கர்ப்பிணி தாதி எடுத்த விபரீத முடிவு: சக்திவாய்ந்த மருந்தை உடலில் ஏற்றி தற்கொலை!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் கர்ப்பிணியான தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வைத்தியசாலை நிர்வாகத்தின் அசன்டையீனமும் அவரது தற்கொலைக்கு காரணங்களிலொன்று என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே நேற்று (27) தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று கடமையிலிருந்து வீடு திரும்பும்போது, ஊசி மருந்து ஏற்ற வசதியாக உடலில் ஏற்றப்படும் ஊசி (கனுனா) ஏற்றிக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். அதை வைத்தியசாலையின் பிற தாதிய உத்தியோகத்தர்களிற்கு தெரிந்தே செய்திருக்க வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. வைத்தியசாலையில் பணிபுரியும் சிங்கள தாதியொருவரிடமே, தனக்கு கனுனா ஏற்றிவிடும்படி கேட்டுள்ளார். இதையடுத்து அந்த தாதி கனுனா ஏற்றிவிட்டுள்ளார்.

பின்னர், மதியம் கடமையிலிருந்து வீடு திரும்பி கணவன், பிள்ளையுடன் சாதாரணமாகவே எல்லோருடனும் பேசியிருக்கிறார். கையில் கனுனா ஏற்றப்பட்டதற்கு கணவன் காரணம் கேட்க, கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்திக்கு மருந்து ஏற்ற அதை பொருத்தியதாக காரணம் கூறியிருக்கிறார். மதிய உணவின் பின்னர் தூங்க சென்றவர், எழாததால் சந்தேகமடைந்த கணவன், அவரை எழுப்பியபோது அசைவற்று இருந்ததையடுத்து, உடனடியாக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் உயிரிழந்து விட்டதை உறுதிசெய்தனர்.

வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தில் பயன்படும் சில மருந்துகளை தனக்குதானே ஏற்றி அவர் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அது மயக்கத்திற்கு பாவிக்கப்படும் மருந்தாக இருக்கலாமென வைத்தியசாலை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றனர். அளவிற்கு அதிகமாக ஏற்றப்பட்டதால், இறப்பு நிகழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது. அந்த மருந்துகளை ஏற்ற வசதியாகவே, கனுனாவை உடலில் ஏற்றியபடி சென்றிருக்கிறார்.

இதேவேளை, கர்ப்பகாலத்தில் ஏற்படும் மனஅழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் சக உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்படுகிறது. கர்ப்ககால மனஅழுத்தம் தற்கொலை உணர்வை தூண்டக்கூடியது, இதையறிந்தும் வைத்தியர்களோ, சக தாதிய உத்தியோகத்தர்களோ அவரை உளவள ஆலோசனைக்குட்படுத்தவில்லையென்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

தற்கொலை செய்த தாதிய உத்தியோகத்தரின் சடலம், யாழ் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொலோனல் ஏற்றியபடி அவரை வீடு செல்ல அனுமதித்தது யார்? இந்த விடயத்தில் வைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்தம் காரணமாக உள்ளதா? தற்கொலைக்கு பயன்படுத்திய மருந்தை பெற்றது எப்படி? தற்கொலையா? என பல்வேறு கோணங்களிலும் பொலிசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here