மட்டக்களப்பின் காதல் மையங்கள்: முன்னாள், இந்நாள் ஜோடிகள் ‘மிஸ்’ பண்ணாத இடங்கள்!

©தமிழ்பக்கம்

மீன்பாடும் தேன்நாடு என அழைக்கப்படும் மட்டக்களப்பு எப்பொழுதும் காதலர்களிற்கும் சொர்க்கபுரிதான். மண்ணில் எழில் காதலையும் மெருகேற்றியுள்ளது. காலம்காலமாக மட்டக்களப்பில் காதல் திருத்தலங்கள் பல இருந்துள்ளன. காதலர்கள் கூடியிருந்து கதைத்து, பொழுதை போக்கும் அந்த இடங்கள் காலத்திற்கு காலம் மாற்றம் பெற்றும் வருகின்றன. காதல் முறை மாற, காதல் தலங்களும் மாறுகின்றன.

இன்றைய திகதியில் மட்டக்களப்பில் காதலர்களின் சொர்க்கபுரிகள் எவை எவை? இந்தக் கேள்வியுடன் புறப்பட்டோம்.  இள வட்டங்கள் எங்கெல்லாம் முகாமிடுகிறார்கள், ஏன் அந்த இடங்களை தேர்ந்தெடுக்கிறார்கள், ஏன் அவை சொர்க்கபுரியாக மாறின என்பதை இதில் பட்டியலிட்டுள்ளோம்.

மட்டக்களப்பின் பெரும்பாலான எல்லைகள் நீராலானது. இதுதான் பல சுற்றுலா மையங்கள் உருவாக காரணம். முன்னரும் சுற்றுலா தலங்களும், காதல் மையங்களும் இருந்தாலும், இன்று அவை பல்கிப்பெருகிவிட்டன. வாழ்க்கைமுறையிலும் நிறைய மாற்றங்கள் வந்து விட்டன.

இதயம் பட முரளி மாதிரி எட்டி  நின்று காதலித்த காலம் இப்போதில்லை. பழகிப் பார்ப்போம், பிடித்திருந்தால் மேற்கொண்டு யோசிக்கலாம் வகைதான் இப்பொழுது. முன்னர் மாதிரி தூரத்தில் நின்று கொண்டு கடிதம் எழுதும் காலம்போய், கையை படித்துக் கொண்டு பீச், ஹோட்டல் என இளசுகள் பகிரங்கமாக காதல் செய்கிறார்கள். போனில், இன்ரநெற்றில் கடலை போடுவதெல்லாம் ஒரு அளவுக்குத்தான். நேரிலும் கடலை போட வேண்டும். அதனால் எல்லா இடங்களிலும் காதல் மையங்கள் உருவாகி விட்டன.

இயற்கையாகவே எழில் நிறைந்தது மட்டக்களப்பு. காதலர்களாலும் கலர்புல்லாகும் பொழுது போக்கு மையங்கள் எவை? ஏன் இந்த இடங்களை காதலர்கள் விரும்புகிறார்கள் என்பது பற்றிய விபரம்.

மட்டக்களப்பின் மெரினா

சென்னை மெரினா பீச் பற்றி அறிந்திருப்பீர்கள். மட்டக்களப்பின் மெரினாவும் பிரசித்தமானதுதான். ஆம். கல்லடி கடற்கரைதான் மட்டக்களப்பின் காதலர் திருத்தலமாக உள்ளது. குடும்பமாக, நண்பர்களாக பெருமளவானவர்கள் அங்கு வருவதை போல காதலர்களும் வருகிறார்கள்.

ரம்மியமான கடற்கரை, கடற்கரையோர சவுக்கம் தோப்பு, மனதை கொள்ளை கொள்ளும் மரப்பாதை, கடற்கரையோரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மீன்பிடி படகுகள் என அனைத்தும் சேர்ந்து மனதிற்கு ரம்மியமான ஒரு சூழலை ஏற்படுத்துகின்றன.

வேலைவேலையென ஓடித்திரிபவர்கள் குடும்பமாக மாலைகளில், விடுமுறை நாட்களில் வந்து போகிறார்கள். நண்பர்கள் கூட்டமாக வந்து பொழுதை கழிக்கிறார்கள். அதுபோல காதலர்களும் தாராளமாக வருகிறார்கள். காலை, மாலையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், நண்பகல் வேளைகளில்த்தான் காதலர் கூட்டம் அலைமோதுகிறது.

கல்லடி கடற்கரையின் இருக்கைகளிலும், மர நிழல்களிலும், இன்னும் வசதியான இடங்களிலும் காதலர்கள் ஜோடியாக உட்கார்ந்து மணிக்கண்காக பேசிக்கொண்டிருப்பது அன்றாட காட்சி. மாணவக்காதலர்கள் தொடக்கம் அலுவலக காதலர்கள் வரை பல தரப்பினரும் வருகிறார்கள்.

தூர இடங்களிலிருந்தும் இங்குதான் காதல் பறவைகள் வலசை வருகின்றன.

வெளிச்சவீட்டு கடற்கரை

கொஞ்சம் பணம் இருந்து, துணிச்சலும் இருக்கும் காதலர்கள்தான் இங்கு அதிகமாக வருகிறார்கள். வீடுகளில் உத்தியோகபூர்வ அனுமதி பெற்ற காதலர்களும் சற்று ஆறுதலாக பொழுதை போக்கலாமென இங்கு வருகிறார்கள். நீண்டநேரம் பொழுது போக்க உகந்த இடம்.

சிறிய அழகிய தீவொன்று அங்குள்ளது. அங்கு அழகிய பூங்காவொன்றும் உள்ளது. படகுச்சவாரி உள்ளது. காதலர்கள் தவிர்த்து, சுற்றுலா பயணிகள் மற்றும் குடும்பத்தினர் என பெருமளவானவர்கள் கூடுமிடம். அதனால் துணிச்சல் குறைந்த காதலர்கள் அங்கு செல்வதில்லை!

இரண்டு பேர் பேசணும்… நாள் முழுக்க பேசணும்… யாரும் தொந்தரவில்லாமல் பேசணும்…. பணம் செலவிட்டு றூம் போடாமலும் பேசணும் என்றால் இந்த இடத்தை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்.

காந்தி பூங்கா

மட்டக்களப்பு நகர மத்தியில் அண்மையில் அமைக்கப்பட்ட பூங்கா. காலை, மாலைகளில்த்தான் உட்காரலாம். சற்று வெயில் ஏறினால் கருவாடுதான் போடலாம். காதலர்களின் முன்னணி விருப்பத் தேர்வாக இது இருப்பதாக கொள்ள முடியாது. காரணம், நகர மத்தி மற்றும் சன நெரிசல். ஆனால் இடையிடையே ஓரளவு காதலர்கள் வருகிறார்கள். குறிப்பாக மட்டக்களப்பிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் கல்விகற்கும் வெளியிட மாணவர்கள்தான் துணிச்சலாக இங்கு காதல் செய்கிறார்கள்.

 கோட்டை பூங்கா

இதுவும் அண்மையில் அமைக்கப்பட்ட பூங்காதான். ஆனால் காந்திப்பூங்காவை விட காதலர்களிற்கு சற்று பொறுத்தமானது. அதனால் நகரத்திற்குள் நேரத்தை செலவிட விரும்பும் காதலர்கள், நகரப்பகுதிக்குள் வாழ்பவர்கள் இங்குதான் காதல் சிறகை விரிக்கிறார்கள்.

காந்தி பூங்காவில் நடு வெயிலில் போனால் காதல் செய்ய முடியாது. கருவாடுதான் போட முடியும். அந்தக்குறை இங்கு கிடையாது. பழைய கோட்டைப்பகுதியில் அமைந்துள்ளது. கச்சேரி போன்ற நெருக்கடியான இடங்கள் அருகிலிருந்தாலும், வாவியோரமாக அமைந்துள்ள இதன் அமைவிடம் ஒரு தனிமைத்தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதனால் காதலர்கள் தாராளமாக இங்கு கூடுகிறார்கள்.

பகலில் சற்று நேரம் கிடைக்கிறது, ஆறுதலாக உட்கார்ந்து கடலை போடலாமென நகரத்திலுள்ள யாராவது காதலர்கள் நினைத்தால் இந்த இடம் பொருத்தமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here