கும் அதே நீர்நிலையில் மக்கள் குளிக்கிறார்கள். அதன் கரையிலேயே மண்பாண்டம் செய்கிறார்கள். இதன் மூலம் முதலைகள் மனிதர்களிடம் மறைமுகமாகக் கூற விரும்பும் செய்தி இதுதான்: நீ வாழு, எங்களையும் வாழவிடு.

விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் குறித்து ஆராய்ந்து வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தியவர் அமெரிக்க உளவியல் நிபுணர் பர்ஹஸ் ஃபிரெடரிக் ஸ்கின்னர். விலங்குகளின் சரியான நடத்தை முறை உத்தியைப் பயன்படுத்தி, மனிதர்கள் நடந்துகொள்ளும் முறையை மேம்படுத்த முடியும் என்று நம்பினார். விளைவுகளைப் பொறுத்தே உயிரினங்களின் நடத்தை முறைகள், எதிர்வினைகள் அமைகின்றன என்பதைக் கண்டுபிடித்தார். உயிரினங்களின் நடத்தையைப் பகுப்பாய்வு செய்து அறிய ஆபரன்ட் கண்டினிங் கூண்டு ஒன்றை உருவாக்கினார். இது ‘ஸ்கின்னர் பொக்ஸ்’ என்றழைக்கப்படுகிறது. எலிகள், புறாக்கள் ஆகியவை, தாங்கள் வாழும் சூழலுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை இதன் உதவியுடன் ஆராய்ந்து வந்தார் ஸ்கின்னர். சூழலுக்கு ஏற்ப அவை தங்களது நடத்தை முறைகளை எவ்வாறு மாற்றிக்கொள்கின்றன என்பதையும் கண்டறிந்தார். இப்படிக் கண்டறிந்தவற்றைத் தொகுத்து ‘தி பிஹேவியர் ஒஃப் ஓர்கானிசம்ஸ்’ என்ற கட்டுரையை எழுதி வெளியிட்டார்.

“குழந்தைகளுக்குப் பொருத்தமான பரிசுகள், தண்டனைகளை வழங்கி அவர்களது பழக்க வழக்கங்களை திருத்திக்கொள்ள உதவுங்கள். அதன் மூலம், அவர்களை நல்ல குடிமக்களாக மாற்ற முடியும்” என்று இந்த நாவலில் கூறியுள்ளார். குழந்தைகள் கற்றுக்கொள்ளும் முறை குறித்து ஆராய்ந்தார். ‘தி டெக்னாலஜி ஓஃப் டீச்சிங்’ என்ற நூலை கூட எழுதியுள்ளார்.

பழங்குடியினர் விலங்குகள், பிராணிகளின் நடவடிக்கைகளைக் கொண்டு சில இயற்கை அனர்த்தங்களை முன்கூடியே அறிந்து கொண்டர். எடுத்துக்காட்டாக, எதிர்பாராத மழை வெள்ளத்தை விலங்குகள், பிராணிகளின் நடவடிக்கைகளைக் கொண்டு அசாம் பழங்குடியினர் கணிப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. லூதியானாவைச் சேர்ந்த, மத்திய அறுவடைக்குப் பிந்தைய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானி அர்மான் யு முஸாட்டாடி இதுதொடர்பாக ஆய்வு செய்துள்ளார். திடீர் பருவநிலை மாற்றம் குறிப்பாக கனமழையால் ஏற்படும் வெள்ளத்துக்கு முன்பாக வெட்டுக்கிளிகள் தங்களது மறைவிடத்தை விட்டு வெளியேவந்து, தாறுமாறாக பறக்கும், வீடுகளுக்குள் புகுந்து விடும். அதேபோன்று எறும்புகள் குழியிலிருந்து முட்டை, உணவுகளுடன் மேட்டுப்பாங்கான இடத்துக்கு நகரும். இது வெள்ளம் வருவதை உணர்த்தும் அறிகுறி. உயரமான இடத்திலிருந்து நரி நெடுநேரமாகஊளையிட்டால் அது நீண்ட வறண்ட காலத்தையும், தாழ்வான பகுதியிலிருந்து நெடுநேரம் ஊளையிட்டால் அது அதிக வெள்ளம் வரப்போவதற்கான வாய்ப்பையும் குறிக்கும்.

புறாக்களின் அழுகையும் பருவ நிலையைக் கணிக்கும் ஒன்றுதான். கனமழை, பெருவெள்ளம் வருவதற்கு முன்பு தவளை, தேரைகள் தொடர்ந்து சத்தமிடும். அசாம் மாநிலத்தில் தேமாஜி மாவட்டத்தில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படும். இங்கு வாழும் மிங், போடோ, ரபா பழங்குடியினர் மற்றும் மீனவர்கள் இயற்கை அறிகுறிகளை வைத்தே தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். பல நூறு ஆண்டுகளாக இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்து வரும் இம்மக்கள் தங்களின் அனுபவம், கிரகிக்கும் தன்மை ஆகியவற்றின் மூலம் வெள்ள அபாயத்தை சமாளிக்கின்றனர்.

நிறைவாக முன்னோர்கள் சொல்வதை போல எறும்புகளிடமிருந்து சுறுசுறுப்பையும், தேனிகளிடமிருந்து கடின உழைப்பையும், காகங்களிடமிருந்து ஒற்றுமையையும், நாய்களிடமிருந்து நன்றியுணர்வையும்,சிலந்தியிடமிருந்து விடாமுயற்சியையும், யானையிடமிருந்து தலைமைத்துவத்தையும் கற்றுக்கொள்வதோடு அவற்றை தொந்தரவு செய்யாமலும் இருக்க வேண்டும். மனிதனில் உருவாகும் தீய எண்ணங்களை “மிருக குணம்” என்று வருணிப்பதை நிறுத்திக்கொண்டு, இப் பூமியின் உன்னதத்தை அனுபவித்து வாழுங்கள். முடியவில்லையா… வாழ பழகிக்கொள்ளுங்கள். வேண்டும். யாரும் யாவர்க்கும் சமமே….!

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here