பால் சுரப்பு அதிகரிக்க என்ன செய்யலாம்?- வைத்தியரைக் கேளுங்கள்

வைத்தியர் கந்தையா சோதிதாசன்
drsothithas@gmail.com
0776284687

ந.புஸ்பராணி (30)
சாவகச்சேரி.

கேள்வி: எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள். பால் சுரப்பு குறைவாக இருக்கிறது. பால் அதிகரிக்க நான் எத்தகைய உணவுகளை உண்ணவேண்டும்?

பதில்: குழந்தை பிறந்த சில நாட்களில், தாய்க்கு வெந்தய விதைகளை நீரில் ஊறவைத்துச் சாப்பிடக் கொடுக்க, அதிக அளவில் பால் சுரக்கும். அதிலுள்ள ‘Diosgenin’ பால்சுரப்பு அதிகரிக்கக் காரணமாகிறது. மேலும் பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்கள், பூண்டு பற்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், பால் சுரப்பு அதிகரிப்பது மட்டுமன்றி, உடலில் உள்ள கொழுப்பு சத்தின் அளவும் குறையும்…

தண்ணீர்விட்டான் கிழங்கு (சாத்தாவாரி)

இதிலுள்ள ‘Shatavarin’ வேதிப்பொருள், பால் சுரப்பிகளின் வளர்ச்சியை அதிகரித்துப் பால் சுரப்பைத் தூண்டுகிறது.

பப்பாளிக் காயின் தோலை நீக்கிவிட்டுச் சிறுசிறு துண்டுகளாக்கி, லேசாக வேகவைத்துச் சாப்பிட்டுவருவதாலும் பால் சுரப்பு அதிகரிக்கும்

ஆமணக்கு இலைகளுக்குப் பால்பெருக்கி செய்கை உண்டு. ஆமணக்கு இலைகளைக் குடிநீராகவும் குடிக்கக் கொடுக்கலாம் அல்லது இலையை எண்ணெயில் வதக்கி மார்பில் போட்டுவர, பால் சுரப்பு அதிகரிக்கும். இதைப் போலவே இலுப்பை, காட்டாமணக்கு இலைகளையும் மார்பில் வைத்துக் கட்டலாம். வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி மார்பில் கட்டிவரப் பால் சுரப்பு அதிகரிக்கும்.

இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்ட உருளை கிழங்கை அவித்து, கொஞ்சம் சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம்.

இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுவதால் நல்ல பால்சுரப்பு உண்டாகும். காய்களை மசித்துச் செய்யப்பட்ட `சூப்’ வகைகள், நார்ச்சத்து நிறைந்த கீரைகள், வைட்டமின்கள் நிறைந்த கரட், பீட்ரூட், இரும்புச்சத்துள்ள முருங்கைக்காய், நீர்ச்சத்து, கனிமச்சத்து நிறைந்த சுரைக்காய், புடலங்காய் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

சோமசுந்தரம், (55)
கொக்குவில்

கேள்வி: சாதரண நெஞ்சுவலியில் இருந்து மாரடைப்பிற்கான நெஞ்சுவலியை எப்படி இனங்காணலாம்?

பதில்: திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது தோள், இடது கை விரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆகஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத் திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இத்தகைய நிலமைகளில் அவசரமாக வைத்திய உதவியை நாட வேண்டும்.

க. ஆனந்தன் (29)
புங்கன்குளம், அரியாலை

கேள்வி: எனக்கு அடிக்கடி வாய்ப்புண் ஏற்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது? சித்தமருத்து செய்யலாமா?

பதில்: வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும்; காய்ச்சல் வரும்;

ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம்.

தவிர வெற்றிலை, புகையிலை, போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும்  இது வர இடமுண்டு.

நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, போலிக் அமிலம், விற்றமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதனால் ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும். இதன் விளைவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் வரும்.

வாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும்  காரணமாகலாம். உணவு ஒவ்வாமை – குறிப்பாகச் செயற்கை வண்ண உணவுகள் – மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணங்களாகக் கூறலாம்..

பெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலமே குணமாகி விடும்.

வெற்றிலை, புகையிலை போடக் கூடாது. நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஒவ்வாமை/மருந்து ஒவ்வாமை இருந்தால் தவிர்க்க வேண்டும்.

பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல்லம், தேன், பேரீச்சை, முளை கட்டிய பயறுகள், கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதை நிச்சயம் தடுக்கலாம்.

திரிபலாகசாயத்தினால் மூன்றுவேளையும் வாய் கொப்பளித்துவரலாம்.

வேலும்மயிலும் (62)
கச்சாய்

கேள்வி: நீணடகாலமாக வாத நோயினால் அவதிப்படுகிறேன். கால் உளைவுடன் வீக்கமும் காணப்படுகிறது. இதற்கு  பிடிக்ககூடிய ஒத்தட முறையொன்று கூறுங்கள்?

பதில்: மருத்துவ எண்ணெய்களான வாத நாராயணன் தைலம், பிண்டத் தைலம் தாளங்காய் எண்ணெய்  ஆகியவற்றை வலியுள்ள இடங்களில் பூசி, அதன் மேல் ஆமணக்கு, நொச்சி, போன்ற இலைகளைக் நீராவியில் அவித்து கொண்டு ஒற்றடம் கொடுக்கலாம்.

ந. வனிதாமணி (40)
இருபாலை

கேள்வி: நாம் உண்ணும் மரக்கறிகளில் பாகற்காய்  சிறந்த மருத்துவக் குணமுள்ளது என்கிறார்கள் பாகற்காயின் மருத்துவக் குணங்களை குறிப்பிடமுடியுமா?

பதில்: பாகற்காய் கசப்பாக இருந்தாலும் எண்ணற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.  சுவாசக் கோளாறுகளான ஆஸ்துமா, சளிப்பிடித்தல், இருமல் போன்ற நோய்களை தீர்ப்பதில் சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.

பாகற்காயின் சாற்றினை தினந்தோறும் குடித்து வந்தால் கல்லீரல் வலுப்படும், மேலும் ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.

பாகற்காய் மற்றும் அதன் இலைகளை சூடான தண்ணீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

பாகற்காயை தினமும் உணவாக உட்கொண்டால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள் மற்றும் ஆழமான சருமத் தொற்றுகள் போன்றவை நீங்கும்.

இன்சுலின் என்ற ஒருவகை வேதிப்பொருள் பாகற்காயில் உள்ளதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது.

பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் அது மிகவும் செரிமானத்திற்கு உதவுகிறது எனவே மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.

சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கு பாகற்காய் சிறந்த மருத்துவப் பயனாக பயன்படுகிறது. பாகற்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகள் நீக்கப்பட்டு இதய நோய் வருவதை தடுக்கிறது.

இது உடலின் செரிமான மண்டலத்தை நன்றாக தூண்டி, நல்ல செரிமானத்தை உண்டாக்குகிறது. இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, வேகமாக உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது. பாகற்காய் மாதவிடாய் ஒழுங்கின்மையையும்  சரிபடுத்த உதவுகிறது.

ஜெனி (20)
குருநகர்

கேள்வி: எனது முகத்தில் தோன்றிய பருக்களைக் கைகளால் கிள்ளி எடுத்ததால் தழும்புகள் ஏற்பட்டுள்ளது. இத்தழும்புகள் மறைய மூலிகைச்சிகிச்சை இருக்கிறதா?

பதில்: முகப்பருக்களை கிள்ளிவிடுவதால் முகத்தில் ஏற்படும் தழும்புகள் மறைய :கருவேப்பிலை 20 கிராம், கஸ்தூரி மஞ்சள் 20 கிராம், ஒரு எலுமிச்சை பழச்சாறு மற்றும் கசகசா 20 கிராம் எடுத்துக் கொண்டு அனைத்தையும் சேர்த்து பசையாக்கி முகத்தில் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் தடவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து பிறகு வெந்நீரில் கழுவிவிட்டால் சுமார் 48 நாட்களில் மறைய ஆரம்பிக்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here