கோத்தபாயவிற்கு எதிரான வழக்கு ஆவணங்களையும் காணவில்லையாம்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது.

இந்த வழக்கில் இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவரை எதிர்வரும் 17ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் சட்ட அதிகாரி, பிரதிவாதிகள் கேட்டுள்ள ஆவணங்கள் சிலவற்றை கண்டெடுக்க முடியாதுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த ஆவணங்களை வழங்க முடியுமா என்பது தொடர்பில் சரியான முடிவை பெற்றுக் கொள்வதற்காக கூட்டுத்தாபனத்தின் தலைவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை என்பதுடன், அவர் வௌிநாடு சென்றுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் ஏனைய பிரதிவாதிகளாக நில மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்ஷன டி சில்வா மற்றும் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான பத்ரவதி கமலதாச, சுதம்மிகா ஆட்டிகல்ல, சமன் குமார கலாபத்தி, டி. மெண்டிஸ் சலிய மற்றும் மல்லிகா குமாரி சேனதீர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here