ஏன் ஆண்கள் மோதுகிறார்கள்?… பெண்கள் மோதுப்படுகிறார்கள்?- பெண்ணெழுத்து 5

எம்.சியா

அண்மையில் யாழ்ப்பாணம் இருபாலையில் ஒரு சம்பவம் நடந்தது. இளம் பெண்ணொருவர் வீதியால் சென்று கொண்டிருந்தார். மின்னல் வேகத்தில் பறந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவரை பந்தாடியது. அவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் என்ன விசேடம் உள்ளது?, இப்படித்தானே விபத்துக்கள் நடக்கின்றன என்று நீங்கள் யோசிக்கலாம்.

நன்றாக யோசித்து பார்த்தால் விபத்தென்றால் அதில் பெரும்பாலும் ஆண்கள்தான் மோதுபவர்களாக உள்ளனர். பாதிக்கப்படுவதில் பெரும்பாலானவர்கள் பெண்கள், சிறுவர்கள்தான். மனிதர்கள் உருவாக்கிய விதிப்படி சமூகத்தில் ஆண்கள் விரைவானவர்கள், உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள். பெண்கள் மெதுவாக, பவ்வியமாக செயற்படுபவர்கள். இதனால்த்தான் விபத்துக்களில் அதிகம் சிக்குபவர்களாக பெண்கள் உள்ளனர். அதற்காக பெண்கள் விபத்துக்களில்ற்கு காரணமில்லையென சொல்வதில் நியாயமேயில்லை. சிறிய வீதத்தில் பெண்கள் விபத்திற்கு காரணமாகிறார்கள்தான். ஆனால் அது உயிராபத்தான விபத்தாக மாறுவது அரிது.

ஏன் இந்த விபத்துக்கள் நடக்கின்றன? விபத்துக்கள் தனியே வீதியுடன் சம்பந்தப்பட்டவையா அல்லது அற்கும் அப்பால் சமூகக் காரணங்கள் உள்ளனவா?

வீதி விபத்துக்கள் எல்லாக் காலத்திலும் உள்ளதுதான். வீதிக்கு இறங்குபவர்களிற்கு சில சிந்தனை குழப்பம், அவதானமின்மை, கட்டுப்படுத்த முடியாமை போன்ற காரணங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் விபத்துக்கள் இப்பொழுதுதான் ஏற்படுகின்றன என்றில்லை. ஆனால் இப்பொழுது சடுதியாக அதிகரித்துள்ளன என்பதுதான் கவனிக்க வேண்டியது.

தற்போதைய சடுதியான அதிகரிப்பிற்கு காரணம் என்னவென்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதிகரித்த வாகனங்கள். சாதாரணமாக சிறிய வீதிகளையே அடைத்துக் கொள்ளும் அளவிற்கு மோட்டார் வாகனங்கள் போகின்றன.

இன்று மோட்டார்வாகனம் இல்லாத குடும்பங்கள் அரிது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு நகரங்களில் மிகச்சிறிய எண்ணிக்கையானவர்களிடமே மோட்டார் வாகனங்கள் இல்லாமலிருக்கும். இந்த பிரதான நகரங்களை விட உபநகரங்கள், கிராமங்கள் அனைத்திலும் இதுதான் நிலை.

இளவயதுக்காரர்கள் எல்லோரிடமும் மோட்டார் வாகனங்கள் உள்ளன. அடையாள அட்டையை போல மோட்டார் வாகனமொன்றை அத்தியாவசிய தேவையாக கருதும் இளைஞர்கள்தான் அனேகர். ஒரு வேலை வேண்டும் என அக்கறைப்படும் தலைமுறை அருகிக் கொண்டு செல்கிறது.

இதற்கு முக்கிய காரணம், தங்கி வாழும் சமூகமாக நமது இளையவர்கள் உருவாகுவதுதான். சுயமான உழைப்பில்லாத இளவயது ஆண்,பெண்கள் மிக விலை கூடிய கனவுகளும் நம்மத்தியில் வாழ்கிறார்கள். பேசியல், விலையுயர்ந்த அணிகலன்கள், ஒரு ஸ்கூட்டி என பெண்களின் உலகம் அமைந்தால், எப்.சற், பல்சர், அப்பாச்சி என புது தயாரிப்பு மோட்டார்சைக்கிள்களால் ஆண்களின் உலகம் அமைகிறது. மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பதே வாழ்வின் பெரும்பேறாக கருதும் வாலிபர்கள் நிறைந்து வரும் உலகமிது.

ஒரு பிரதானவீதியில், ஒரு சந்தியில் ஒரு மாலைப்பொழுதில் குறிப்பிட்ட சிறிதுநேரம் நின்று கவனித்து பாருங்கள். தெருநாய்களை போல எந்த இலக்குமில்லாமல் ஒரேயிடத்தை சுற்றிச்சுற்றிவரும் இளைஞர்கள் எத்தனை பேரென. உங்கள் அயலில் இருப்பவர்களில் எத்தனை இளைஞர்கள் வேலையில்லாமல் ஊரைச்சுற்றி திரிகிறார்கள் என.

இது எப்படி சாத்தியமாகும்? நமது நிலத்தின் பெரும் கொடையே ஒருவர் எந்த உத்தியோகமும் பார்க்காமல் வாழலாம் என்பதுதான். அது தாய்மண்ணிற்கே உரிய சிறப்பு. எந்த பிரயாசையுமின்றி வீட்டு காணியில் விளைவதை வைத்தே வாழலாம் என்பது நமது நிலம் தந்த கொடை. இப்படியான நிலையில், பெரும் பண உதவிகள் செய்ய சொந்தங்கள் வெளிநாட்டில் இருந்தால் எப்படியிருக்கும்?

நமது சமூகத்தில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தியது புலப்பெயர்வு. எட்டுத்திக்கும் சென்று அறிவை பெற்றுத் திரும்ப வேண்டிய சமயத்தில் நம்மவர்களில் சிறிய பகுதியினர் மட்டுமே புலம்பெயர்ந்த நிலத்தில் அதை செய்திருக்கிறார்கள். குறிப்பாக புலம்பெயர்ந்த தேசங்களில் பிறந்த இரண்டாம் தலைமுறைதான் அதை செய்துள்ளது. மற்றர்கள் பணமீட்டி, அதிலொரு பகுதியை ஊரிலுள்ள தம்பிக்கு, மச்சானிற்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுக்கத்தான் விரும்புகிறார்கள். அதனால்த்தான் வடக்கு பெருநகரங்களில் மோட்டார்சைக்கிள் சந்தை பெருமெடுப்பில் வளர்ந்துள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியாவில் புதிய தயாரிப்பு மோட்டார் சைக்கிள்கள் வரும் வேகத்திலேயே காலியாகி விடுகின்றன. ஒவ்வொன்றும் மூன்று, நான்கு இலட்சம் பெறுமதியானவை. பதினெட்டு, இருபது வயது வாலிபனிற்கு இந்த பெறுமதியான மோட்டார் சைக்கிள் அத்தியாவசியமானதா?

செய்வதற்கு வேலையில்லை, ஓடித்திரிய மோட்டார் சைக்கிள், எரிபொருளிற்கு காசு தரும் உறவுகள், பின்னாலிருக்க நண்பர்கள், மதுச்சாலைகள்… அடுத்தது என்ன நடக்கும்?

நமது சமூகத்தின் எதிர்காலம் என்னவாக மாறும்?

இப்படி ஒரு தொகை இளைஞர்கள் இருக்க, நாளாந்த வாழ்விற்காக அல்லாடுபவர்களும் இருக்கிறார்கள்தான். அண்மையில் யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு சென்ற அரசியல் இயக்கமொன்றின் பிரதிநிதியொருவர் மனத்துயருடன் சில கதைகள் சொன்னார்.

வறுமையுடன் போராடும் குடும்பங்களை சேர்ந்த மாணவிகள் பல்கலைகழக படிப்பை தொடர எதிர்கொள்ளும் சிரமங்கள் அவை. அரை இறாத்தல் பாணை மூவர் பங்கிட்டு ஒருவேளையை சமாளித்துக் கொள்கிறார்கள். நான்காயிரம் ரூபாயில் மாதத்தை ஓட்டும் மாணவிகளும் உள்ளனர். ஆனால் நாளொன்றிற்கு ஆயிரம் ரூபாயை நண்பர்கள், நண்பிகளுடன் செலவிடுபவர்களும் அந்த பல்கலைகழகத்தில்தான் இருக்கிறார்கள். சமூகம், சக மனிதர்கள் பற்றி சிந்திக்கும் இயல்பை நமது சமூகம் இழந்துவிட்டதா? வெளிநாட்டு பணம் சமூக அமைப்பையே மாற்றிவிட்டது. வெளிநாட்டில் உறவுகள் இருப்பவர்கள் தம்மை வேறு கிரமகவாசிகள், இங்குள்ள பிரச்சனைகள் எதிலும் தாம் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல, ஏதோ மற்றவர்கள் அதை பார்த்து கொள்ளுங்கள் என்ற மனநிலையில் இருப்பதை அவதானித்திருக்கிறேன். அதனால்த்தான் அலங்கார பொம்மைகளாக ஒரு பகுதியினர் இருக்க, அன்றாட வாழ்விற்கு போராடுபவர்களாக மற்றவர்கள் உள்ளனர்.

அண்மையில் ஜெயலட்சுமி என்ற பெண்ணை சந்திக்க கிடைத்தது. யாழ் நகருக்கு சமீபமாக வாழும் அந்த பெண்மணி கணவனை இழந்தவர். சிவனேயென வீதியில் சென்று கொண்டிருந்த கணவரை, விபத்தென்ற பெயரில் இழந்தவர்.

“எங்கட கலியாணம் பேசித்தான் நடந்தது. ஆனால் அவர் சீதனம் ஒன்றும் வாங்கயில்லை. ஆனால் என்னை நன்றாக கவனித்தார். நல்ல பிரயாசைக்காரர். நல்லெண்ணை உற்பத்தி செய்து கடைகளுக்கு கொடுத்தார். எங்களுக்கு மூன்று பிள்ளைகள்.

தொழில் நன்றாக போய்க் கொண்டிருந்தது. தொழிலை விருத்தி செய்து, பெரிய கொம்பனியாக்க வேண்டுமென்றது அவரது ஆசை. ஆனால் அவர் விபத்தொன்றில் சிக்கிவிட்டார். ஆபத்தான கட்டத்தில் இருந்து கோமாவிற்கு வந்துவிட்டார்.

கொழும்பில் 15 நாள் சிகிச்சை. கோமா தெளிய யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்கள். இங்கு வந்து மறுநாள் மரணமாகிவிட்டார். இவர் இல்லாதது இரண்டு கைகளும் இழந்ததை போலிருந்தது“ என கண்கலங்கினார்.

விபத்துக்களில் அதிகம் பாதிக்கப்படுவது இப்படியான அப்பாவிகள்தான். பொறுப்பில்லாத யாரோ ஒருவரால் ஏற்படுத்தப்படும் விபத்துக்களில் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.

ஜெயலட்சுமி விடாமுயற்சிக்காரி. கணவர் இல்லாவிட்டாலும் அவரது தொழிலை விடாமல் தொடர்ந்தார். கணவரின் 31 முடிவதற்கு முன்னரே தொழிலில் இறங்கினார். கணவர் இருந்தபோது வீடு கட்டிய கடனும் இருந்தது. ஆட்களை வைத்து தொழில் செய்ய வசதியில்லாத நிலையில் நெருங்கிய உறவினர்கள், பிள்ளைகளின் ஒத்தாசையுடன் சிரமப்பட்டு அதனை முன்னகர்த்தி இன்று ஓரளவு சிறப்பான நிலையை அடைந்துள்ளார்.

விபத்தில் சிக்குவதற்கு சிலநாட்கள் முன்னர்தான் ஜெயலட்சுமியை அழைத்துக் கொண்டு சென்று நல்லெண்ணெய் கொடுக்கும் கடைகள் எல்லாவற்றையும் கணவன் அறிமுகப்படுத்தினாராம். கணவர் இறந்த சமயத்தில் சிறுகுழந்தையான கடைசிப்பிள்ளை உள்ளிட்ட மூன்று குழந்தைகளும் பட்டினியால் வாடியதாகவும் கடந்த காலத்தை கண்ணீருடன் நினைவுகூர்ந்தார்.

இந்த சமயத்தில்த்தான் வடமாகாண பெண்கள் அமைப்பொன்றின் அறிமுகம் ஜெயலட்சுமிக்கு கிடைத்தது. லோன் மற்றும் தொழில் விருத்தி உதவிகள் அவர்கள் மூலம் கிடைக்க, இப்பொழுது வேலைக்கு ஆட்களை வைத்து செய்யுமளவிற்கு தொழிலை விஸ்தரித்து விட்டார்.

யாழ் மாநாகரசபை நடத்திய கண்காட்சியொன்றில் ஜெயலட்சுமியால் உருவாக்கப்பட்ட கரட் கேக் முதலிடம் பெற்றுள்ளது. சிறுவர்கள் அதை விரும்புவார்கள் என்கிறார்.

நல்லெண்ணை வியாபாரத்தில் ஜெயலட்மி சந்தித்த சவால்கள் அனேகம். ஆண்களின் தொழிலான அதில் பெண்கள் நுழைவது சவாலானது. நல்லெண்ணை வாங்கிய கடைக்காரர்கள் பலர் ஜெயலட்சுமியை ஏமாற்ற முயன்றுள்ளனர். எனினும் இதையெல்லாம் கடந்துதான் அவர் இன்று நிமிர்ந்து நிற்கிறார்.

ஒரு விபத்து என்பது பத்திரிகை படிப்பவர்களிற்கு வெறும் செய்தி. பார்ப்பவர்களிற்கு வெறும் சம்பவம். விபத்தை ஏற்படுத்தியவனிற்கு சில கால பிரச்சனை. ஆனால் விபத்தில் சிக்கியவனிற்கு? அவனது குடும்பத்திற்கு?.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here