படித்துக்கொண்டே ‘பார்ட் டைமாக’ வேலை செய்ய விருப்பமா?- வருமானம் தரும் சில துறைகள்?

©தமிழ்பக்கம்

இப்பொழுது மாணவர்கள் மிக அட்வான்ஸாக சிந்திக்கிறார்கள். பல்கலைகழகம் வரை படித்து, அரசாங்கம் நியமனம் தந்ததன் பின்னர்தான் வேலைக்கு போவோம்- அதுவரை வீட்டில் “தண்டச்சோறு“ என்ற அப்பாவின் திட்டலை வாங்கிக்கொண்டிருப்போம் என்ற பழைய கால போர்முலாவையெல்லாம் தூக்கி வீசிவிட்டார்கள். இப்பொழுது படித்துக்கொண்டு வேலை செய்து, கெத்து காட்ட தொடங்கிவிட்டார்கள் இளசுகள்.

ஆனால் பகுதிநேரமாக வேலைசெய்ய எந்ததுறைகள் உகந்தவை என்ற தெளிவு மாணவர்களிடம் குறைவு. குறுகியகால பயிற்சி, அதிக வருமானம் என்ற கலவையில் இந்த பகுதியை தயார் செய்துள்ளோம். க.பொ.த உயர்தரம் முடிந்த மாணவர்கள், அடுத்த கட்டத்திற்குள் நுழைவதற்குள் இதில் ஏதாவதொரு குறுகியகால தொழில்பயிற்சியை பெற்றால், உயர்கல்வியை கற்றுக்கொண்டே பகுதிநேரமாக வேலை பார்க்கலாம்.

Refrigeration and Air Conditionning Mechanic

மாணவர்கள் படித்துக்கொண்டு சனி, ஞாயிறு தினங்கள், விடுமுறை தினங்கள், ஓய்வு நேரங்களில் பணிபுரிவதற்கான சந்தர்ப்பத்தினை இத் தொழில்துறை தருகின்றது. படித்துக்கொண்டே மாணவர்கள் ஒரு பகுதிநேர சுயதொழிலாக இதனை அமைத்துக்கொள்ள முடியும்.

இக் கற்கைநெறியினை இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, தொழில்நுட்பக் கல்லூரி, கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை பயிற்சி நிலையங்களில் பகுதிநேரமாகவும் முழுநேரமாகவும் கற்றுக்கொள்ளலாம். முழுநேரமாக 1 வருடக் கற்கைநெறியாகவும் பகுதிநேரமாக 4 மாதக் கற்கைநெறியாகவும் கற்பிக்கப்படுகின்றது. முழுநேரக் கற்கையாக இருந்தால் இலவசமாக கற்கலாம்.

பகுதிநேரமாக கற்பதாக இருந்தால் கற்கைநெறிக் கட்டணமாக 10,000 ரூபா தொடக்கம் 15,000 ரூபா வரை கல்வி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.
முழுநேரக்கற்கை முடிவில் தேசிய தொழிற்தகைமை சான்றிதழை குறித்த கற்கையில் பெற்றுக்கொள்ள முடியும். பகுதிநேரக் கற்கையாக இருந்தால் கற்கையை பூர்த்தி செய்ததற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும்.

எவ்வாறு இருப்பினும் கற்கை முடிந்த பின்பு அரச, தனியார் அலுவலகங்கள், நட்சத்திர விடுதிகள், வளிச்சீராக்கி மற்றும் குளிரூட்டி விற்பனை நிலையங்களிலும் சுயமாகவும் நீங்கள் விரும்பும் நேரத்தில் பணிபுரியலாம். 1000 ரூபா முதல் 2000 ரூபா வரை நாள் சம்பளமாக பெற்றுக்கொள்ள முடியும். க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்தவர்களும்; இக் கற்கைநெறியை தொடர விண்ணப்பிக்க முடியும். எதிர்காலத்திலும் நல்ல வருமானம் தரும் தொழிலாக நிச்சயம் விளங்கும்.

 Electrician

இக் கற்கைநெறியினை இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, தொழில்நுட்பக் கல்லூரி, கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை பயிற்சி நிலையங்களில் பகுதிநேரமாகவும் முழுநேரமாகவும் கற்றுக்கொள்ளலாம். முழுநேரக் கற்கையாக இருந்தால் இலவசமாக கற்கலாம். பகுதிநேரமாக கற்பதாக இருந்தால் கற்கைநெறிக் கட்டணமாக 10,000 ரூபா தொடக்கம் 15,000 ரூபா வரை கல்வி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். 6 மாத காலத்திற்குள் முழுநேரமாகவோ அல்லது பகுதிநேரமாகவோ கற்கைநெறியை பூர்த்தி செய்ய முடியும்.

முழுநேரக்கற்கை முடிவில் தேசிய தொழிற்தகைமை சான்றிதழை குறித்த கற்கையில் பெற்றுக்கொள்ள முடியும். பகுதிநேரக் கற்கையாக இருந்தால் கற்கையை பூர்த்தி செய்ததற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும்.

கற்கை முடிவில் வீடுகளில், தொழிற்சாலைகளில், அரச, தனியார் அலுவலகங்களில் போன்ற தேவையான அனைத்து இடங்களிலும் தொழிலுக்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. பகுதிநேரமாக விரும்பும் நேரத்தில் படித்துக்கொண்டே பணிபுரிவதற்கான நல்ல சந்தர்ப்பத்தினை இக்கற்கைநெறி கொடுக்கின்றது.

நாளொன்றுக்கு 1000 ரூபா தொடக்கம் 2000 ரூபா வரை சம்பளம் பெறகூடியதான தொழில்வாய்ப்பாகும். வீடுகளில் இருந்தபடியே ஓடர்களை பெற்றுக்கொள்ளலாம். க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்தவர்கள் இக் கற்கைநெறியை தொடர விண்ணப்பிக்க முடியும்.

Hospitality Management

தொழிற்பயிற்சி அதிகார சபை, இலங்கை சுற்றுலா முகாமைத்துவ நிறுவனம், தனியார் நட்சத்திர விடுதிகள் என்பவற்றில் பகுதிநேரமாக இக்கற்கைநெறியை கற்கலாம். 1 வருடத்திற்குள் கற்கைநெறியை பூர்த்திசெய்ய கூடியதாக உள்ளது. கற்கைநெறிக் கட்டணமாக 20,000 ரூபா வரை அறவிடப்படுகின்றது. தொழிற்பயிற்சி அதிகாரசபை, இலங்கை சுற்றுலா முகாமைத்துவ நிறுவனங்களில் முழுநேரமாக இலவசமாக கற்கலாம்.

கற்கைமுடிவில் நட்சத்திர விடுதிகளில் வரவேற்பு, அறைபராமரிப்பு, சமையல், உணவு பரிமாறுதல் துறைகளில் பகுதிநேரமாகவும் இரவு வேளைகளிலும் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பங்களை கொடுக்கின்றது. மாதாந்தம் 10,000 ரூபா தொடக்கம் 20,000 ரூபா வரை ஊதியத்தை கொடுக்கும் சிறந்த தொழில்துறையாக உள்ளது.

இக் கற்கைநெறிக்கு அடிப்படை ஆங்கில அறிவு எதிர்பார்க்கப்படுகின்றது. க.பொ.த சாதாரணதரம் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

Out Bout Engine Mechanic

இக் கற்கைநெறியை பகுதிநேரமாகவும் முழுநேரமாகவும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை மற்றும் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம் என்பன வழங்குகின்றன. முழுநேரமாக இலவசமாகவும் பகுதிநேரமாக கட்டணம் செலுத்தியும் கற்கைநெறியை பூர்த்தி செய்ய முடியும். 13,000 ரூபா வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

பகுதிநேரமாக பணிபுரிவதற்கான சந்தர்ப்பத்தினை இக்கற்கைநெறி வழங்குகின்றது. வெளியிணைப்பு படகு இயந்திரம் திருத்தும் கடைகள் மற்றும் சுயமாகவும் விரும்பும் நேரத்தில் திருத்திக் கொடுக்கலாம்.

க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெற்றிருந்தால் இக் கற்கைநெறியை தொடரமுடியும். 1 வருடத்திற்குள் இக் கற்கைநெறியை முழுநேரமாகவும் பகுதிநேரமாகவும் பூர்த்திசெய்ய முடியும். நாள் ஒன்றுக்கு 1500 ரூபா வரை உழைக்க முடியும். வீட்டில் ஓய்வாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் இத்தொழிலை மேற்கொள்ள முடியும்.

Accounting Technicians

க.பொ.த சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தியடைந்தவர்கள் இக் கற்கைநெறியை முழுநேரமாக 01 வருடத்தில் கற்கமுடியும். கற்கை முடிந்த பின்னர் பகுதிநேரமாக பணிபுரியலாம். இலங்கை தொழில்நுட்பக் கல்லூரிகளில் இலவசமாகவும் கற்கைநெறியை பூர்த்தி செய்யமுடியும்.

கற்கை முடிவில் கணக்காய்வு நிறுவனங்கள், சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் பகுதிநேரமாக தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்.
மாதாந்தம் 20,000 வரை சம்பளம் பெறக்கூடிய தொழிற்துறையாக உள்ளது. க.பொ.த சாதாரண தரத்தில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாது கணிதம், ஆங்கிலம், தமிழ் உட்பட 06 பாடங்களில் சித்தியடைந்தவர்கள் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.

தேசிய தொழில் தகைமை சான்றிதழையும் குறித்த கற்கையில் பெற்றுக்கொள்ள முடியும்.

Marketting

க.பொ.த சாதாரண தரத்தில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாத வகையில் கணிதம், தமிழ், ஆங்கிலம் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். 01 வருட முழுநேரக்கற்கைநெறி ஆகும். இதனை இலங்கை தொழில்நுட்ப கல்லூரிகளில் தொடரமுடியும். இலவசமாக கற்கையை பூர்த்தி செய்யமுடியும்.
கற்கை முடிவில் தனியார் நிறுவனங்களின் சந்தைபடுத்தல் துறை, உற்பத்தி கம்பனிகளின் சந்தைப்படுத்தல் பிரிவு, விளம்பரம் சேகரிப்பு, விளம்பரப்படுத்தல் துறைகளில் சந்தைப்படுத்தல் பிரதிநிதியாக பகுதிநேரம் படித்துக்கொண்டு வேலை செய்ய முடியும்.

இந்ததுறையில் வருமானத்தை வரையறுக்க முடியாது. மாதாந்தம் 15,000 ரூபாவும் வருமானம் பெறலாம். திறமைசாலிகள் 150,000 வரையும் வருமானம் பெறலாம். க.பொ.த சாதாரண தரத்தில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாது கணிதம், ஆங்கிலம், தமிழ் உட்பட 06 பாடங்களில் சித்தியடைந்தவர்கள் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியும். அரச தனியார் நிறுவனங்கள், ஊடக நிறுவனங்களில் கவர்ச்சிகரமான வருமானத்துடன் பகுதிநேரமாக தொழில் செய்யலாம். வேலை செய்ய குறிப்பிட்ட நேர வரையறையும் கிடையாது.

தேசிய தொழில் தகைமை சான்றிதழையும் குறித்த கற்கையில் பெற்றுக்கொள்ள முடியும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here