நீட் எதிர்ப்பு.. சிபிஎஸ்இ முற்றுகை.. மாணவிகளை தர தரவென இழுத்து கைது செய்த போலீஸ்!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி சென்னையில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களை போலீஸார் கைது செய்யும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் காயமடைந்தனர்.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

இதனைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், சென்னை அண்ணாநகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தின் முன்பு அறவழிப் போராட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், தமிழக மக்களின் போராட்டத்திற்கு செவி சாய்க்காத மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். இதனால் மாணவர்கள், போலீஸாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து மாணவர்கள் போலீஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் போலீஸார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியும், குண்டுக்கட்டாக அங்கிருந்து வெளியேற்றியும் வாகனங்களில் ஏற்றி கைது செய்ய முற்பட்டனர்.

உஎபோலீஸார் வன்முறைப் போக்கை கையாண்டதில் மாணவி ஒருவர் மயக்கமடைந்தார். மேலும், மாணவர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here