சிவலிங்க விளையாட்டு

♦ மதுசுதன்

தாயகப் பகுதிகளில் ஆங்காங்கே திடீர் சிவலிங்கங்கள் முளைத்து எழுந்தருளியிருப்பதை கண்கூடாக காணக்கூடியதாக இருக்கிறது.

உண்மையிலேயே சைவம் உலகத்தின் ஒரு பொது மறை சமயமாக வீறுகொண்டு எழுந்து கம்பீரமாக எத்தனையோ பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இந்த உலகத்திலே வியாபித்து இருந்தது. ஆதி சிவலிங்க வழிபாடுகள் தோற்றம் பெற்று உலகம் முழுவதிலும் மற்ற சமயங்கள் தோன்றுவதற்கு முன்னோடியாக தாய் மதமாக கருதப்பட்டது இந்த சிவ லிங்க வழிபாடு.

சிவலிங்க வழிபாட்டின் காரணமாக இப்போதும் பல ஆலயங்கள் சிவலிங்கங்கள் இந்திய கண்டங்கள், மற்றும் மியான்மார், வியட்நாம், அவுஸ்திரேலியா, மேற்கத்திய நாடுகளில் சிவலிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்கள் உலகத்தின் ஆரம்ப ஆதி சமயமாக சைவம் இருந்ததை மேலும் எடுத்தியம்புகிறது.

சிவலிங்க வழிபாடானது ஒரு ஆலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்பட்டு வழிபடப்பட்டு வந்தது, அல்லது தான் தோன்றீஸ்வரர் ஆக, சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய சுயம்புலிங்கங்களை மக்கள் பிரதிஷ்டை செய்து அதை ஆலயமாக்கி வழிபட்டு வந்தார்கள். சிவலிங்க பிரதிஷ்டை என்பது ஒரு சைவ மரபு சார்ந்து, அது புனிதமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு சைவ மக்கள் வழிபட வழிவகை செய்யப்படுகிறது.

இன்று வடக்கில் மாற்று மத ஆக்கிரமிப்பு என்றதை தடுக்கும் முகமாக, அதற்கு எதிராக செயல்படப் போகிறோம், சைவத்தை வளர்கப் போகிறோம் என்ற தொனிப்பொருளில் என்னவோ திடீர் திடீரென ஆங்காங்கே சிவலிங்கங்கள் முளைக்கின்றன.

மண்கும்பிகள் மேலும் ,கடும் வெயில் சார்ந்த ஒரு இடத்தின் மேலும் , மக்கள் போக்குவரத்து நிறைந்த ஒரு அசுத்தமான இடங்களிலும், அல்லது ஒரு நகரத்தின் நுழைவு மையத்திலும் திடீரென சிவலிங்கங்கள் முளைத்திருப்பது சைவ மரபைப் மேலோங்க வைக்கும் ஒரு செயற்பாடா அல்லது சைவத்தை கீழோங்க வைக்கும் செயற்பாடா என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

ஒரு சைவத்தின் மேலோங்கிய வழிபாடாக கருதப்படுகிற சிவலிங்க வழிபாடானது உரிய முறையில் உரிய இடத்தில் பொருத்தமான இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு அது தொடர்ச்சியாக பூசை வழிபாடுகளுடன் வழிபட வேண்டிய ஒரு விடயம்.
அது ஆராதிக்கப்பட வேண்டிய ஒரு மகோன்னத திருப்பொருள், ஆனால் இங்கு சிலரால் சைவத்தின் பெயர்கொண்டு மக்கள் இல்லாத இடங்களிலும், அழுக்கான மண்கும்பங்கள் மேலும், அசுத்தமான இடங்களிலும், அல்லது நகரத்தின் நுழைவாயிலில் அசுத்தப்படக்கூடிய இடங்களிலும் திடீரென கடும் வெயிலுக்கு மத்தியில் எந்த ஒரு பிரதிஷ்டையும் செய்யப்படாமல் சிவலிங்கங்களை ஏதோ சுயம்புலிங்கம் ஆக மாற்றி இரவோடிரவாக உருவாக்கிவிடுவது சைவத்தை இழிவுபடுத்தும் ஒரு தோற்றப்பாடு என எண்ணத் தோன்றுகிறது.

சைவத்தின் மகத்தான வழிபாட்டு முறையாக இருக்கின்ற சிவலிங்க வழிபாடானது இவ்வாறான தான்தோன்றித்தனமான செயல்களால் அதனுடைய மகத்துவம் அழிந்துவிடும் அபாயத்தில் தள்ளப்பட்டு விடுமோ என்கிற மக்களினுடைய உள்ளக்கிடக்கை வெளிப்பட்டு நிற்கிறது.

சில ஆக்கிரமிப்பு மதங்கள், அவர்களுடைய செயற்பாடுகளுக்கு எதிராக இந்த செயற்பாடுகளை கருதினாலும் மாற்று மதத்தவர்கள் உடைய மத ஆக்கிரமைப்பை தடுக்கும் முகமாக ஒரு பாரம்பரிய சைவ மரபு மிக்க ஒரு வழிபாட்டு முறையான சைவர்களின் தனித்துவ அடையாளமாக இந்த சிவலிங்க வழிபாட்டை திடீரென ஒரு அசுத்தமாமான இடத்தில் இரவோடிரவாக அநாதரவாக வைத்து விடுவது அல்லது அதை தொடர்ச்சியாக பூசிக்காமல் ஏதோ ஒரு காட்சிப் பொருள் போல அங்கே காட்சிப்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு சைவத்தின் கீழ்த்தரமான விளையாட்டாகத் தான் பார்க்க முடியும்.

சைவம் அழிந்து வருகிற அல்லது ஆக்கிரமிக்கப்படுகிறது என கருதப்படும் பிரதேசங்களில் இவ்வாறான ஒரு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் எந்த பிரதேசங்களில் சைவர்கள் அதிகமாக செறிந்து வாழ்கிறார்களோ அந்த இடங்களில் சிவலிங்கங்களை திடீர் திடீரென வைப்பது ஏன் என்பது புரியவில்லை.

எத்தனையோ பிரதேசங்கள் வவுனியா மன்னார், கிழக்குப் பகுதிகள், முல்லைத்தீவு பகுதிகள் எனப் பல பிரதேசங்கள் ஆக்கிரமிப்பு மதங்களால் ஆக்கிரமிக்கப்படுகிறது சைவத்தை காக்கும் நோக்கத்தில் செயல்படுபவர்களாயின் அங்கு இவ்வாறான சித்து விளையாட்டுக்களை செய்வது வரவேற்கத்தக்கது.

அவ்வாறான இடங்களில் துணிந்து நின்று இந்த சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்ய வேண்டுமே ஒழிய சைவர்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களில் இவ்வாறு உரிய முறையில் பிரதிஷ்டை பண்ணபடாமல் இரவோடிரவாக சிவலிங்கங்கள் வைக்கப்படுவது எந்த வகையில் நியாயம் என புரியவில்லை?

அண்மையில் திருக்கோணேஸ்வர நுழைவாயில் வைக்கப்பட்ட சிவலிங்கங்கள் அடித்து நொறுக்கப்பட்ட போது, சைவ மரபு தழைத்தோங்கிய சிவபக்தன் ராவணேஸ்வரன் ஆண்ட திரிகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற செயற்பாட்டிற்கு சைவப் பிரியர்கள் என்ற வீதியில் இவர்களுடைய நடவடிக்கைகள் என்னவாக அமைந்தன.

அவ்வாறான செயற்பாடு நடைபெற்றபோது இங்கு செய்யப்பட்ட நடவடிக்கைகள் அங்கு ஏன் சைவ மரபு காக்கப்படாமல் போனது? அங்கே அல்லவா 108 சிவலிங்கங்களை உடனடியாக பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும்.

அல்லது இது வேறு விஷமிகளினுடைய செயற்பாடுகளா என்பதும் மக்களினுடைய சந்தேக கண்ணோட்டத்தில் இருக்கிறது. அதாவது வேறு மாற்று மதத்தவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை தூண்டிவிட்டு அதன் பின்னணியில் ஒரு மத அரசல் புரசல் களை உருவாக்கி விட்டு பின்னர் அவ்வாறான இடங்களில் வெவ்வேறு மதங்களில் உடைய ஸ்தலங்களை நிர்மாணிப்பதற்கு உரிய ஒரு ஏதுநிலைகள் அல்லது கொதிநிலைகளை உருவாக்கிவிடும் என்ற மக்களினுடைய கண்ணோட்டமும் காணப்படுகிறது.

மாற்று மதங்களின் ஆக்கிரமிப்புக்களுக்கு சமாந்தரமாக போட்டி போடுவதற்காக சைவத்தை கீழ்த்தர படுத்துவதுவதும், ஒரு சரியான முறையில் பிரதிஷ்டை செய்யப்படாமல் சிவலிங்கங்களை ஒரு அசுத்த பிரதேசங்களிலேயே கொண்டே வைத்துவிட்டு தின பூசிப் இல்லாமலும் அல்லது நடு வெயிலில் மத்தியிலே கவனிப்பாரற்றுக் கிடக்கும் ஒரு நிலையிலும் இருக்கின்ற போது அதைத் தாண்டிப் போகும் அனைத்து சைவர்களும் தங்களுக்குள் ஒரு வினாவை எழுப்பி விட வேண்டும்.
இது சைவத்தை சீர்தூக்கும் முறையா? அல்லது சீரழிக்கும் முறையா?

“மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here