இழுவைப்படகுக்கு அனுமதி வழங்குவதாயின் கருவை அழிப்பதற்கு சமனானது!

அருணா

வடமாகாண மக்களுக்கு இந்த மீனவனின் வணக்கங்கள். இந்த இழுவைப் படகினால் பாதிக்கப்பட்டவன் நான் என்கின்ற அடிப்படையில் சில அனுபவங்களையும் எனது கருத்துக்களையும் பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

அண்மையிலே சில இழுவைப்படகு உரிமையாளர்கள் தாம் இழுவைப்படகு தொழில் செய்வதாகவும் 600க்கு மேற்பட்ட இலுவைப்படகுகள் வடமாகாணத்தில் இருப்பதாகவும் இதனை நம்பி மூவாயிரம் குடும்பங்கள் இருப்பதாகவும் கூறியிருந்தனர். இப்பதிவைப் பார்த்துமிக்க வேதனை அடைகின்றேன். ஏனெனில் இது இத் தொழிலைத் தொடர்ந்து செய்வதற்கான அத்திவாரமிடுதலாகும்.

கடந்த பல வருடங்களாக இந்திய இழுவைப்படகுகள் எமது எல்லைப்பகுதியில் வந்து இழுப்பதினால் எமக்கு பல கோடி கடல் வளங்கள் இழப்பு ஏற்படுவதால் அச் செயலுக்கு எதிராக வடமாகாண மக்கள் அனைவரும் குரல் கொடுத்து வந்தோம். இதனைக் கருத்தில் கொண்ட எமது நாட்டு அரசு இலங்கை கடற்படையினர் மூலம் இப்பொழுது அதனை கட்டுப்படுத்தி எம்மை நிம்மதியாக தொழில் செய்வதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இவ் நிம்மதியை முழுமையாக அனுபவிப்பதற்குள் அதே பிழையை எமது வடமாகாண மீனவர்களும் மேற்கொண்டமையினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.

இந்த இழுவைப்படகை கண்டுபிடித்தவர்கள் நோர்வே நாட்டவர்களாவர். இழுவைப்படகினால் கடல் வளம் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையினை அறிந்து அந்தநாட்டு அரசு இத் தொழிலுக்கு அனுமதிப்பதினை நிறுத்தியுள்ளதுடன், இழுவைப்படகு தயாரிப்பு தொழிலையும் முடக்கியுள்ளது. கடல் தாவரங்கள், பவளப்பாறைகள், வளர்ச்சியில் குறைவாக காணப்படும் சிறியவகை மீனினங்கள் அனைத்தும் இழுவைப்படகின் மடியின் இறுதிப்பகுதியில் காணப்படும் பலகை மூலம் இழுத்துச் செல்வதினால் மீனின் உருவாக்கம் முற்றுமுழுவதுமாக கலைக்கப்படுகின்றது. இதனால் மீன்பிடித் தொழிலின் நிலைத்திருக்கக்கூடிய தன்மை அற்றுப்போகிறது.

ஒருமுறை மன்னார் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் நின்று மாலை 7.30 மணியளவில் கடலை பார்வையிட்டேன். அப்போது கடலில் பலத்த இரைச்சல் சத்தமொன்று கேட்டது. அத்துடன் கடற்கரை கட்டுநாயக்கா விமானநிலையம் போன்று காட்சியளித்தது. அவ்வளவு பெருந்தொகையான இழுவைப்படகுகள் அதிக சக்திகொண்ட மின் விளக்குகளுடன் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தன. இப்படி இழுவைத் தொழிலைச் செய்தால் எப்படி பாக்கு நீரிணையில் மீன் உற்பத்தி பெருகும்?

2004ம் ஆண்டு நானும் எனது நண்பர்கள் இருவரும் என் தந்தையின் படகில் நண்டுவலைத் தொழிலைச் செய்து வந்தோம். மிகுந்த மகிழ்வுடன் எமது தொழில் நடவடிக்கை போய்க்கொண்டு இருந்தது. ஒருநாள் கடலில் பாச்சிவிட்டு வந்த எமது வலைகள் அனைத்தும் இழுவைப்படகு இழுத்துச் சென்றது. அத்துடன் அதே தினத்தில் பல பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களில் வலையும் அதே நிலைக்கு உள்ளாக்கப்பட்டது. இதனால் கிராமமக்கள் அனைவரும் கவலை, கோபத்துடன் ஆலயத்திலும் முறையிட்டனர். ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

என் தந்தை மீண்டும் என்னையும் என் நண்பர்களையும் உற்சாகப்படுத்தி எமது நகைகளை அடகுவைத்து தொழில் செய்ய ஊக்குவித்தார். அந்த வலைகளைச் செய்து முடிக்க எமக்கு இரண்டு வாரங்கள் பிடித்தன. மீண்டும் தொழிலைத் தொடக்கி வலையை பாச்சிவிட்டு வந்து அடுத்தநாள் வலையைப் பிடிக்கச் சென்ற பொழுது எமக்கு அதிர்ச்சியாக இருந்தது. எமது வலையையோ கொடிக்கம்பங்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் இழுவைப்படகுகள் வந்து எமது வலைகளை இழுத்துச் சென்றன. இவை அனைத்தையும் உள்ளுர் இழுவைப்படகுகளே மேற்கொண்டன. இதனால் எமக்கு தொழிலில் வெறுப்பும் ஏமாற்றமுமே மிஞ்சியது.

எனது அப்பாவால் மீண்டும் என்னை ஆறுதல்படுத்தவும் முடியவில்லை. இந்த வெறுப்பினால் எனது ஊரைவிட்டு என் மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து இப்பொழுது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றேன். என் நண்பர்கள் இருவரும் தனது தாய் சகோதரிகளின் நகைகளை அடைவு வைத்து, உழைப்புக்காக மத்திய கிழக்கு நாடு சென்றுவிட்டனர்.

சில சேற்றுப்பாங்கான இடங்களில் தொழில் செய்ய வரைபு மேற்கொள்ளப்போவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தார். வடமாகாணத்தில் அச் சேற்றுப்பாங்கான இடத்தில் சிறு தொழிலாளிகள் தமது வலைகளைப் பாய்ச்ச மாட்டார்களா? தொழில் செய்யமாட்டார்களா? இதற்கு அனுமதி வழங்குவது தாயின் கருவை அழிப்பதற்குச் சமனானது.

இழுவைப்படகுகளிற்கு அனுமதியளித்தால் இன்னும் பல இளைஞர்கள் மத்திய கிழக்கு நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே எமது மீனவ மக்களின் வாழ்வு ஒவ்வொரு நாளும் ஒரு முட்டையைப் பெற்றுக் கொள்ளும் வாத்தின் கதையாக அமையவே விரும்புகின்றோம். தயவுசெய்து அதனை வெட்டி முழு முட்டையையும் பெற்றுவிடலாமெனச் சிந்திக்க வேண்டாம். இதனால் எமது சமூதாயமும் எமது வருங்காலப் பிள்ளைகளின் தொழிலிலும் பாதிப்பு ஏற்படும். எனவே இதனை ஒரு கனிவான வேண்டுகொளாக சிறுதொழிலாளர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளுகின்றோம்.

இன்று இவ் இழுவைப்படகுகளின் தொழிலுக்கான சட்டவரைபை மேற்கொண்டால் 600 படகுகள் இன்னும் இரண்டு வருடங்களில் 1000 படகுகளாக மாறும். இதனுடைய வளர்ச்சியை நீரியல் வளத் திணைக்களத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இந்த 600 இழுவைப்படகுகளுக்கு மீண்டும் அனுமதி கொடுத்தால் இதனால் 3000 குடும்பங்கள் வாழ்வுபெறும். அதேவேளையில் அனுமதி மறுக்கப்பட்டால் 150,000 மேற்பட்ட சிறு தொழிலாளிகள் வாழ்வுபெறுவர் என்பதை கடல் தொழில் அமைச்சும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே பட்ட துன்பங்கள் போதும். கடற்றொழில் அமைச்சினால் வரையறுக்கப்பட்ட தடை செய்யப்பட்ட தொழில்களை முற்றுமுழுவதுமாக நிறுத்துவதற்கு ஏற்ற சட்டவரைபை மேற்கொள்ள அரச, தனியார் திணைக்களங்கள் முன்வந்து அவற்றை விரைவுபடுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here