இந்திய மீனவரின் உயிரிழப்பில் சந்தேகம்: கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்தாரா?

காரைநகரில் நேற்று இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், இந்திய மீனவர் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை மீனவரின் சடலம் மீட்கப்பட்ட போதும், நேற்று மாலை 5 மணிக்கே காங்கேசன்துறை பொலிசாருக்கு சம்பவத்தை தெரியப்படுத்தினர். மல்லாகம் நீதிவான் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு சென்று சடலத்தை பார்வையிட்டார்.

இந்த மீனவர் எப்படி உயிரிழந்தார் என்பதில் சந்தேகம் நிலவுகிறது. கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்தாரா அல்லது விபத்தில் உயிரிழந்தாரா என்பது தெரியவில்லை. எனினும், இலங்கை கடற்படையினர் தம்மை தாக்கினார்கள் என கைதான மற்றைய மீனவர்கள் குற்றம்சாட்டினர். கைதானவர்களில் இருவர் காயங்களுடன் காணப்பட்டனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இந்திய படகொன்றை கடற்படையினர் வழிமறித்து மீனவர்களை கைது செய்தனர். அந்தப் படகில் இருந்து 117 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் முதலில் தெரிவித்தனர். எனினும் அந்தத் தகவலை பின்னர் கடற்படையினர் மறுத்தனர்.

இந்திய மீனவர்கள் எட்டுப் பேரையும் கடற்படையினர் நேற்று மதியம் யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த போது, அவர்கள் காயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். அதனால் மீனவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளனர்.

அதனால் மீனவர்களை காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர். எனினும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலேயே இந்திய மீனவர்களை ஒப்படைக்குமாறு கூறி காங்கேசன்துறைப் பொலிஸார் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் தமிழகம் இராமேஸ்வரத்தை சேர்ந்த மாரிசாமி எனும் மீனவரின் சடலத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் அல்லது காயமடைந்த நிலையில் கடற்படை முகாம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

கைதானவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று படகு பழுதடைந்து கிளிநொச்சி கிராஞ்சி கடற்கரையோரமாக ஒதுங்கிய 11 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க, கிளிநொச்சி மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here