மனமே நலமா?

மனமே நலமா? என்ற இந்த புதிய பகுதியில் உங்களிற்கு ஏற்படும் சந்தேகங்கள், குழப்பங்களை தீர்த்து கொள்ளலாம். யாழ் போதனா வைத்தியசாலையின் உளவள ஆலோசகர் கு.நக்கீரன் உங்கள் சந்தேகங்களை தீர்த்து வைப்பார்.

கே.சைலினி
உரும்பிராய்

கேள்வி:- நான் ஒருபெண். வயது 21. என் சம வயதுடைய ஒருவரை ஒரு வருடமாகக் காதலிக்கிறேன். அவரும் என் மேல் மிகவும் அன்பாக இருந்தார். சில நாட்களாக அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் தென்படுகின்றது. என்னுடன் பேசுவதை, பழகுவதைத் தவிர்க்க முயல்கின்றார். வேறு பெண்களுடன் அவருக்குத் தொடர்பு உண்டா என்று சந்தேகமாக இருக்கின்றது. இதைப் பற்றி அவரிடம் கேட்கவும் பயமாய் இருக்கின்றது. மிகவும் குழம்பிப் போயிருக்கின்றேன். நான் என்னசெய்வது?

பதில்:– இந்த வயதில் இது வழமையான பிரச்சினைதான். எந்தவொரு தாக்கத்திற்கும் மறு தாக்கம் உண்டு என்பதுபோல் உங்களுடைய சில நடவடிக்கைகள் அவரைப் பாதித்திருக்கலாம். அதாவது உங்களுடைய புதிய போன் தொடர்புகள் மற்றும் நட்புக்கள் என்பன அவரைப் பாதித்திருக்க வாய்ப்புண்டு. உங்களைப் பொறுத்தவரை அவை சரியானதாக இருந்தாலும் அவர் அதை ஏற்றுக்கொள்ள முடியாதவராக இருக்கலாம். நீங்கள் அவரை விட்டு விலகவிரும்புவதாக நினைத்து அவரே விலகியிருக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பயத்தை விட்டுவிட்டு அவரிடம் சென்று காரணத்தை விசாரியுங்கள். உங்களில் தவறெனில் திருத்திக் கொள்ள முயலுங்கள். இல்லையெனில் அவரைக் கட்டாயப்படுத்த வேண்டாம். இந்த வயதில் வரும் பெரும்பாலான காதல்கள் பக்குவப்பட்டவை அல்ல.

சி.ஜீவகாருண்யம்
பூந்தோட்டம், வவுனியா.

கேள்வி:- எனது மகளின் உயர்தரப் பரீட்சை முடிவுகள் அண்மையில் வெளிவந்தன. நன்றாகப் படித்தும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் மிகவும் குறைவான பெறுபேறுகளே கிடைத்தது. இதனால் அவர் மிகவும் மனமுடைந்து விட்டார். இப்போதெல்லாம் தனியாகவே இருக்கின்றார். வீட்டில் யாருடனும் பேசுவதில்லை. நண்பர்களிடமும் செல்வதில்லை. எல்லோரிடமும் எரிந்து விழுகின்றார். அவரை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை. எனக்கு மிகவும் பயமாக இருக்கின்றது. நான் என்ன செய்வது?

பதில்:– இது சாதாரணம்தான். எதிர்பார்ப்புக்கள் அதிகமாக இருந்தால் ஏமாற்றங்களும் அதிகமாகத் தான் இருக்கும். அத்தகைய சந்தர்ப்பங்களில் விரக்தி ஏற்படுவது சகஜமே. இவ்வேளைகளில் அருகிலிருப்பவர்களே சிறந்த ஆறதலை வழங்கவேண்டும். இந்த சிறுதோல்வியால் உனது தனித்துவம் இழக்கப்படப் போவதில்லை என்பதை அவருக்கு புரியவையுங்கள். அதற்காக உட்காரவைத்து ஒரேயடியாக அறிவுரை வழங்கிவிட வேண்டாம். (அது அவருக்கு இன்னும் கோபத்தையும், அவமானத்தையுமே ஏற்படுத்தும்). சின்னசின்ன பேச்சுக்களின் மூலமும், செயற்பாடுகளின் மூலமும் புரியவைத்தால் போதுமானது. அத்துடன் அவரது நல்ல, நெருங்கிய நண்பரை அழைத்து அவருடன் பேச வையுங்கள். அது அவரது வெறுமையுணர்வுக்கான சிறந்த பிரதியீடாக அமையும். தோல்வியை எதிர்கொள்ளும் திறனையும் அவருக்கு வழங்கும். மொத்தத்தில் “Wealways be withyou” அதாவது நாங்கள் உனக்காக எப்போதும் இருக்கின்றோம் என்பதை அவருக்கு அடிக்கடி வெளிப்படுத்துவதே நீங்கள் அவருக்குத் தரக் கூடிய மிகப்பெரிய ஆறுதலாகும்.


சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் உள்ளதா? உடனே எமக்கு எழுதி அனுப்புங்கள். மனநல நிபுணர்கள் உங்கள் பிரச்சனைகளிற்கான தீர்வை தர தயாராக இருக்கிறார்கள்.

pagetamilmedia@gmail.com 
அல்லது
0766722218

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here