ஒற்றையாட்சிதான்; மக்களிடம் போலி நம்பிக்கையை விதைக்க வேண்டாம்: சி.தவராசா!

ஐக்கிய தேசியக் கட்சி தற்போதைய அரசியல் அமைப்பின் (1978 ஆம் ஆண்டின்) சரத்து 2 மற்றும் சரத்து 9 என்பவற்றை பாதுகாத்துத் தான் அரசியல் அமைப்பு மாற்றத்தை கொண்டுவரும். இதற்கு முரணான கருத்துக்கள் அடங்கிய யோசனைத் திட்டங்களை சமர்ப்பித்துள்ளோம் என்பதற்காக அவை புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்படும் என்று பொருளாகாது என தெரிவித்துள்ளார் முன்னாள் வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா.

நேற்று (13) அவர் ஊடகங்களிற்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில்-

‘ஐக்கிய தேசியக் கட்சி தற்போதைய அரசியல் அமைப்பின் (1978 ஆம் ஆண்டின்) சரத்து 2 மற்றும் சரத்து 9 என்பவற்றை பாதுகாத்துத் தான் அரசியல் அமைப்பு மாற்றத்தை கொண்டுவரும். இதற்கு முரணான கருத்துக்கள் அடங்கிய யோசனைத் திட்டங்களை சமர்ப்பித்துள்ளோம் என்பதற்காக அவை புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்படும் என்று பொருளாகாது’. (தற்போதைய அரசியல் அமைப்பின் பிரிவு 2 இலங்கையின் ஒற்றையாட்சி தன்மையை உறுதிப்படுத்துகின்றது. அதேபோல் சரத்து 9 பௌத்தத்திற்கான முன்னுரிமையை காட்டி நிற்கின்றது.)

இவ்வாறு பிரதமர் அரசியலமைப்பு சபையில் கடந்த வெள்ளிக்கிழமை (11.01.2019) அரசியல் அமைப்பு மாற்றத்துக்கான உத்தேச வரைபினை சமர்ப்பித்து ஆற்றிய உரையின் பின்பும் சமஸ்டிக்கான குணாம்சங்களைக் கொண்ட அதாவது ‘ஏக்கிய இராச்சிய / ஒருமித்த நாடு’ என்ற சொற்பதமும் அதற்கான பொருள் கோடலும் அடங்கிய ஓர் அரசியல் அமைப்பு வரைபு ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நாம் நம்பிக்கை கொள்ள முடியுமா?

இவ்வரைபு முழுமையான தமிழ் மக்களின் அபிலாசைகளான சமஸ்டி, இணைந்த வடக்கு கிழக்கு என்பவற்றை வழங்குவதற்கான சொற்பதங்கள் அடங்கிய ஒரு வரைபாக இல்லாவிட்டாலும் சமஸ்டிக் குணாம்சங்கள் அடங்கிய, மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையில் ஒரு தெளிவான அதிகாரப்பகிர்வினை உள்ளடங்கிய வரைபாக காணப்படுகின்றது. இணைப்பு பட்டியல் மற்றும் காணி, பொலிஸ் அதிகாரங்களில் சில இடங்களில் மாகாணங்களுக்கான அதிகாரம் 2017 செப்ரெம்பரில் வெளியான  வழிகாட்டல் குழு மற்றும் உபகுழுக்களின் அறிக்கைகளில் குறிப்பிட்ட அளவிற்கு இல்லாதிருந்தாலும் இன்றைய சூழலில் சிலசில திருத்தங்களுடன் தற்காலிக ஏற்பாடாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு வரைபாக இது அமைகின்றது.

இருந்தும், அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்தை பெறுவது மட்டுமல்லாது அதனைத் தொடர்ந்து பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு என பல தடைகளை தாண்டி இவ்வரைபு நிறைவேற்றப்படும் என்பது ஒரு பகல் கனவு என்றே கருத வேண்டியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு சபையில் இவ்வரைபு சமர்ப்பிக்கப்பட்ட போது அங்கு பிரசன்னமாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இதற்கு சான்று பகிர்கின்றது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 56 பேர் மட்டுமே அங்கு பிரசன்னமாக இருந்துள்ளனர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக எதிர்க்கட்சி அணியினர் இதற்கு ஆதரவு வழங்க மாட்டார்கள் என்பது முற்றாக  தெரிந்திருந்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசுடன் சேர்வதன் மூலம் இதனை சாதிக்க முடியும் என்ற ஓர் நம்பிக்கை ஊட்டக்கூடிய கருத்தும் காணப்படுகின்றது.

ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் காலிமுகத் திடலிலும் அதனைத் தொடர்ந்து மகாநாயக்கர்களை சந்தித்தபோதும் ஒற்றையாட்சியின் கீழ்த்தான் தீர்வு என்று கூறியது அவர் ‘ஏக்கிய இராட்சிய / ஒருமித்த நாடு’ என்ற அர்த்தப்பட கூறினாரா? அல்லது தற்போதைய அரசியல் அமைப்பில் உள்ளதைப் போன்றதான தன்மையுடைய ஓர் ஒற்றையாட்சி அரசியலமைப்பைத்தான் கொண்டு வருவதாக கூறினாரா என்பது தெளிவற்று இருந்தது. இத்தெளிவற்ற நிலைக்கு முடிவு கண்டாற்போல் பிரதமரின் மேற்கூறிய உரை அமைந்துள்ளது.

இப்புதிய வரைபினூடாக அருகருகே உள்ள மாகாணங்களை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் இணைப்பதற்கான ஏற்பாடு உள்ளது என்ற செய்தியும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்து. தற்போதைய அரசியல் அமைப்பிலும் இதே போன்று ஒரு ஏற்பாடு உள்ளது என்பதனை  அவ்வாறு பரப்புரை செய்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.- என குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here