எனது காதலைப் பிரித்த நண்பியை என்ன செய்யலாம்?: மனமே நலமா?

உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்
பதிலளிக்கிறார்
கு.நக்கீரன்
உளவள ஆலோசகர்

சுமித்திரா,
வரணி.

கேள்வி: நான் ஒரு பெண். வயது 28. நான்கு வருடங்களுக்கு முன் வீட்டை எதிர்த்துக் காதல் திருமணம் செய்து கொண்டேன். இதனால் எம் இரு வீட்டாரும் எம்முடன் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. இப்போது எனது பெற்றோருடன் எனக்கு சமரசம் ஏற்பட்டு விட்டதால் அவர்கள் எம் வீட்டிற்கு வந்து செல்கின்றனர். ஆனால் எனது கணவர் எனது பெற்றோரிடம் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. இப்போதெல்லாம் நான் என்ன தவறு செய்தாலும் என பெற்றோரையும் திட்டுகின்றார். இவர் ஏன் இப்படி? இவரை எப்படிச் சமாளிப்பது என்றே தெரியவில்லை. எனக்கு ஒரு நல்ல முடிவு சொல்லுங்கள்.

பதில்: காரணம் இல்லாமல் உங்கள் கணவர் உங்கள் பெற்றோர் மீது கோபிக்க மாட்டார் சகோதரி. நீங்கள் 4 வருடங்களுக்கு முன் பெற்றோர் எதிர்ப்பின் மத்தியில் பெற்றோரை விட்டு சென்ற போது உமது பெற்றோர் உமது காதலன் பற்றி கடுமையான கருத்துக்களைக் கூறியிருக்கலாம். அது சிலவேளைகளில் அவர் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்திருக்கலாம். அதுதான் வள்ளுவரே கூறிவிட்டாரே ‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்று. அப்படியில்லாவிடின் எமது சமூகத்தில் உள்ள அநேக இளைஞர்களைப் போல காதலிக்கும்போது ‘நீ மட்டும் வேண்டும்’ என்று கூறி கூட்டி வந்தவர் இப்போது வாழ்க்கைச் செலவு கூடியுள்ளதால் உமது வீட்டில் இருந்து வர வேண்டிய சீதனத்தை எதிர்பார்த்து திட்டம் தீட்டுகிறாரோ தெரியவில்லை. எதற்கும் உங்கள் கணவருடன் ஆறுதலாக, அமைதியாகப் பேசிப் பாருங்கள். கட்டு அவிழலாம். நீங்கள் பெற்றோருடன் ஒன்று சேர்ந்ததைப் போல் தன்னால் ஒன்று சேர முடியவில்லையே என்ற ஆதங்கமும் ஒரு காரணமாக இருக்கலாம். இல்லாவிட்டால் அவரது பெற்றோருடன் அவரைச் சேர்த்து வைக்க முயலுங்கள். எது எப்படியோ, வாழ்க்கை ஒரு விளையாட்டுத்தானே. விளையாடிப் பாருங்கள். நல்லதொரு அனுபவம் கிடைக்கலாம்.

வர்ஷினி,
மானிப்பாய்.

கேள்வி: நான் ஒரு பெண். வயது 22. என்னோடு ஒன்றாகப் படித்த ஒருவரை நான் காதலித்தேன். அவரும் என்னை மிகவும் காதலித்தார். எமது காதல் அனுபவங்களை எனது நண்பியிடம் அடிக்கடி கூறுவதுண்டு. ஒரு வருடத்திற்கு முன் எனக்கும் எனது காதலருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து விட்டோம். எனக்கும் காதலருக்கும் சண்டை ஏற்பட்டு நாம் பிரிந்ததற்கு எனது நண்பிதான் காரணமென இப்போது அறிகிறேன். எனது காதலரை நண்பியும் காதலித்தாராம். எனது நண்பி இப்படிச் செய்வார் என்று நான் நினைக்கவேயில்லை. அவர் விடயத்தில் நான் என்ன செய்வது?

பதில்: சகோதரியே! இப்படிக் காதலனை நண்பியிடம் பறிகொடுத்த முதலாவது பெண்மணி நீங்கள்தான் என்று நினைக்க வேண்டாம். இப்படியான நண்பிகள் தொன்று தொட்டு இன்றுவரை உள்ளவர்கள்தான். என்றாலும் நீங்கள் அதிர்ஷ்டமுள்ள பெண் தான். ஏனென்றால் நீங்கள் காதலனைத் திருமணம் செய்தபின் உங்கள் நண்பி தட்டிப் பறித்திருந்தால் உங்கள் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக அல்லவா இருந்திருக்கும்? அதுபோல் காதலிக்கும் போதே எங்களைக் கைவிட்டு விட்டு அடுத்த பெண்ணைக் காதலித்த உங்கள் காதலன் திருமணத்தின் பின் இதைச் செய்திருந்தால் நிலைமை என்னவாயிருக்கும்?. இன்று நம் நாட்டில் ஏராளமானவர்கள் இப்படி ‘ஆப்பிழுத்த குரங்கான’ நிலையிலேயே மனதுக்குள் அழுதழுது வாழ்கின்றார்கள். உங்களுக்கு அப்படியொரு நிலையை ஆண்டவன் தரவில்லையே என்று ஆண்டவனுக்கு நன்றி கூறுங்கள். நான் உங்களுக்குக் கூறக்கூடிய ஒரு உண்மை- காதலின் இருப்பையும், காசின் இருப்பையும் ஒருநாளும் நட்புகளுக்குக் கூறாதீர்கள். ஏனென்றால் எல்லா மனிதர்களும் எல்லா நேரத்திலும் உண்மையானவர்களாக இருப்பதில்லை. நல்ல மனதுடன் இருங்கள். நல்ல வாழ்க்கையே அமையும்.


சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் உள்ளதா? உடனே எமக்கு எழுதி அனுப்புங்கள். மனநல நிபுணர்கள் உங்கள் பிரச்சனைகளிற்கான தீர்வை தர தயாராக இருக்கிறார்கள்.

pagetamilmedia@gmail.com 
அல்லது
0766722218

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here