ஏ.எல் பரீட்சையின் பின் என்ன படிக்கலாம்?

© தமிழ்பக்கம்

ஒருவழியாக க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் வந்து விட்டன. சிலர் பல்கலைகழகமோ அல்லது வேறோதாவது உயர்கல்வியை தொடர வாய்ப்பை பெற்றிருப்பார்கள். சிலர் மீண்டும் முயற்சிக்க முடிவெடுத்திருப்பார்கள். இரண்டும் இல்லாமல் நடுவிலும் சிலர் இருப்பார்கள்

அடுத்து என்ன செய்வது?

வீட்டில் அப்பா முணுமுணுக்க, நண்பனிற்கு நடுச்சாமத்தில் போன் போட்டு ‘மச்சான்.. எந்த கோஸ் செய்வம்’ என தீவிரமாக டிஸ்கஸ் செய்து கொண்டிருப்பார்கள் நமது மாணவ மணிகள். அவர்களிற்காகவே இந்த பகுதியை தயார் செய்திருக்கிறோம்.

நண்பன் படிக்கிறான், அப்பா படிக்க சொன்னார் என்பதற்காக ஏதாவதொரு துறையை தேர்ந்தெடுத்து விட்டு, வாழ்க்கை முழுக்க திண்டாடிக் கொண்டிருக்காமல், எதையும் பிளான் பண்ணி செய்யுங்கள்.

அதிக வேலைவாய்ப்பு, அதிக சம்பளம், அதிகம் பேர் தேர்ந்தெடுக்காத சில துறைகளை இங்கு பட்டியல்படுத்தியுள்ளோம். இதில் முக்கியமானது, இந்த பட்டியலில் தனியார்துறையைத்தான் பட்டியலிட்டுள்ளோம். தனியார்துறை கல்வியை ஊக்குவிப்பதற்காக அல்ல. அரச நிறுவனங்களில் அனுமதி கிடைக்காதவர்களிற்காகவே இந்த பட்டியல்.

♦ கடல்சார் இயந்திரவியலாளர் பயிற்சிநெறி

வர்த்தக கப்பல்களில் மாலுமிகளுக்கான ஆரம்ப பயிற்சிநெறி மற்றும் கடல்சார் ஆரம்ப இயந்திரவியலாளர் பயிற்சிநெறி. வர்த்தக கப்பல்களில், துறைமுகங்களில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களிற்கான பயிற்சிநெறி இது. க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி பயின்றிருந்தாலே இந்த கற்கைநெறிக்கு போதுமானது. சாதாரணதரத்தில் சித்தியெய்திய பாடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உயர்ந்த மட்டத்திலுள்ள கற்கைநெறிகளை தேர்வுசெய்யலாம். ஐந்து, ஆறு பாடங்கள் சித்தியெய்திருந்தாலே கடல்சார் இயந்திரவியலாளர் கற்கைநெறியை தேர்வுசெய்ய முடியும்.

வடக்கில் தனியார் இதனை கற்பிக்கிறார்கள். 60,000- 68,000 வரை கல்விக் கட்டணம். நான்கு மாத கற்கைநெறி. இந்த கற்கைநெறியை பூர்த்தி செய்தால் சகல நாட்டு துறைமுகங்கள், கப்பல்களில் வேலைவாய்ப்பு பெறலாம். கப்பல் நிறுவனங்களை பொறுத்து சம்பளம் வேறுபடும். அடிப்படை கற்கைநெறியை பூர்த்திசெய்த ஒருவர் 54,000 ரூபா தொடக்கம் 85,000 ரூபாவரை மாதாந்தம் சம்பளம் பெற வாய்ப்புள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபையின் அங்கீகாரத்துடன் பணி புரிவதற்கான சந்தர்ப்பத்தை இந்த கற்கைநெறிகள் வழங்குகின்றன. பயிற்சிநெறி முடிவில் CDC – Continue Discharge Certificate வழங்கப்படுகின்றது.
மருதனார்மடத்திலுள்ள CINEC CAMPUS, கொழும்பு மாலபேயில் உள்ள சமுத்திரவியல் பல்கலைகழகத்திலும் கற்கைநெறிகள் நடக்கின்றன.

♦ மருந்தகவியல் டிப்ளோமா கற்கை நெறி

மருத்துவத்துறையில் கல்வி கற்று வேலை செய்ய விருப்பமானவர்களுக்கு மருந்தகவியலில் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறியும் தாதியியலில் தொழில்வாண்மையான டிப்ளோமா கற்கைநெறியும் (Prof. Diploma in Nursing, HND in Pharmacy) பொருத்தமானது. அரச உயர்கல்வி நிறுவனங்களில் இணைந்து கற்கலாம். அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களும் இயங்குகின்றன.

தனியார் கல்வி நிறுவனங்களில் கற்கையை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு தனியார் மருந்தகங்களிலும் வைத்தியசாலைகளிலும் பணிபுரிவதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கிறார்கள்.

மாணவர்கள் பகுதி நேரமாகவும் கற்கைநெறிகளை தொடரமுடியும்.
அனைத்து கற்கைநெறிகளும் 1 வருடகாலம் கற்பிக்கப்படுகின்றது. தாதியியல் கற்கை நெறிக்காக 3000 ரூபாவும் மருந்தகவியல் கற்கைநெறிக்கு 5000 ரூபாவும் மாதாந்தம் தனியாரால் அறவிடப்படுகிறது.

தாதியர் கற்கைநெறிக்கு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும். மருந்தாளர் கற்கைநெறிக்கு சாதாரண தர சித்தியுடன் ஆங்கில அறிவும் பரிசோதிக்கப்படுகின்றது. செயல்முறை பயிற்சியுடன் கூடிய இலகுவான கற்கைநெறிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கற்பதற்கு வயதெல்லை கிடையாது. திருமணமானவர்களும் கற்கலாம். பகுதி நேரமாகவும் கற்பதற்காக வசதிகள் உள்ளது.

♦ CIMA – Chartered Institute of Management Accountants

♦ BIT – Bachelor of Information Technology

♦ MCSE – Software Engineering Web Engineering Network Engineering

பெருமளவானவர்கள் இந்த துறையைதான் தேர்வு செய்வார்கள். அத்துடன் web desingning, Auto cut, Hard ware and Networking போன்ற துணைக்கற்கை நெறிகளையும் கற்க முடியும். நிறைய அரச, தனியார் கல்வி நிறுவனங்கள் இதை கற்பிக்கின்றன. பொருத்தமானவர்களை அடையாளம் கண்டு செல்வது அவசியம்.

சான்றிதழ் மட்டம் 04 மாத காலப்பகுதியில் கற்பிக்கப்படுகின்றது. முழுமையாக CIMA ஒன்றரை வருடங்களும், BIT 3 மூன்று வருடங்களும், MCSE 1  ஒரு வருடமும் கற்பிக்கப்படுகின்றது.

கற்கைநெறிகளுக்கான அடிப்படை கல்வித்தகுதிகளாக CIMA மற்றும் MCSE கற்கைநெறிகளுக்கு க.பொ.த சாதாரண தரம் போதுமானது. BIT கற்கைநெறிக்கு க.பொ.த உயர்தரம் கற்றிருத்தல் வேண்டும். க.பொ.த சாதாரண தரம் வரை கற்ற மாணவர்கள் அடிப்படை தகவல் தொழில்நுட்ப கற்கைநெறியை பூர்த்தி செய்த பின்னர் BIT கற்கைநெறியை தொடர முடியும்.

இக் கற்கைநெறிகளுக்கு வங்கிகள், கணக்காய்வு நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், கணக்காளர் துறைகளில் வேலை வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இக் கற்கைநெறிகளில் சான்றிதழ் கற்கைநெறியை பூர்த்தி செய்யும் மாணவர்கள் 75000 ரூபாவிலிருந்து ஊதியத்தை பெற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது.

♦ அழகுக் கலை

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித, உயிரியல், கலை வர்த்தக, தொழில்நுட்ப பிரிவுகளில் ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்தியெய்திய மாணவர்கள் அல்லது அழகுக்கலை மற்றும் சிகை அலங்கரிப்பில் தேசிய தொழில் தகைமை மட்டம் 4 இனை பூர்த்தி செய்தவர்கள் Cosmetology (Beauty Culture) இக்கற்கைநெறியை கற்க முடியும்.
இக் கற்கைநெறியானது

 • Nutrition, diet and exercise related to cosmetology
 • Advance hair treatments and advance hair dressing
 • Advance skin care, hand care, and foot care
 • Advance make up
 • Advance beauty therapy போன்ற பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.

இக் கற்கைநெறியை மாணவர்கள் முழுநேரமாக 3 வருடங்கள் கற்க முடியும். க.பொ.த உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கு மேலதிக கல்விக்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றது.

இக் கற்கைநெறியை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு மணப்பெண் அலங்காரம், சிகை அலங்கரிப்பு, முக அலங்காரம், அழகுச் சிகிச்சை துறைகளில் வேலைவாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

இக் கற்கைநெறி இலவசமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியில் கற்பிக்கப்படுகின்றது. இலங்கையின் தொழில்நுட்பம் வாழ்க்கைத் தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சித் திட்டத்தினாலும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சினாலும் அங்கீகரிக்கப்பட்ட கற்கைநெறியாக காணப்படுகின்றது.

இந்த துறையில் மிகச்சிறப்பாக பணியாற்றுபவர்கள் சீசன் நேரத்தில் ஓரிரு இலட்சங்கள் வரை கூட மாத வருமானம் பெறுகிறார்கள்.

♦ Hotel Management

சுற்றுலாத் துறையில் நட்சத்திர விடுதிகளில் பணிபுரிவதற்கான சந்தர்ப்பங்களை ஹோட்டல் முகாமைத்துவ கற்கைநெறிகள் வழங்குகின்றன. இக் கற்கைநெறி,

 • Front office
 • Coocery
 • House keeping
 • Hotel Reception
 • Restaurant and Bar Services
 • F & B Operation

போன்ற பிரிவுகளை உள்ளடக்கியது.

இக் கற்கைநெறியானது முழுநேரமாகவும் பகுதிநேரமாகவும் கற்கக்கூடிய ஒரு கற்கைநெறியாகும். இக் கற்கையின் பிரிவுகளை தனியாக கற்க முடியும். ஒவ்வொரு பிரிவிற்குமான சான்றிதழ் கற்கைநெறிக் கட்டணமாக ஒரு மாதத்திற்கு 3500 ரூபா உள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு தடைவைக்கு மேற்படாத அமர்வுகளில் கணிதம், ஆங்கிலம் உட்பட 3 சாதாரண சித்தியும் 3 திறமைச் சித்தியும் பெற்றவர்கள் இக் கற்கைநெறியை தொடர்வதற்கு தகுதியானவர்கள். 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆங்கிலம் சித்தியடையாதவர்கள் நிறுவனங்களால் நடாத்தப்படும் ஆங்கிலப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும்.

டிப்ளோமா கற்கைநெறிக்கான மாதாந்த கட்டணமாக 5750 ரூபா காணப்படுகின்றது. 36 மாதங்கள் கற்பிக்கப்படும். முழுநேரமாக கற்க வேண்டும். க.பொ.த உயர்தரத்தில் 2 பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன் க.பொ.த சாதாரண தரத்தில் ஆங்கிலத்தில் திறமைச் சித்தியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது க.பொ.த உயர்தரத்தில் 2 சித்திகளுடன் ஆங்கிலத்தில் சாதாரண சித்தியும் பெற்றவர்கள் கற்க முடியும். வயது 18 – 24 க்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.

கற்கைநெறியை பூர்த்தி செய்யும் மாணவர்கள் ஆரம்ப சம்பளமாக 30,000 ரூபாவிலிருந்து பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. நாடு முழுவதும் நிறைய தனியார் நிறுவனங்களில் இக் கற்கைநெறியை பூர்த்தி செய்யலாம். ஆனால் தனியாரில் நிறைய மலைவிழுங்கிகள் இந்த துறையில் உள்ளனர். தனியார்துறையெனில், கற்கைநெறிக்குரிய நிறுவனத்தை தேர்வுசெய்வதில் அவதானம் தேவை. அரச நிறுவனங்களிலும் கல்வியை தொடரலாம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here