மருந்து இல்லாமல் ஆண்மைக் குறைவை நீக்கும் சித்த மருத்துவ முறை உள்ளதா?- வைத்தியரிடம் கேளுங்கள்!

கந்தையா சோதிதாசன்
dr.sothithas@gmail.com
0776284687

நிலலோஜினி (30)
சுழிபுரம்.

கேள்வி:- எனக்கு நீண்டநாட்களாக வயிற்று எரிவு இருக்கிறது. வயிற்றுப்புண்ணாக இருக்குமா? வயிற்றுப்புண் ஏன் ஏற்படுகின்றது. அதன் அறிகுறிகள் என்ன?

பதில்:- சரியான வேளைகளில் உணவு எடுக்காமை உணவுவேளைகளில் அதிகம் தேநீர் அருந்துதல் தொடர்ச்சியாக மது மற்றும் சிகரட் பாவனை ஊறுகாய் போன்ற காரமான உணவுகளை சாப்பிடுவது அஸ்பிறின் போன்ற சில ஆங்கில மருந்துகளின் தொடர்ச்சியான பாவனை போன்ற காரணங்களினால் ஏற்படுகின்றது. வயிற்றுவலி, வயிற்று எரிவு, நெஞ்செரிவு போன்ற சாதாரண அறிகுறிகள் வாந்தியில் இரத்தம் கலந்து வெளியேறுவதுடன் மலத்துடன் இரத்தம் வெளியேறல் வாந்தி உடல் எடை குறைவது போன்ற அறிகுறிகள் நோயின் தீவிரத் தன்மையைக் காட்டும். சித்த மருத்துவத்தில் இதற்குப் பல மருந்துகள் சொல்லப்படுகின்றது. பாஸ்கரலவண சூரணம், ஹிங்குஸ்தாதி சூரணம், பஞ்சகதீபாகினி சூரணம் போன்றவற்றை வைத்தியரின் ஆலோசணையுடன் எடுக்கலாம்.

செபஸ்ரியன் (40)
மண்டைதீவு

கேள்வி:- மருந்து இல்லாமல் ஆண்மைக்குறைவை நீக்கக் கூடிய சித்த மருத்துவ முறைகள் இருக்கிறதா?

பதில்:- ஆண் தன்மையை அதிகரிக்கும் சக்தி தேனுக்கும், பேரீச்சம் பழத்திற்கும், இருக்கின்றது. இதனைப் பயன்படுத்தி இயற்கையாகவே உங்கள் ஆண்தன்மையைக் கூட்டிக் கொள்ளலாம். பேரீச்சம் பழங்களை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இட்டு அதனுடன் தேன் கலந்து 3 மணிநேரம் வெயிலில் வைத்து எடுக்கவும். இரவு உணவின் பின் 3 பேரீச்சம் பழங்களை பசும்பாலுடன் அருந்தி வாருங்கள். இது உங்கள் ஆண்மை சக்தியை அதிகரிக்கும். ஆண்களின் விந்து அணு வீரியத்திற்கு காரணமான மூலக்கூறு தக்காளியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் தக்காளி சூப் செய்தும் அருந்தலாம்.

தேன்மொழி (30)
நுணாவில்

கேள்வி:- ஆறுமாதம் கர்ப்பமாக இருக்கிறேன். நாரி, இடுப்பு, முதுகுப் பகுதிகளில் பிடிப்பு ஏற்படுகின்றது. எழுந்து நடமாடக் கஸ்டப்படுகின்றேன். என்ன செய்யலாம்.

பதில்:- கற்பகாலத்தில் இப்படியான அசௌகரியங்கள் ஏற்படுவது இயல்பானது தான். இருந்தாலும் கடினமான மருந்துகள் அல்லாத சிகிச்சை முறையைக் மேற் கொள்ளலாம். பாவட்டை, நொச்சி, ஆமணக்கு, இலைகள் தவிர்ந்த இளம் சூடான நீரில்குளிப்பது ஓர்  சிறந்த முறையாகும். இதோடு பொட்டாசியம், கல்சியம் சேர்ந்த உணவுகள் இத்தகைய பிடிப்புக்கள் ஏற்படுவதை தவிர்க்கும். எனவே வாழைப்பழம், பச்சைக்கீரை வகைகள், செத்தலி போன்ற உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

தயாபரன் (28)
நவாலி

கேள்வி:- காலை நித்திரையால் எழும்பும் போது கண் எரிச்சல் இருக்கின்றது. அதோடு லேசான தலைச்சுற்றும் இருக்கின்றது. பித்தம் அதிகரிப்பதனால் இப்படி ஏற்படுமா? மருந்து சொல்லுங்கள்.

பதில்:- பித்தம் நீங்குவதற்கு தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் சிறந்த பரிகாரமாகும். சீரகம் கொத்தமல்லி போன்றவற்றை சிறிதளவு எடுத்து நல்லெண்ணையில் இட்டு சீரகம் சிவந்து வரும் வரை காய்ச்சி ஆறவிட்டு பின் தலைக்கு வைத்து 1 மணி நேரம் கழித்து சீயாக்காய் தேய்த்து குளித்து வர வேண்டும். இந்த எண்ணெய் குளியல் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் சிறந்ததாகும்.

அனோஜன் (28)
மாதகல்

கேள்வி:- எனக்கு அடிக்கடி தோல் தடித்து அலர்ஜி ஏற்படுகின்றது. இது ஏன் ஏற்படுகின்றது.

பதில்:– எமது உடலில் நோய் எதிர்ப்பு அமைப்புக்கள் காணப்படுகின்றது. உடலில் ஒவ்வாத பொருள் நுளையும் போது நோய் எதிர்ப்பு அமைப்புக்கள்அதனை எதிர்த்துப் போராட உயிர் இரசாயனங்களை உண்டாக்குகின்றன. இதன் தாக்கமே அலர்ஜியாக வெளிப்படுகிறது. தோல் அரிப்பு, தடிப்பு, நீர்கசிவுடன் கூடிய புண்கள், வாந்தி, வயிற்றுப் போக்கு, மூக்கடைப்பு, தும்மல், தொண்டை அரிப்பு, ஆஸ்மா போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படலாம். காற்றில் உள்ள தூசுக்கள், மகரந்த மணிகள், றால், நண்டு, போன்ற சிலவகைப் புரத உணவுகள், அஸ்பிறின் போன்ற சில ஆங்கில மருந்துகள், உடலில் அலர்ஜி என்கிற ஒவ்வாமையை தோற்றுவிக்கலாம்.

துஷி (24)
அரியாலை
கேள்வி:- எனக்கு சவர்க்காரங்கள் ஒத்துவருதில்லை. குளியல் பொடி செய்வதற்கான முறை ஒன்று தருவீர்களா?

பதில்:- கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், சந்தனத்தூள், கார்போக அரிசி, கோரைக்கிழங்கு, ஏலம், பாசிப்பயறு, என்பவற்றை வாங்கி மாவாக இடித்து வைத்துக் கொண்டு குளிக்கும் போது உடலில் பூசிக் குளிக்கவும். இது உடலுக்கு வாசனையை தருவதுடன் சொறி, சிரங்கு, தேமல், என்பவற்றுக்கு உடனடி நிவாரணியாக மாறுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here