30 நாள் வாழ்க்கை; 16 கால்; 300 முட்டை: அச்சுறுத்தும் சோனா!


இன்று இலங்கையை அச்சுறுத்தும் பிரதான வில்லனாக ‘படைப்புழு’ (சோனா) உருவெடுத்துள்ளது. சோளம் பயிரிடுவதையே மறு அறிவித்தல் வரை நிறுத்துங்கள் என அரசாங்கமே அறிவித்தல் விடுமளவிற்கு அதன் அபாயம் எல்லைமீறி சென்றுள்ளது.

படைப்புழு இலங்கையை மட்டும் இப்போது அச்சுறுத்தவில்லை. அண்டைநாடான இந்தியாவின் தமிழகம், கர்நாடகாவிலும் ‘வித்தையை காட்டிக்’கொண்டிருக்கிறது

தோட்டத்தில் விளைந்த சோளத்தை மாலையில் பார்த்துவிட்டு, மறுநாள் காலையில் திரும்பிவந்து பார்க்க, வழித்து துடைத்து சாப்பிட்டு விட்டு, சோனாக்கள் கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதை தான் விவசாயிகள் பார்ப்பார்கள். அவ்வளவு கொலைவெறி பசியில் இருக்கும் புழுக்கள் அவை.

படைப்புழுவின் பூர்வீகம் அமெரிக்கா. அங்கிருந்து புறப்பட்டு ஆபிரிக்காவிற்கு சென்று, அங்கு விவசாயத்துறையில் மிகப் பெரிய பாதிப்பதை ஏற்படுத்திவிட்டு பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பறந்து வந்து இலங்கை, இந்தியாவில் அழிவை ஏற்படுத்துகின்றன.

விவசாயிகளின் பல்லாண்டுகால அனுபவத்திற்கும், அவர்கள் அடிக்கும் விதவிதமான சக்திமிக்க இரசாயன மருந்துக்கும் சளைக்காத இந்த படைப்புழுக்கள் என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன? அது விளைவிக்கும் பேராபத்திலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன?

புழுக்கள் அல்லது பூச்சிகளை எடுத்துக்கொண்டால் நன்மை செய்யக்கூடியது மற்றும் தீமை செய்யக்கூடியது என இரண்டு வகைகள் உள்ளன. அதில், தீமை செய்யக்கூடிய வகையை சேர்ந்த புழுக்களிலேயே மோசமானது ஸ்போடாப்டிரா ஃப்ரூஜ்பெர்டோடா என்னும் உயிரியல் பெயர் கொண்ட படைப்புழு.

வெறும் 30 நாட்கள் வாழும் படைப்புழுக்கள் மற்ற புழுக்களை போலன்றி, பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பறக்கக்கூடியவை. முதன் முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த படைப்புழுக்கள் அங்கிருந்து ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை கூண்டோடு அழித்து விவசாய துறையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி பஞ்சத்துக்கும், பட்டினிக்கும் மக்களை ஆளாக்கின.

2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் முதன் முதலாக கர்நாடக மாநிலத்தில் படைப்புழுக்களின் அட்டகாசம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து  வருட இறுதியில் இலங்கையில் அதன் தாக்கம் தொடங்கியது.

16 கால்கள், ஒரே சமயத்தில் 300 முட்டைகள்

தனது வாழ்நாளில் புழுவிலிருந்து அந்துப்பூச்சியாக உருமாறியவுடன் உடனடியாக இனச்சேர்கையில் ஈடுபடும் இவை ஒரேசமயத்தில் 200 முதல் 300 முட்டைகளை இடும் தன்மையை கொண்டது. சில நாட்களில் முட்டையிலிருந்து வெளிவரும் படைப்புழுக்களுக்கு 16 கால்கள் இருப்பதுடன் அடுத்த இரு வாரங்களில் 3 மிமீ என்ற அளவிலிருந்து 2 ½ செ.மீற்றர் நீளத்திற்கு வளர்கிறது.

அதற்கு இடைப்பட்ட காலத்தில் தன்னாலான அளவுக்கு அதிகப்படிப்பான சோளம் உள்ளிட்ட தனக்கு விருப்பமான பயிர்களை உட்கொண்டு பிறகு மண்ணுக்குள் செல்கிறது. மண்ணுக்குள் அடுத்த 10 நாட்களுக்கு இருக்கும் அவற்றின் கால்களின் எண்ணிக்கை ஆறாக குறைந்து, புதிதாக இரண்டு இறக்கைகளும், கண்களும் பெற்றுக்கொண்டு ஆண், பெண் அந்துப்பூச்சிகளாக உருவெடுக்கும்.

மண்ணுக்குள்ளிருந்து வெளியே பறந்து வரும் பெண் அந்துப்பூச்சிகள் இனச்சேர்க்கையை மேற்கொள்ளும் எண்ணத்துடன் சுரக்கும் ஒருவித வாசனை திரவத்தால் கவர்ந்தெழுக்கப்படும் ஆண் அந்துப்பூச்சிகள் அதைத்தேடி சென்று இனச்சேர்க்கையில் ஈடுபட்டு முன்னர் கூறியதை போன்று ஒரே சமயத்தில் 200 முதல் 300 முட்டைகளை இலைகளில் இட்டு அதை ஒருவித திரவத்தை கொண்டு மூடி பாதுகாக்கின்றன.

பின்பு அங்கிருந்து அடுத்த இடத்தை நோக்கி பறந்துசென்று தனது பணியை தொடருகின்றன. ஒருவேளை பெண் அந்துப்பூச்சியால் இனச்சேர்க்கையில் ஈடுபட முடியவில்லை என்றால் அடுத்த சில நாட்களில் அது உயிரிழந்துவிடும்.

இதேவேளை, இயற்கை விவசாய முறைகளை கடைபிடிக்கும் எவருக்கும் இந்த படைப்புழுக்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தமிழக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் அனைத்துவித சத்துக்களுடன் பிறப்பதை போன்று, ஒவ்வொரு தாவரத்துக்கும் அதற்கு ஏற்படும் சவால்களை சமாளிக்கும் திறன் உள்ளது.

ஆனால், விளைச்சலை பெருக்க தெளிக்கப்படும் வேதிப்பொருட்களால் சில ஆண்டுகளுக்கு அதிக அறுவடையை பெறும் விவசாயிகள் விரைவில் தங்களது மண்ணின் சத்துகளையும், பல்லாண்டுகாலமாக சேர்த்து வைத்த வளத்தையும் இழக்கின்றனர். அதுமட்டுமன்றி, விவசாயிகளின் நண்பனாக திகழும் நன்மை செய்யும் புழுக்களை கொல்வதுடன், தரம் குறைந்த உணவு உற்பத்திக்கும் வழிவகுக்கின்றனர்.

காலப்போக்கில் அனைத்துவித பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் ஏற்றதாக தங்களது உடலமைப்பை தகவமைத்து கொள்ளும் படைப்புழுக்கள் உள்ளிட்ட இன்னும் பிற தீமை செய்யும் பூச்சிகள் எதற்கும் கட்டுப்படாத நிலைக்கு உயர்ந்து விவசாய துறைக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

படைப்புழுக்களை கட்டுப்படுத்த என்ன வழி?

அபரிமிதமான அளவில் பல்கி பெருகி, நாடு நாடாக பயணித்து விவசாயத்தை நசுக்கி வரும் படைப்புழுக்களை கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான இயற்கை மற்றும் செயற்கை வழிமுறைகள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

விவசாயிகள் ஒவ்வொரு பருவத்துக்கும் வேறுபட்ட பயிர் வகைகளை முயற்சி செய்வதும், உழவு செய்தவுடன் வேப்பம் புண்ணாக்குகளை நிலத்தில் போடுவதும் படைப்புழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தீமை செய்யும் புழுக்கள், பூச்சிகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்கும். அது மட்டுமின்றி, வரப்பு பயிர்களையும், வேலி செடிகளையும் வளர்ப்பதன் மூலம் பிரச்சனையிலிருந்து எளிதாக தப்பிக்க முடியும்.

செயற்கையான வழிகளை பார்க்கும்போது, இரவில் மட்டுமே அட்டகாசத்தில் ஈடுபடும் படைப்புழுக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் மின் விளக்குகளை அமைத்து அவற்றை திசைதிருப்பி மொத்தமாக பிடித்துவிட முடியும். மேலும், பெண் அந்துப்பூச்சிகள் இனச்சேர்க்கைக்கு தயாராகும்போது வெளியிடும் பெரோமோன் என்னும் திரவத்தை செயற்கையாக வெளிப்படுத்தி ஆண் அந்துப்பூச்சிகளை ஏமாற்றி மொத்தமாக பிடிக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here