குடாநாட்டை மிரட்டிய வழிப்பறி கொள்ளையன் கைது!

யாழ்ப்பாண குடாநாட்டில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தார் என்று தேடபட்ட சந்தேகநபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

“யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் வழிப்பறி மற்றும் தங்கச்சங்கிலி அறுப்பு போன்றன அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன.

இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சம்பவம் இடம்பெற்ற இடங்களிலிருந்து சில சிசிரிவி பதிவுகளை வைத்து சந்தேகநபரைத் தேடிவந்தனர்.

இந்த நிலையில் மாவட்ட குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜே.ஜெயறோசனுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அரியாலைப் பகுதியில் மறைந்திருந்த சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். உபபொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினரே அவரைக் கைது செய்தனர்.

இதன்போது வழிப்பறி கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த இலக்கத் தகடுகளற்ற மோட்டார்ச் சைக்கிள் ஒன்றையும் உருக்கி வைக்கப்பட்டிருந்த ஆறு பவுண் தங்கத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மூன்று முறைப்பாடுகள் உள்ளன. விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்” என்று சாவகச்சேரி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here