நீராவிப்பிட்டி பிள்ளையார் ஆலய பொங்கல் விழாவிற்குள் புகுந்த பௌத்த பிக்குகள் அடங்கிய குழு: பொலிசாரின் நடவடிக்கையில் மக்கள் அதிருப்தி!

முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நாயாற்றுப் பகுதியிலுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று (14) கிராம மக்கள் ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வில் பௌத்த பிக்குகள் குழுவொன்று நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்டது.

”இலங்கையினை பாதுகாப்போம்” என்ற அமைப்பை சேர்ந்த பௌத்த பிக்குகள் அடங்கிய சுமார் 40 பேரை கொண்ட குழு, குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. பௌத்த பிக்குகள் குழுவிற்கு ஆதரவாக நடந்த பொலிசார், கிராம மக்கள் ஒலிபெருக்கி பாவித்தை தடை செய்து, பொங்கலில் ஈடுபட்டவர்களை புகைப்படமும் எடுத்தனர்.

இன்றையதினம் வருடாந்த பொங்கல் நிகழ்வு நடைபெறுமென முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து செம்மலை பிரதேச மக்கள் இன்று காலையிலேயே, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் குழுமி, பொங்கலில் ஈடுபட தயாராகினர்.

இதன்போது, தென்பகுதியிலிருந்து வந்த பௌத்த பிக்குகள், பொதுமக்கள் அடங்கிய 40 பேர் வரையிலான குழு, செம்மலை மக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டது. பொங்கல் நடத்த விடமாட்டோம் என இடையூறு ஏற்படுத்தினர். அது பௌத்த விகாரை அமைந்திருந்த இடம் என தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச மக்களும் தமது எதிர்ப்பை வெளியிட, அந்த பகுதியில் பதற்றம் உருவாகியது. ஆலயத்திற்கு அருகில் இருந்த படைமுகாமை சேர்ந்த அதிகாரிகள், படையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பையும் சமரசப்படுத்த முயன்றனர்.

இந்த சமயத்தில் முல்லைத்தீவு பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். விகாராதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பொலிசார், செம்மலை மக்கள் ஒலிபெருக்கி பாவித்து பொங்கல் நிகழ்வை செய்ய முடியாதென தடைவிதித்தனர். அத்துடன் பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களை- பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரையும்- புகைப்படம் எடுத்தனர்.

இதனால் மக்கள் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட முடியாமல் அச்சமடைந்தனர். பொங்கல் நிகழ்விற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவே பொலிசார் அப்படி நடந்ததாக மக்கள் குற்றம் சுமத்தினர். செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் படம் எடுத்து, அவர்களுடனும் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

பொங்கல் நிகழ்வை தொடர்ந்து, அன்னதான நிகழ்வு நடந்தது. அதைத் தொடர்ந்து, பிள்ளையார் ஆலயத்தை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டும் நிகழ்வை தடுப்பதற்கும் அருகிலுள்ள விகாரையின், விகாராதிபதி முயன்றார். எனினும், அவரது முயற்சி பலனளிக்கவில்லை.

ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராசா, எஸ்.சிவமோகன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை விவசாய அமைச்சர் க.சிவனேசன், கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here