கம்பனிகளிற்கும், தொழிலாளர்களிற்கும் நட்டம் ஏற்படாத தீர்வொன்று எட்டப்படும்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனையில் இரண்டு தரப்பிற்கும் நட்டம் ஏற்படாத வகையில் சாதகமாக தீர்வொன்றை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. சம்பள உயர்வு பற்றிய தமது நிலைப்பாட்டை பெருந்தோட்ட கம்பனிகள் இந்த வாரம் அறிவிப்பார்கள் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களிற்கிடையில் கடந்த வாரம் சந்திப்பொன்று இடம்பெற்றது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் தயா கமகே தலைமையில் நடந்த இந்த சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், சம்பள உயர்வு விவகாரத்தில் தற்போதைய நிலைப்பாடு குறித்து கேள்வியெழுப்பியபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“சம்பள பிரச்சனை தொடர்பாக கடந்தவாரம் 22 பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல் நடத்தினோம். இதன்போது கம்பனிகள் ஒரு சில தீர்மானங்களை எடுக்க முன்வந்திருந்தன. தொழிற்சங்கங்களும் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்தன.

பேச்சுவார்த்தை எதிர்பார்த்த தீர்வுடன் நிறைவுக்கு வராத நிலையில் இரண்டு தரப்பினரும், தமது தரப்புக்களுடன் சில கலந்துரையாடல்களை நடத்திய பின்னர் தமது நிலைப்பாடுகளை முன்வைப்பதாக அறிவித்துள்ளன. இந்தவாரம் கம்பனிகள் தமது நிலைப்பாட்டை அறிவிப்பார்கள். அந்த கலந்துரையாடலில், பிரச்சனைக்கு சாதகமான முடிவை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும். தொழிலாளர்களிற்கும், கம்பனிகளிற்கும் நட்டம் ஏற்படாத வகையில் இந்த விவகாரத்தில் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க விரும்புகிறேன்“ என தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here