அமெரிக்காவிலிருந்து திரும்பிய கோத்தபாய அதிரடி; ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கிறார்: மைத்திரி, மஹிந்தவின் ஆதரவு உள்ளதாம்!

மக்களின் விருப்பத்திற்கு இணங்க அரசியலில் இறங்கவுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது அரசியல் நகர்வுகளிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இணக்கமும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வியத்மக அமைப்பு உள்ளிட்ட, கோத்தபாயவிற்கு ஆதரவாக செயற்படும் சில அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

ஒக்ரோபர் 26 அரசியல் குழப்பத்தையடுத்து, கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கா பயணமாகியிருந்தார். சில வாரங்களாக அமெரிக்காவில் தங்கியிருந்த கோத்தபாய ராஜபக்ச, கடந்த வார இறுதியில் இலங்கை திரும்பினார்.

நாடு திரும்பியதும், வியத்மக அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் வேறு சில அமைப்பின் பிரதிநிதிகளுடன் தனிப்பட்ட சந்திப்பொன்றை நடத்தினார்.

அடுத்த கட்டமாக அரசியல் பயணத்தில் நேரடியாக களமிறங்கும் ஆர்வத்தை வெளிப்படையாகவே கோத்தபாய வெளிப்படுத்தியிருக்கிறார். அடுத்த கட்டமாக அரசியல் பயணத்தை இலக்கு வைத்து செயற்பட வேண்டும் என்றும், கூட்டணியாகவோ அல்லது தமது அணியாகவோ களமிறங்கி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்றும், அதற்கு முன்னதாக மக்கள் மத்தியிலுள்ள தன் பற்றிய அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்றும், அது சாதகமாக இருந்தால் உடனடியாக அரசியல் பயணத்தை ஆரம்பிக்கலாமென கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

முன்னோக்கிய நகர்விற்கு சாதகமான அம்சங்களை உருவாக்கிக் கொண்டால், மஹிந்த ராஜபக்ச தமது நகர்விற்கு முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும், தாம் இருவரும் அது குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக்கட்சியின் ஆதரவு தமக்கிருப்பதையும் கோத்தபாய சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஆரம்பத்தில் கலந்துரையாடல்களை நடத்தியதாகவும், அதில் சாதகமான பதில் கிடைத்ததாகவும், ஜனாதிபதி தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கோத்தபாயவை முன்னிறுத்தி அடுத்த தேர்தல்களை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை வியத்மக அமைப்பின் ஊடாக முன்னெடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here