புளொட் சிக்கிய கதை: சிவராம் கொலை- மினி தொடர் 8

புளொட் மோகன் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர்

பத்திரிகையாளர் சிவராம் கொலை தொடர்பான நமது மினி தொடர் சிறிது இடைவெளி எடுத்து விட்டதற்கு, முதலில் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த இடைவெளி ஏற்பட்டு விட்டது. வாசகர்கள் பொருத்தருள்வார்களாக.

இந்த மினி தொடரின் இதுவரையான பகுதிகளை படித்தபோது, சிவராம் கொலையை யார் செய்தது என்பதை விட, யாரெல்லாம் செய்யவில்லையென்பது உங்களிற்கு ஓரளவு புரிந்திருக்கும். ஆனாலும், இன்னும் தொடர் முடியவில்லை. பொறுமையாக இன்னும் சில அத்தியாயங்களை படித்து, முடிவிற்கு வாருங்கள்.

அப்போது இராணுவ புலனாய்வுதுறை பொறுப்பாளராக இருந்தவர் ஹபில கெந்தவிதாரண. சிவராமுடன் மிக நெருக்கமான உறவில் இருந்தார். பாதுகாப்பு கட்டமைப்பில் அவரை விட உயர்ந்த இடத்தில் இருந்தவர்களும், சிவராமுடன் நெருக்கமாக இருந்ததையும், வெள்ளவத்தையிலுள்ள கடற்கரையோர கிளப் ஒன்றில் மது அருந்த சிவராமை அழைப்பதையும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

பாதுகாப்பு தரப்பால் சிவராமிற்கு எந்த பிரச்சனையும் வராது என்பதை ஹபில கெந்தவிதாரண உத்தரவாதமே வழங்கியிருந்தார். தனக்கு நெருக்கமான பலரிடம் சிவராம் இதை பகிர்ந்திருக்கிறார்.

ஹபில கெந்தவிதாரண உத்தரவாதம் தனியே இராணுவ தரப்பிற்கான உத்தரவாதமாக இருக்காதென்பது அப்போதைய நிலைமையை அறிந்தவர்களிற்கு புரியும். கருணா குழு அல்லது புளொட் போன்ற அமைப்புக்களாலும் சிக்கல் வராது என்பதே அதன் அர்த்தம்.

அதேபோல புலிகள் அமைப்பும் சிவராமுடன் நெருக்கமாக இருந்தனர். புலிகளின் சில ஆவணங்களை சிவராம் கொழும்பிற்கு கொண்டு வந்தார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். ஆனால், அதை கொழும்பில் புலிகளின் முகவர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்னதாக, இராணுவ புலனாய்வாளர்களிடம் ஒப்படைத்து விடுவார். அவர்கள் அதை பரிசோதித்துவிட்டு, திருப்பி கொடுத்த பின்னர், எதுவுமே நடக்காததை போல, உரியவர்களிடம் சேர்ப்பித்து விடுவார்.

இந்த விவகாரம் இறுதிவரை புலிகளிற்கு தெரியாது. ஆனால், சிவராமிற்கு இராணுவ புலனாய்வுத்துறைக்கு தொடர்புள்ளது என்பது புலிகளிற்கு தெரியும். அவர் நம்பிக்கையான ஆள் கிடையாது என்பதும் தெரியும். ஆனால், தேவையான வரை பாவிப்போம், சிக்கல் என்றால் பார்க்கலாம் என்ற லிஸ்றில் வைத்திருந்தனர்.

இராணுவமும் உத்தரவாதம் கொடுத்துள்ளது, புலிகளும் தேவைக்கு பயன்படுத்தி வந்தார்கள் என்றால், சிவராமை கொன்றது யார் என்ற குழப்பம் உங்களிற்கு வரலாம்.

கடந்த பாகத்தில் மண்டைப்பீஸ் சுரேஷ் என்பவரை பற்றி சொல்லியிருந்தோம். அவரை பின்னர் புலிகள் சுட்டுக் கொன்றார்கள். மட்டக்களப்பை சேர்ந்தவர் இவர். ஜெயந்தன் படையணியில் இருந்தவர், பின்னர் புலிகள் அமைப்பிலிருந்து விலகி கொழும்பு சென்று, எப்படியோ இராணுவத்தின் “லிங்“ இல் இணைந்து விட்டார். புலிகள் அமைப்பில் இருந்த சமயத்தில் மோதல் ஒன்றில் தலையில் காயமடைந்தார். தலையில் ரவையோ, குண்டு சிதறலோ இருந்தது. அதனால் மண்டைப்பீஸ் சுரேஷ் ஆகி விட்டார்!

2000 ஆம் ஆண்டின் தொடக்கமாக இருக்க வேண்டும். அப்போதுதான், மட்டக்களப்பில் முதன்முறையாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி நுழைந்து முதலாவது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. உண்மையில் அந்த தாக்குதலை நடத்தியவர்களில் தமிழர்கள்.

பின்னாளில் புலிகளால் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்ட புளொட் மோகனே அந்த தாக்குதலை திட்டமிட்டு, தலைமைதாங்கியவர். புளொட் அமைப்பில் இருந்த மோகன், 1990களிலேயே அந்த அமைப்பிலிருந்து ஒதுங்கி, இராணுவ புலனாய்வுத்துறையில் இணைந்து விட்டார். அவரது அணியினரை தனியான குழுவாக இராணுவம் பேணியது. ஆனால், இராணுவத்தின் நிர்வாகத்தில்- பதிவில் இருந்தார்கள். வேறு இயக்கங்களில் இருந்து வந்தவர்களை, இப்படி தனி அணியாக, ஆனால் இராணுவத்தில் இணைத்து வைத்திருந்தார்கள். ஆனால் ஈ.பி.டி.பி, புளொட் போன்றவை இப்படி இணைக்கப்பட்டிருக்கவில்லை. அவை தனி அணியாக இயங்கின.

இந்த இடத்தை ஏன் விரிவாக குறிப்பிட்டோம் என்றால், புளொட் மோகனை இன்றும் சிலர் “ஒட்டுக்குழு“ உறுப்பினர் என எழுதுவார்கள். உண்மையில் அவர் இராணுவ வீரர். அவருக்கு தரநிலை வழங்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு தாக்குதலின் பின்னர், இராணுவத்தரப்பிற்குள் புளொட் மோகனின் செல்வாக்கு கிடுகிடுவென உயர்ந்திருந்தது. கிட்டத்தட்ட ஒரு செல்லப்பிள்ளையாக இருந்தார். ஏனெனில், அதுவரை இராணுவத்திற்கு அப்படியொரு தாக்குதலை அதுவரை நடத்த முடியவில்லை. பின்னாளில் ஆழ ஊடுருவும் படையணி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் பாய் விரித்து படுத்து, கலக்கியதற்கு பிள்ளையார் சுழி போட்ட சம்பவம் அது. அந்த தாக்குதலில் பங்கு கொண்டவர் சுரேஷ்.

சுரேஷிற்குத்தான் தாக்குதல் நடத்தும் இடங்கள் பற்றிய துல்லியமான விபரம் தெரியும். ஏனெனில், அவர்தான் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து இறுதியாக இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தவர்.

(தொடரும்)

இந்த தொடரின் அடுத்த பாகம் நாளை மறுநாள் பிரசுரிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here