இந்த இரண்டு போராளிகள் சரணடைந்திருக்கா விட்டால் யுத்தம் வேறுவிதமாக திரும்பியிருக்குமா?: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 63


பீஷ்மர்

பால்ராஜிற்கும் பிரபாகரனிற்குமிடையிலான உறவில் கணிசமான விரிசலை ஏற்படுத்தியது பால்ராஜின் திருமணப் பிரச்சனை என்பதை கடந்த வாரம் குறிப்பிட்டோம். நேரடியாக அந்த விவகாரத்திற்குள் நுழையாமல், வேறொரு விடயத்தை குறிப்பிட வேண்டும்.

மன்னார் முனையையும் மணலாற்றையும் இணைத்து மண்அரண் அமைக்கும் திட்டத்தை பால்ராஜ் முன்வைத்தபோது, கணிசமான தளபதிகள் அதை நிராகரித்ததை குறிப்பிட்டோம். இதேகாலப்பகுதியில் இன்னொரு விடயமும் நடந்தது.

புலிகளுடனான சமாதான பேச்சுக்கள் குழம்ப ஆரம்பித்ததும் அரசு நீண்டபோருக்கு தயாரானது. இராணுவத்தின் கட்டமைப்பில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. இலங்கை படைக் கட்டுமாணத்தில் தனித்தனியாக இயங்கிய புலனாய்வு சேவைகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, புலனாய்வு தகவல்களை நிரல்படுத்தி, ஒவ்வொரு புலனாய்வுசேவைக்கும் கடமைகள் பிரித்து கொடுக்கப்பட்டன. முப்படைகளும் நவீனமயப்பட்டுத்தப்பட்டது. இதன் ஒரு கட்டமான 58வது டிவிசன் உருவாக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளிற்கு கோத்தபாய தலைமைத்துவம் கொடுத்தார். சரத் பொன்சேகா நடைமுறைப்படுத்தினார்.

58வது டிவிசன் படையினருக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டன. முழுமையான ஒரு தாக்குதல் டிவிசனாக உருவாக்கப்பட்டது. பிரிகேடியர் சவேந்திர சில்வா அதன் கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்த படையணி மன்னாரின் தள்ளாடி முகாமில் நிலைகொண்டிருந்தது.

வன்னி யுத்தமுனையை மன்னாரில் இருந்துதான் இராணுவம் ஆரம்பிக்கப் போகிறது, 58வது டிவிசன்தான் யுத்தத்தின் பிரதான பாத்திரம் வகிக்கப் போகிறதென்பதை பால்ராஜ் முன்னரே கணித்தார். வெளிப்படையாக சொன்னால், விடுதலைப்புலிகளின் உயர்மட்ட தளபதிகளில் வேறு யாரும் இதை கணித்ததாக தெரியவில்லை. தனது திட்டங்களை அமைப்பு ஏற்றுக் கொள்ளுகிறதா இல்லையா என்பதை பற்றி பால்ராஜ் கவலைப்படவில்லை. தனது கடமையை செய்ய வேண்டுமென விரும்பினார்.

இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் குறிப்பிட வேண்டும். மன்னாரில்தான் தாக்குதலை நடத்த வேண்டுமென திட்டமிட்ட பால்ராஜ், தலைமைத்துவத்தின் அனுமதி பெறாமல், தள்ளாடி படைமுகாமின் வேவுத் தரவுகளை திரட்டத் தொடங்கினார். முன்னர் விசேடவேவு அணியென ஒரு பிரிவு இருந்தது. மூன்றாம் ஈழப்போரின் இறுதிக்காலங்களில் அந்தப்படையணி செயலிழந்து விட்டது. இந்த சமயத்தில் புலிகள் ஆயுதங்களையே நம்பியிருந்தனர். மூன்றாம் ஈழப்போரின் இறுதியின் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் இராணுவத்தை அடித்து விரட்டும் வல்லமையை புலிகள் பெற்றிருந்தார்கள். அதற்கு காரணம்- புலிகளின் சூட்டு வலு. எறிகணைகள், தரையில் பாவிக்கப்பட்ட கனரக ஆயுதங்களால் இராணுவத்தை விட சூட்டு வலுவில் புலிகள் மேலோங்கியிருந்தனர். இதனால் முன்னரைப் போல, வேவுத்தரவுகள் திரட்டியே தாக்குதல் நடத்த வேண்டுமென்ற நிலைமையிருக்கவில்லை.

விசேடவேவு அணி செயலிழந்ததும், அந்த அணியில் இருந்தவர்கள் தீபன், பால்ராஜ் ஆகியோரின் அணிக்கு சென்றுவிட்டனர். காரணம், அது வன்னி படையணியின் கணிசமான போராளிகளால் உருவாக்கப்பட்டிருந்தது. வன்னி படையணி போன்ற தோற்றத்தையே கொண்டிருந்தது.

அந்த அணியிலிருந்து வந்தவர்களை பால்ராஜ் பயன்படுத்தினார்.

ஒரு வேவு அணியை உருவாக்கி தள்ளாடிக்குள் அக்குவேறு ஆணிவேறாக வேவுத் தரவுகளை திரட்டினார். வேவுத்தரவுகள் திரட்டுபவர்கள், தாக்குதலிற்கு சற்று முன்னர்வரை அதை நிறுத்த மாட்டார்கள். வேவுத்தகவல்களை இறுதி செய்தபின் முகாமின் வரைபடத்தை தயார் செய்வார்கள். அதன்பின், தாக்குதல் திட்டத்தை வரைந்து, அணிகளிற்கு பணிகளை பிரித்து வழங்குவார்கள். பின்னர் பயிற்சி ஆரம்பிக்கும். பயிற்சி நடந்து கொண்டிருந்தாலும் வேவு அணிகள் தமது பணியை நிறுத்தமாட்டார்கள். ஏனெனில், இராணுவத்தின் நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு, திட்டம் குழம்பிவிடக்கூடாதென்பதற்காக இப்படி செய்வார்கள்.

பால்ராஜூம் வேவுக்கு அணிகளை இறக்கி, வரைபடம் தயாரித்து, தாக்குதல் திட்டமொன்றை தயார்செய்தார். இதன் பின்னர்தான் தலைமையிடம் விடயத்தை கொண்டு சென்றார். பால்ராஜின் திட்டத்தில் உறுதியான முடிவெடுக்க முடியாத நிலைமையில் தலைமையிருந்தது. காரணம், யாழ் தாங்குதலிற்காக புலிகள் பெருமளவு மனரீதியாக தயாராகி விட்டார்கள். யாழ் தாக்குதலே அதிக பலன் தருமென பெரும்பாலான தளபதிகள் நினைத்தார்கள்.

இந்த இழுபறிக்குள் ஒரு துரதிஸ்டவசமான சம்பவம் நடந்து விட்டது.

இந்த சமயத்தில், வேவுக்கு சென்ற சமயத்தில் இரண்டு போராளிகள் தப்பிச்சென்று இராணுவத்தினரிடம் சரணடைந்து விட்டனர். அவர்களை இராணுவம் கைது செய்ததா அல்லது சரணடைந்தார்களா என்பது சரியாக தெரியாது. ஆனால், சரணடைந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

இப்படி வேவுப்பணிக்காக செல்வர்கள் இராணுவத்திடம் சிக்கும் சம்பவங்கள் நடப்பதுண்டு. தமது முகாமிற்குள் புலிகளின் வேவு அணிகள் நடமாடும் தடயங்களை இராணுவம் கண்டால், அவர்களும் பொறி வைத்து பிடிக்க முயற்சி செய்வார்கள்.

இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்யமான தகவலை குறிப்பிட வேண்டும்.

இராணுவ முகாமிற்குள் புலிகளின் வேவு அணிகள் இரவில் நுழையும்போது, மிகமிக இரகசியமாக- காவல்கடமையில் உள்ள சிப்பாய்களிற்கு தெரியாமல்தான் உள்நுழைவார்கள். எல்லா விடயத்திலும் மறுசாத்தியம் உண்டல்லவா. சில சமயங்களில் ஏதாவது வில்லங்கமாகி, வேவு அணிகளை சிப்பாய்கள் கண்டுவிடுவதுண்டு.

காவல் கடமையிலுள்ள சிப்பாய் கண்டுவிட்டார் என வேவு போராளி உணர்வதும், வேவுப்போராளி அவதானித்துக் கொண்டிருப்பதை காவல் கடமையிலுள்ள சிப்பாய் உணர்வதும் மிக குறைந்த கணத்தில் நிகழும் சம்பவம். அப்போது, இருவரும் பொறுமையாக இருந்தால்- பல சந்தர்ப்பங்களில் சிப்பாய்கள் பேசாமலேயே இருந்து விடுவார்கள். தாக்குதலிற்கு வரவில்லை, வேவுக்கு வந்திருக்கிறார்கள், சண்டைபிடித்து வில்லங்கப்படாமல் தெரியாததை போல இருந்து விடுவோம் என சிப்பாய்கள் இருந்து விட்ட சந்தர்ப்பங்கள் பல உள்ளன.

வேவு அணிகளை கண்டதும், காணாததை போல பெரிதாக பாடியபடியோ, சீட்டியடித்தபடியோ சற்று விலகி சென்றுவிட்ட பல சுவாரஸ்ய சம்பவங்கள் உள்ளன.

அதேபோல, முகாமிற்குள் நுழைந்த புலிகளின் அணியை விரட்டி விரட்டி வேட்டையாடிய சம்பவங்களும் உள்ளன. இரண்டும் வெவ்வெறானவை. குறிப்பாக? ஆனையிறவு பெருந்தளத்திற்குள் புலிகளின் வேவு அணிகள் நீண்டகாலமாக செயற்பட்டன. ஆனையிறவை வேவு பார்ப்பதற்கு என்றே செம்பியன் விசேட வேவு அணியென்ற அணியை புலிகள் உருவாக்கியிருந்தனர். அந்த அணியின் சில போராளிகள், ஆனையிறவிற்குள் இராணுவத்திடம் உயிருடன் சிக்கியிருந்தனர்.

தள்ளாடிக்குள் இரண்டு போராளிகள் சரணடைந்ததும், மன்னார் தாக்குதல் திட்டத்தை புலிகள் கைவிட்டனர்.

இதன்பின்னர், அமைப்பிற்குள் இந்த தகவல் பரவி, பெரும்பாலானவர்கள் இதை அறிந்திருந்தார்கள்.

பால்ராஜ் மன்னார் களமுனையை மையப்படுத்தி இரண்டு திட்டங்களை பரிந்துரைத்தார். இரண்டையுமே புலிகள் கணக்கில் கொள்ளவில்லை. ஒருவேளை பால்ராஜின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இன்று எப்படியான நிலைமை இருந்திருக்கும்?

பால்ராஜின் திருமண விவகாரத்தை இந்த வாரம் எழுதுவதாக சொல்லியிருந்தோம். ஆனால் அது எழுதப்படவில்லையே என யோசிக்கிறீர்களா? அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.

(தொடரும்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here