மாருதப்புரவீக வள்ளியினால் அமைக்கப்பட்ட பிள்ளையார் ஆலயத்திற்கு பக்கத்தில் இறைச்சிக்கடை: தவிசாளர் தன்னிச்சை முடிவு!

வலிகாமம் வடக்கு பிரதேசசபைக்குட்பட்ட பன்னாலையில், பிரதேசசபையின் அனுமதியின்றி, தவிசாளரால் தன்னிச்சையாக மாட்டிறைச்சிக்கடைக்கான கேள்வி கோரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை பகிரங்கமாக கேள்வி மனு திறக்கப்பட்டது.

மாருதப்புரவீக வள்ளியினால் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையென ஐதீகக்கதைகள் கூறும், வரத்தலம் கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து சுமார் 25 மீற்றர்கள் தொலைவில் இந்த இறைச்சிக்கடை அமையவுள்ளது.

வலி வடக்கு பிரதேசசபைக்குட்பட்ட, ஜே 224 கிராமசேவகர் பிரிவில் இந்த மாட்டிறைச்சிக்கடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், இந்த விடயம் சபையில் விவாதிக்கப்படவில்லை. மாட்டிறைச்சிக்கடைக்கான கேள்வி கோரல் தொடர்பாகவும் சபைக்கு அறிவிக்கப்படவில்லை. சபையின் அனுமதியின்றி கேள்வி கோரப்பட்டு, இன்று மாலை பகிரங்கமாக கேள்வி மனு திறக்கப்பட்டது. மல்லாகத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர், 32 ஆயிரம் ரூபாவிற்கு கடையை குத்தகைக்கு பெற்றுக்கொண்டார்.

இந்த மாட்டிறைச்சிக்கடையின் அமைவிடம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. குதிரைமுகம் படைத்த மாருதப்புரவீகவள்ளி கீரிமலையில் நீராடி தனது குதிரை முகத்தை மாற்றினாள் என்றும், அதையடுத்து ஏழு இடங்களில் பிள்ளையார் விக்கிரகங்களை வைத்து வழிபட்டாள் என்றும், அதில் ஒரு விக்கிரமமே இன்றைய வரத்தலம் கற்பக விநாயகர் ஆலயம் என்றும் ஐதீகங்கள் குறிப்பிடுகின்றன.

புகழ்வாய்ந்த இந்த ஆலயத்திற்கு அருகில் மாட்டிறைச்சிக்கடை அமையவுள்ளது உள்ளூரிலும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, வலி வடக்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் மாட்டிறைச்சிக்கடைகளை தடை செய்யும் தீர்மானத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சமர்ப்பிக்க முயன்றபோது, தவிசாளர் அதை எதிர்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here