என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? 8

தமிழ் பக்கத்தின் மாகாணசபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் பற்றிய தொடரில், முல்லைத்தீவை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இடம்பெறுகிறார்.

துரைராசா ரவிகரன் அரசியலிற்குள் நுழைந்தது 2013இல். மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களை தேடி கட்சிகள் ஓடித்திரிந்தன. நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முல்லைத்தீவில் தேர்வு செய்த வேட்பாளரே ரவிகரன்.

முல்லைத்தீவில் ரவிகரன் வெற்றிபெற்றார்.

மாகாணசபைக்குள் ரவிகரன் ஒரு போர்வாளைப் போலவே செயற்பட்டார். அதிதீவிர தமிழ் தேசியவாதியாக தன்னை நிறுவியிருந்தார். வடமாகாணசபைக்குள் இருந்த அதிதீவிர தமிழ் தேசியவாதிகளில் ஒருவராகவும் அவர் கருதப்பட்டார். செய்திகளிலும், சம்பவங்களிலும் தனித்து தெரியும் கலை ரவிகரனிற்கு வாய்த்திருந்தது.

ரவிகரனை பற்றி ஊடக வட்டாரங்களிலும் சில நகைச்சுவை கதைகள் உள்ளன. “ரவிகரன் இயற்கை கடன் கழிப்பதை தவிர, மிகுதி அனைத்தையும் படமாக்கி ஊடகங்களிற்கு அனுப்பி விடுவார்“, “ரவிகரன் நடந்து செல்ல, அவரது மகன் ரவிகரனை பார்த்தபடி முன்னால் நடந்து செல்வார்“ (புகைப்படம் எடுப்பதற்காக) என கதைகள் உள்ளன. யாரும் செல்லாத இடத்திற்கு சென்றார், செய்யாததை செய்தார் என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில் நுணுக்கமாக செயற்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இளம் ஊடகவியலாளர்கள், யுத்தம் முடிந்ததும் வன்னியை ஆவலாக பார்க்க செல்ல, அவர்களிற்கு ரவிகரன் ஒரு போர்வாளாக தெரிந்தார். அவர்கள் ரவிகரனை முன்னிலைப்படுத்தினார்கள். இதுதான் ரவிகரன் தனித்து தெரிந்த கதை.

வடமாகாணசபை உறுப்பினராக ரவிகரன் தனித்துவமான எந்த செயலையும் செய்யவில்லை. அவருக்கு தேர்தல் அரசியல் சூட்சுமம் தெரிந்தது. அதைநோக்கி நகர்ந்தார். ஒரு சமயத்தில், முதலமைச்சரின் தீவிர ஆதரவாளர் அணியில் இருந்தார். இப்பொழுது எதிரணியில் இருக்கிறார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் சாபக்கேடே, அதன் உறுப்பினர்கள் கட்சி தாவி செல்வதே. 2010 இல் சிறிதரன் எம்.பி ஆரம்பித்து வைத்ததை, தற்போது ரவிகரன் முடித்து வைத்திருக்கிறார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகியதால், தமிழரசுக்கட்சியுடன் இணைந்தேன் என ரவிகரன் கூறினாலும், உண்மை அதுவல்ல. அதற்கு நான்கு மாதங்களின் முன்னரே அவர் தமிழரசுக்கட்சியுடன் பேச்சு நடத்தி இணைவதற்கு தயாராக இருந்தார். அந்த இணைவை தமிழரசுக்கட்சி நிறுத்தி வைத்திருந்தது. சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பிலிருந்து வெளியேற, அவருக்கு நெருக்கடி கொடுப்பதற்காக உடனடியாக ரவிகரனை தமிழரசுக்கட்சி இணைத்துக் கொண்டது.

முல்லைத்தீவு வறுமை, தென்பகுதி மீனவர் பிரச்சனை, சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக மாகாணசபைக்கு உள்ளேயும் வெளியேயும் தீவிரமாக பேசியிருக்கிறார். ஒருங்கிணைப்புகுழு கூட்டங்களிலும் இதை பேசியிருக்கிறார். எதையும் நரம்பு புடைக்க பேசினாலே சரி, மற்றபடி எப்படியும் இருந்துவிடலாம் என்ற தமிழ் அரசியலின் அச்சுஅசல் வடிவமாக ரவிகரனை கொள்ளலாம். அவரது பேச்சிருக்கும் அளவிற்கு, செயற்பாட்டு ஆளுமை அல்லவென்பதே உண்மை.

செயற்பாட்டு பாரம்பரியத்தை உடையவரும் அல்ல. முல்லைத்தீவில் வாழ்ந்தார் என்பதன் மூலம், இறுதி யுத்தம் வரை அங்கேயே குடும்பத்துடன் வாழ்ந்தார் என்ற தோற்றத்தையும் உருவாக்கிறார்.

1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவராக இருந்தார். அப்பொழுது எரிபொருள் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 80 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை அவர் மோசடி செய்ததாக புலிகள் குற்றம்சாட்டினர். மூன்று பகுதியாக அந்த பணத்தை செலுத்த ரவிகரன் சம்மதித்தார். இதனடிப்படையில் விடுவிக்கப்பட்டு, முதல் தவணை பணம் செலுத்திய பின்னர் வன்னியிலிருந்து தலைமறைவாகி விட்டார். பின்னர் அவரது குடும்பமும் வன்னியிலிருந்து தலைமறைவானது.

அதன்பின்னர் நீர்கொழும்பில் வசித்து வந்தார். யுத்தம் முடிந்த பின்னர், மீண்டும் முல்லைத்தீவிற்கு வந்து மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராகியுள்ளார்.

கடந்தகால தவறுகளையெல்லாம் மறைக்க உரத்த குரலில் தமிழ் தேசியம் பேசினாலே போதும் என்ற தமிழ் சமூகம் ஏற்றுக்கொள்ளும் ஆபத்தான சூத்திரத்தையே ரவிகரனும் உபயோகித்தார். ஆனால், மாகாணசபை உறுப்பினரான பின்னர், மாகாணசபைக்குள் ஓரளவு ஆளுமையுள்ளவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். எல்லா விவாதங்களிலும் கலந்து கொள்வதுடன், பிரதேச பிரச்சனைகளை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்துவிடுகிறார். வன்னியை சேர்ந்த மற்றைய மாகாணசபை பிரதிநிதிகளைவிட இந்த விடயத்தில் முன்னணியில் நிற்கிறார்.

பேசுவதுதான் சிறந்த சாதனையென நமது அரசியல் ஆகிவிட்ட நிலையில், அதையாவது செய்பவரை பாராட்டலாம்தானே!

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here