குதிரைக்கு குடல் மாற்று சிகிச்சை!


திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லுாரி ஆராய்ச்சி நிலைய மருத்துவமனையில் ஒன்றரை வயது குதிரைக்கு குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கேரளாவைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவர், தென்காசியில் குதிரை பண்ணை வைத்து, 10க்கும் மேற்பட்ட குதிரைகள் வளர்த்து வருகிறார். இதில், ஒன்றரை வயது பெண் குதிரை இரண்டு வாரங்களுக்கு முன் சாணம் போட முடியாமல் வயிற்று வலியால் அவதிப்பட்டது. குதிரையை 2ம் தேதி திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு ஜார்ஜ் அழைத்து வந்தார்.

‘டீன்’ ஜான்சன் ராஜேஷ்வர் தலைமையிலான டாக்டர்கள் குழு குதிரையை பரிசோதனை செய்து ‘ஸ்கேன்’ செய்து பார்த்தனர். இதில் குதிரையின் வயிற்று பகுதியில் குடல் வீக்கம் இருப்பதும், உள்ளே பிளாஸ்டிக் உருண்டைகள், நுால் இருப்பதும் கண்டறியப்பட்டது. குதிரைக்கு ஊசி மற்றும் வாய் வழியாக மருந்துகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, குதிரைக்கு மயக்க மருந்து கொடுத்து குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் குதிரை சாணம் போட்டு சகஜ நிலைக்கு திரும்பியது.

கால்நடை டாக்டர்கள் கூறும்போது ‘குதிரைக்கு குடல் அறுவை சிகிச்சை என்பது அரிதான ஒன்றாகும். இந்தியாவிலேயே முதலில் இங்கு தான் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நுால், பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டதால் குடலில் வீக்கம் ஏற்பட்டது. உரிய நேரத்தில் சிசிச்சை மேற்கொண்டதால் குதிரை உயிர் பிழைத்தது’ என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here