ஈழத்தமிழ் குடும்பத்தை நாடு கடத்தியே தீருவோம்: அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் அறிவிப்பு!

நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியபடி கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக மெல்பேர்ன் தடுப்புமுகாமில் வைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் நிச்சயம் நாடுகடத்தப்படுவார்கள் என்றும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் பீற்றர் டுற்றன் தெரிவித்துள்ளார்.

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு பெடரல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து இவர்களை பெப்ரவரி 1ம் திகதிக்கு பின்னர் நாடுகடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் உள்துறை அமைச்சர் தலையிட்டு இந்த நாடு கடத்தலை தடுத்து நிறுத்துவதுடன்ஈ அந்த குடும்பத்தை தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறும் பல தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், இந்த வேண்டுகோள்களை நிராகரித்துள்ள அமைச்சர் பீற்றர் டுற்றன், இவர்கள் உண்மையான அகதிகள் என இனங்காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்தடைந்து, புகலிடம் கோரினர். இத்தம்பதிக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த 2 வயது மற்றும் 1 வயதுடைய பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்தநிலையில் நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் இவ்வருட ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது .

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்ட நடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டது.

இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த ஆண்டு ஜுன் 21 அன்று மெல்பேர்ன் பெடரல் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது.

ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.

இந்தப்பின்னணியில் நடேசலிங்கம்-பிரியா குடும்பம், தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரும் மேன்முறையீட்டு மனுவை கடந்த டிசம்பரில் விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here