உலகம் உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது; தமிழர்களிற்கு தீர்வில்லையென்றால் இலங்கைக்கு எதிர்காலமில்லை: சம்பந்தன் கறார்!

எமது மக்களிற்காக ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டியது இந்த நாட்டின் அடிப்படை தேவையாகும். சிங்கள், தமிழ், முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட அனைவரும் சம உரிமையுடன் வாழும் நிலைமை ஏற்படும் வரையிலும்- அதற்காக ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் வரையிலும், இந்த நாட்டில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்பட முடியாது. அதுவரை நாட்டிற்கு எதிர்காலமும் இல்லை“

இவ்வாறு காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் யுத்தமொன்று நடந்து முடிந்துள்ளது. ஆனால் யுத்தம் நடந்ததற்கான காரணிகள் அப்படியேதான் உள்ளன. யுத்தத்தை நடத்த இந்த நாட்டு அரசாங்கத்திற்கும், இராணுவத்திற்கும் சர்வதேசம் பெரும் ஒத்துழைப்பை வழங்கியது. அந்த ஒத்துழைப்பையும், உதவியையும் வழங்கியபோது இந்த நாட்டின் ஆட்சியாளர்கள், சர்வதேச சமூகத்திற்கு ஒரு விடயத்தை கூறினார்கள். அதாவது- இந்த யுத்தத்திற்கு காரணமான விடயங்களை தீர்த்து, நியாயமான அரசியல் தீர்வை நாட்டில் ஏற்படுத்துவோம் என்ற வாக்குறுதியை கொடுத்தார்கள்.

அந்த அடிப்படையில்தான் சர்வதேச சமூகம் இந்த ஆதரவை வழங்கியது. ஆனால் அது இன்னமும் நடக்கவில்லை. அது நடைபெற வேண்டியது அத்தியாவசியமானது. நாடாளுமன்றம் ஒரு அரசியல் நிர்ணயசபையாக மாற்றப்பட்டு, ஏறத்தாள 3 வருடங்களாக அந்த சபையால் நியமிக்கப்பட்ட குழுக்கள் செயற்பட்டு, அரசியல் தீர்வை காண முயற்சித்துள்ளன. அது தொடர்பில் நாடாளுமன்றத்திலும் சில அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால் அந்த விடயம் தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஒர அரசியல் தீர்வு ஏற்பட வேண்டியது இந்த நாட்டின் அடிப்படை தேவையாகும். சிங்களம், தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களும் இந்த நாட்டில் சம உரிமையுடன் வாழும் நிலைமை ஏற்படும் வரையிலும் அதற்கான ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்படும் வரையிலும் இந்த நாட்டில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட முடியாது.

இதுதான் உண்மையாகும். இதனை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். உங்களது தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக கடந்த 70 வருடங்களாக இந்த பிரச்சனை தீர்க்கப்படாமல் நீடிப்பது முறையல்ல. அது தவறு என கூறுகிறேன். இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டுமென விரும்புகிறோம்.

நாட்டில் சகல மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும். அது நாட்டிற்கு அத்தியாவசிமானது. இதைத்தான் உலகம் எதிர்பார்க்கிறது. நீங்கள் இந்த விடயங்களை எப்படி கையாளப் போகிறீர்கள் என்று இன்று உலகம் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யுத்தகாலத்தில் இடம்பெற்ற விடயங்களை ஆராயவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு நீங்கள் இன்னும் கருமம் ஆற்றவில்லை. ஆவை நிறைவேற்றப்பட வேண்டும். தமிழ்மக்கள் சார்பில் இந்த நிகழ்வை பயன்படுத்தி இந்த விடயங்களை பகிரங்கமாக கூறிவைப்பது பொருத்தமான விடயம் என கருதுகிறேன்.

சமீபத்தில் நடந்த குழப்பமான சூழலில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றன. தமிழ் மக்கள் சார்பில் நாம் பக்குவமாக செயற்பட்டோம். அரசியல் சாசனத்தை பேணி பாதுகாப்பதற்காக, அதனை உறுதிசெய்வதற்காக, அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்காக எங்களுடைய ஆதரவை, செல்வாக்கை பயன்படுத்தினோம்.

எப்பொழுதும் நாட்டின் நன்மை கருதியும், நாட்டின் முதல் சட்டமான அரசியலமைப்பின் உறுதிப்பாடு கருதியும், அது நிறைவேற்றப்பட வேண்டுமென்ற தேவை கருதியுமே செயற்படுகிறோம். வேறு எதற்கும் நாம் அடிபணியோம். அதுதான் எமது நிலைப்பாடு. எமது மக்களிற்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டியது அவசியமானது. அது ஏற்பட வேண்டுமென கருதுகிறேன். அது விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். அதை நிறைவேற்றாமல் இருந்தால், இந்த நாட்டுக்கு ஒருபோதும் எதிர்காலம் இல்லை என்பதை கூறுகிறேன்“ என்றார்.

Loading...

2 COMMENTS

 1. இவருடைய எதிர்கட்சி பதவி பறிபோனது பற்றி அக்கறை இல்லாத உலகம் என்னதான் செய்யும்?

  • அது இப்போது முக்கியமான விடயம் அல்ல.
   அந்த பதவியை வைத்துக்கொண்டு எதுவும் சாதிக்க முடியாது.

   ஏற்கனவே அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்தான்.
   ஒரு புண்ணியமுமில்லை.
   இன்னும் சொல்லப்போனால் மாறு வேடம் போட்டுக்கொண்டு இந்தியாவுக்கு தப்பி ஒடியதுதான் நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here