நுண்கடனால் வடக்கில் ஒரு ஆண்டில் 60 பேர் தற்கொலை; சொத்து, உழைப்பு, கற்ப சூறையாடப்படுகிறது!

யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் நுண்கடன் நிறுவனங்களின் பெருக்கம் அதிகரித்து, அந்த பகுதி மக்களின் உழைப்பு, சொத்து, கற்பு சூறையாடப்படுகிறது என தெரிவித்துள்ளார் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க.

2018ஆம் ஆண்டில் மட்டும் வடக்கில் 60 பேர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற கடன் இணக்க திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

பிமல் ரத்னாயக்க மேலும் தெரிவிக்கையில்-

இலங்கையில் கடன் தொல்லையால் ஒரு மில்லியனுக்கும் அதிக மக்கள் பெரும் நெருக்கடியை சந்திக்கிறார்கள். அதிலும் வடக்கு கிழக்கில் இந்த கடன் பிரச்சனை உயிர்களை பலியெடுக்கும் அளவிற்கு கொடிய பிரச்சனையாக மாறிவிட்டது.

வடக்கில் கடன் தொல்லையால் 2018இல் மட்டும் 60 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதிக வட்டிக்கு பெற்ற கடனை செலுத்த முடியாமல் அந்த அப்பாவி மக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும், பாலியல் இலஞ்சம் கோரும் நிலைமையும் அங்கு உருவாகியுள்ளது.

யுத்தகாலத்தில் கடன் நிறுவனங்கள் வடக்கு, கிழக்கில் உருவாகவில்லை. யுத்தத்தின் பின்னர் அதிக நிறுவனங்கள் உருவாகி, அந்த மக்களின் உழைப்பு, சொத்து, கற்பை சூறையாடுகிறார்கள்.

வடக்கு, கிழக்கு மக்களே பெரும் கடன் நெருக்கடிக்குள் சிக்கி அழிகிறார்கள். அழிக்கப்படுகிறார்கள்.

நூற்றிற்கு 220 வீத வட்டியென்ற நிலைமை உருவாக்கப்பட்டு, அந்த மக்களை தற்கொலை செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ளனர். அரசாங்கம் என்ற வகையில், அந்த மக்களை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

முதலில் இந்த நுண்கடன் நிறுவனங்களை முழுமையாக மூட வேண்டும். நுண்கடன் நிறுவனம் என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் நடவடிக்கை மட்டுமே இடம்பெறுகிறது. ஆகவே கடன்வசதிகளை ஆரோக்கியமான வகையில் மக்களிற்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here