வட்ஸ்அப் குறூப்பை நிறுத்த அவசரமாக கூடிய ரெலோ… தமிழ்பக்கத்தால் கூட்டங்களில் தொலைபேசிக்கு தடை!

ரெலோ அமைப்பின் தலைமைக்குழு கூட்டம் இன்று பகல் திருகோணமலை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி பல்வேறு அதிரடி தீர்மானங்களை எடுத்தது. அதில் முக்கியமானது- கட்சியின் பெயரில் வைபர் குறூப்பை அனுமதிபெற்றவர்களே நடத்தலாம் என்பதே.

திருகோணமலை சுங்க வீதியிலுள்ள ரெலோ அலுவலகத்திற்கு பிறிதொருவர் உரிமை கொண்டாடியதால், அதன் உரிமை விவகாரத்தில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டது. அதில்-ரேலோவிற்கே அந்த அலுவலகம் உரித்துடையதென தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த அலுவலகத்திலேயே இன்றைய கூட்டம் இடம்பெற்றது.

இன்றைய கூட்டத்தின் தொடக்கத்திலேயே, தமிழ்பக்கம் இணையத்தளத்தை தொடர்புபடுத்தி சர்ச்சை கிளப்பப்பட்டது. தமிழ்பக்கத்திற்கு யார் செய்திகள் வழங்குகிறீர்கள் என கட்சி தலைமை கறாராக கேள்வியெழுப்பியது. இதையடுத்து, கட்சி தலைமை ஒரு கறாரான உத்தரவிட்டது. அதாவது, இனி கட்சியின் தலைமைக்குழு கூட்டங்கள் போன்ற முக்கிய கூட்டங்களில் இனி யாரும் கைத்தொலைபேசிகளுடன் அனுமதிக்கப்படமாட்டார்கள், அனைவரும் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் கைத்தொலைபேசிகளை நிறுத்தி, கட்சியின் தவிசாளர் சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், இன்றைய கூட்டம் குறித்த தகவல்களை கட்சியி் கிழக்கு மாகாண முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்பக்கத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கட்சியின் நிதிப் பொறுப்பாளர் கோவிந்தன் கருணாகரம், கட்சியின் தேசிய மாநாட்டு கணக்கறிக்கையை சமர்ப்பித்தார்.

கட்சியின் கொடி, சின்னம் போன்றவற்றை யாரும் பாவித்து அறக்கட்டளைகளை நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டது. குட்டிமணி, தங்கத்துரை, சிறிசபாரத்தினம் ஆகியோரின் பெயரை பாவித்து அறக்கட்டளகளை நடத்த முடியும். கட்சியின் சர்வதேச பொறுப்பாளராக செயற்பட்ட பிரான்ஸ் நித்தி, மகளிர் அணி பொறுப்பாளர் ஆகியோர் அந்த பொறுப்புக்களை உரிமைகோர முடியாதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கட்சியின் பெயரில் வைபர் குறூப்பை அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர்ந்த வேறு யாராவது செயற்படுத்த முடியாதென்றும் தீர்மானிக்கப்பட்டது. கட்சியின் யாழ்ப்பாண முக்கியஸ்தர் விந்தன் கனகரட்ணம் மற்றும் வெளிநாட்டிலுள்ள சிலர் வைபர் குறூப்பை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிற்கு ஆப்படிக்கப்பட்டது. கோவிந்தன் கருணாகரம், சுரேன், குகதாஸ் போன்றவர்களே வைபர் குறூப்பை நடத்த முடியுமென தீர்மானிக்கப்பட்டது.

கடந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதில்லை, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக ஆதரித்து வாக்களிப்பதெனில் எழுத்துமூல நிபந்தனை பெறுவதென்றும் ரெலோவின் உயர்மட்ட கூட்டங்களில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் அதை கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் ஆகியோர் அதை கருத்தில் எடுக்கவில்லையென கட்சிக்குள் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

அத்துடன்,ரெலோவின் சின்னத்தை பாவித்து யாரும் அறக்கட்டளை நடத்த முடியாதென இன்று தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், சிறிரெலோ இயக்கம் நீண்டகாலமாக ரெலோ இயக்கத்தின் சின்னத்தையே தமது சின்னமாகவும் பாவித்து வருகிறது. அது குறித்து ரெலோ வாய் திறக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here