மரபுவழிப் போரில் சொர்ணம் சறுக்கிய இடம்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 55

பீஷ்மர்

காதல் கத்தரிக்காய் எல்லாம் சொர்ணத்திற்கு சரிப்பட்டு வராது. மிக இறுக்கமான இராணுவ ஒழுங்குள்ள மனிதராக அவர் தன்னை வெளிப்படுத்தி விட்டார். தனிப்பட்ட வாழ்க்கை விவகாரத்தில் கூட இந்த இமேஜை கடந்து அவரால் செயற்பட முடியாது.

அப்போது மகளிர் படையணி தளபதியாக இருந்தவர் ஜனனி. சில தாக்குதல் திட்டமிடல்கள், கூட்டங்களில் இருவரும் சந்தித்திருந்தனர். சொர்ணம் என்றாலே ஜனனிக்கு பெரும் பயம்.

ஜனனியை திருமணம் செய்யலாமென சொர்ணத்திற்கு விருப்பம் ஏற்பட்டது. இதை எப்படி கையாள்வதென்பதுதான் அவருக்கு தெரியவில்லை. பலதையும் யோசித்துவிட்டு தனது பாணியிலேயே காரியத்தை முடிக்க திட்டமிட்டார்.

ஒருநாள் ஜனனியின் முகாமிற்கு சென்றார். பெண்போராளிகளின் முகாம்களிற்குள் ஆண் போராளிகள் யாரும் நினைத்த மாதிரி செல்ல முடியாது. அது பிரபாகரனாக இருந்தாலும் கூட. பிரபாகரனை யாரும் தடுக்க முடியாது. ஆனால், அவர் அந்த சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்தியதுடன், மற்ற போராளிகளிற்கும் வழிகாட்டினார்.

பெண்களின் முகாம்களின் முன்பகுதியில் ஒரு வட்டக்கொட்டில் இருக்கும். அங்குதான் விருந்தினர்களாக வரும் ஆண் போராளிகள் உட்காரலாம். உள்ளே நுழைய முடியாது.

ஜனனியின் முகாமிற்கு சென்ற சொர்ணம் வட்டக்கொட்டிலில் உட்காரவில்லை. அவசர அலுவலாக செல்பவர்கள் பதற்றமாக நின்று கொண்டிருப்பதை போல அந்தரமாக நின்று கொண்டிருந்தார். சொர்ணம் வந்துள்ள தகவலை அறிந்து ஜனனி அவசரமாக வந்தார். கூடவே ஒருசில பெண்போராளிகளும் வந்தனர்.

ஜனனி அருகில் வந்ததும், சொர்ணம் இப்படி சொன்னார். “இயக்கம் என்னை கலியாணம் கட்ட சொல்லியிருக்குது. உம்மைத்தான் கலியாணம் செய்யப் போறன். என்ன என்று யோசிச்சு சொல்லும்“ என்றுவிட்டு விறுவிறுவென வந்து வாகனத்தில் ஏறிவிட்டார்.

நேராக பிரபாகரனின் மனைவி மதிவதனியிடம் சென்று, நடந்ததை சொன்னார். மதிவதனி தனது கூடப்பிறந்த சகோதரனை போலத்தான் சொர்ணத்தை பாவித்தார். அதனால்தான் சொர்ணத்தின் திருமணத்தில் மதிவதனி தனிப்பட்ட ஆர்வம் காட்டினார்.

சொர்ணம் புறப்பட்ட பின்னர், நடந்ததை பிரபாகரனிடம் சொல்லியுள்ளார். சொர்ணத்தின் இயல்பை நினைத்து இருவரும் நகைச்சுவையாக சிரித்தனர். இறுதிவரை இந்த சம்பவத்தை மதிவதனி அடிக்கடி குறிப்பிட்டு சொர்ணத்தை கலாய்த்தே வந்தார்.

அப்போது அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல், யாழ்ப்பாணத்தில் பெண் போராளிகளுடன் தங்கியிருந்தார். ஜனனி உடனடியாக அடேலை சந்தித்து விசயத்தை சொல்லியிருக்கிறார். பின்னர் மதிவதனியை சந்தித்து சொன்னார்.

சிலநாட்களின் பின், மதிவதனி ஆறுதலாக உட்கார்ந்திருக்கும் சமயத்தில் ஜனனியை அழைத்தார். சொர்ணத்தை திருமணம் செய்ய தாங்கள் வற்புறுத்தியதிலிருந்து இறுதிவரை நடந்தது அனைத்தையும் சொன்னார். சொர்ணத்திற்கு பிரபாகரனும் தானும் பெண் பார்ப்பதையும் சொன்னார். சொர்ணத்தை திருமணம் செய்ய ஜனனிக்கு விருப்பமா என கேட்டார்.

அடுத்த சில வாரங்களில் சொர்ணம்-ஜனனி திருமணம் நடந்தது. திருமணத்தின் பின் பிரபாகரனின் பாதுகாப்பு அணி பிரதானி என்ற பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அதன்பின்னர்தான் கூட்டுப்படை பிரதானியானார். 1995 இல் ஆரம்பிக்கப்பட்ட சூரியக்கதிர் படை நடிவடிக்கை, 1996 இல் சாவகச்சேரியை கைப்பற்றியது. அப்போது கூட்டுப்படை தளபதியாக களத்தை வழிநடத்திய சொர்ணம், யாழ்ப்பாண களத்தை வழிநடத்திய ரவி இருவருக்கும் “காற்று போனது“.

மீண்டும் 2000 ஆண்டில் சாவகச்சேரியில் ஒரு களமுனை. இதற்குள் ஈழப்போரில் நிறைய மாற்றங்கள். புலிகள் ஒரு மரபுவழி இராணுவமாக மேலெழுந்து விட்டனர். சொர்ணம், பால்ராஜ் என்ற மைய அச்சில் சுற்றிக்கொண்டிருந்த புலிகளின் இராணுவ கட்டமைப்பு பால்ராஜ், கருணா, தீபன் இன்னும் ஏராளம் இரண்டாம் நிலை தளபதிகளுடன் புதிய அத்தியாயத்திற்குள் புக தொடங்கிவிட்டது. ஆனால் இந்த காலத்திற்குள் சொர்ணம் களத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கவில்லை. அவர் திருகோணமலை தளபதியாக செயற்பட்டார். திருகோணமலை அணியில் சுமார் 400- 500 பேர் வரையில் இருந்தனர். வன்னியில் சிறிய தொகையினர் நிலை கொண்டிருக்க, ஏனையவர்கள் திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடைப்பட்ட காடுகளில் நிலைகொண்டிருந்தனர். சிறிய கெரில்லா தாக்குதல்கள்தான் செய்துகொண்டிருந்தனர். எப்பொழுதாவது மினிமுகாம்கள் மீது சிறிய தாக்குதல்களை செய்தனர்.

1997 இல் வன்னியில் ஜெயசிக்குறு என்ற பிரமாண்ட நடவடிக்கையை படையினர் ஆரம்பித்தனர். அப்போது படையிலிருந்த ஆளெண்ணிக்கையை வைத்து வடக்கு கிழக்கு முழுவதும் மேலாதிக்கம் செலுத்த படையினரால் முடியாது. வன்னி படைநடவடிக்கைக்காக கிழக்கின் பல பகுதிகளில் இருந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டன. பெரும் நிலப்பரப்பின் கட்டுப்பாட்டை இராணுவம் இழந்தது.

வன்னியில் படையினரின் கவனத்தை சிதறச்செய்து, படை நடவடிக்கையின் வீரியத்தை குறைக்க புலிகள் கையாண்ட உத்தி, வன்னிக்கு வெளியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, தென்னிலங்கையில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டன. திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட தளபதிகளிற்கு தலைமை அப்பொழுது ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு தாக்குதலாவது நடத்தியிருக்க வேண்டும்.

இப்படி கெரில்லா தாக்குதல் முயற்சிகளில் சொர்ணம் ஈடுபட்டு கொண்டிருக்க, வன்னியில் கருணா, பால்ராஜ், தீபன், ஜெயம், பானு உள்ளிட்டவர்கள் பெருமெடுப்பிலான மரபுச்சமரில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தனர்.

இப்படித்தான் 1999 இன் இறுதியில் ஓயாத அலைகள் 3 ஆரம்பிக்கப்பட்டது. அது வன்னி முழுதும் வீச்சம்பெற்று பல பகுதிகளை கைப்பற்றியது. பின்னர் குடாநாட்டு பக்கம் திரும்பி ஆனையிறவை வீழ்த்தியது. ஆனையிறவு சமரில் பால்ராஜ், தீபன், பானு ஆகியோர் முக்கிய பங்காற்றினர். பின்னர் யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் நகர்ந்து, யாழ்நகர வாசல் வரை சென்றது. அப்பொழுதுதான் இந்தியாவின் உதவி இலங்கைக்கு கிடைத்தது.

லண்டனில் இருந்த அன்ரன் பாலசிங்கத்திற்கு இந்திய வெளிவிவகார கொள்கைகளை தீர்மானிக்கும் சௌத் புளக்கின் செய்தியொன்று சென்றது. நம்பிக்கையான இடைத்தரகர்கள் மூலம்தான் அந்த செய்தி அனுப்பப்பட்டது. “புலிகள் குடாநாட்டு சண்டையை தொடர்ந்தால், இன்னும் ஒரு அடி முன்னகர்ந்தால் இலங்கை இராணுவத்தை காப்பாற்ற இந்திய இராணுவம் தலையிடும்“. இதுதான் அந்த செய்தி.

அப்போது பிரபாகரனின் இருப்பிடம் புதுக்குடியிருப்பில் இருந்து ஒட்டுசுட்டான் செல்லும் வீதியில் இருந்தது. பின்னர் இந்த முகாமை பொதுமக்களின் பார்வைக்காக இராணுவம் திறந்து விட்டிருந்தது.

லண்டனில் இருந்து செய்மதி தொலைபேசியில் பிரபாகரனை அழைத்தார் பாலசிங்கம். விடயம் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இந்திய தலையீட்டை தவிர்க்க, யாழ்ப்பாணம் நோக்கிய படைநகர்வை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாமென பாலசிங்கம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார். அப்படியான முடிவையே பிரபாகரனும் எடுத்தார்.

செம்மணி வளைவை கடந்து யாழ் நகருக்கு நெருக்கமாக நின்ற புலிகளின் அணிகளிற்கு தாக்குதலை நிறுத்தும் கட்டளை சென்றது. இம்ரான்- பாண்டியன், சாள்ஸ் அன்ரனி, மாலதி, ஜெயந்தன், புலனாய்வுத்துறை படையணிகள் அந்த களத்தில் இருந்தன.

இதற்குள் யாழ்ப்பாண இராணுவ கட்டளைபீடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜனக பெரேராவும், சரத் பொன்சேகாவும் அவசரமாக யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர். இலங்கை இராணுவத்தில் அப்போதிருந்த போர்க்கள நட்சத்திரங்கள் அவர்கள் இருவருமே.

மறுவளமாக புலிகள் யாழ்ப்பாண களத்திற்கு தளபதியாக நியமித்தது, நீண்டகாலம் மரபுவழி இராணுவ நடவடிக்கைகளில் பரிச்சயமில்லாமலிருந்த சொர்ணத்தை!

(தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here