அதிபர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த ‘குழப்படி; மாணவர்கள்; ரௌடிக்குழுவுடன் நுழைந்து பாடசாலைக்குள் அல்லோலகல்லோலம்; மூவர் மடக்கிப் பிடிப்பு: யாழில் அதிர்ச்சி சம்பவம்!

யாழ்ப்பாணம் நாவற்குழி மகா வித்தியாலயத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை, மாணவர்களுடன் இணைந்த குழுவொன்று தாக்க முற்பட்ட அதிர்ச்சி சம்பவம் இன்று (11) காலை இடம்பெற்றது.

இதையடுத்து பாடசாலை மாணவர்கள் ஒன்று திரண்டு ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பாடசாலையிலுள்ள சில மாணவர்கள் பாடசாலையின் ஒழுக்க விதிகளை மீறியும் ஏனைய மாணவர்களை அச்சுறுத்தும் விதத்திலும் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்துள்ளனர். அத்துடன் பாடசாலைக்கு வெளியிலும் சமூகச்சீர்கேடுகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களும் உள்ளன.

இவர்களின் அடாவடித்தனத்தை கண்டித்த ஆசிரியர்கள், ரௌடிகளால் அச்சுறுத்தப்பட்டு, பாடசாலையை விட்டு அவர்கள் இடமாற்றம் பெற்று சென்ற சம்பவங்களும் இடம்பற்றுள்ளன.

இந்த நிலையில் குறிப்பிட்ட மாணவர்களை பாடசாலையில் ஒழுக்கமாக இருக்குமாறும், மாணவர்களை போல வெளியிலும் நடந்துகொள்ள வேண்டுமென அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், ரௌடிகள் சிலருடன் இன்று பாடசாலைக்குள் நுழைந்து அதிபர் மற்றும் ஆசிரியர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று திரண்டு ரௌடிக்குழுவை சேர்ந்த மூன்று பேரைப் பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களில் இரண்டு மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள் தமது பாதுகாப்பையும், அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒழுக்கமற்ற மாணவர்களை பாடசாலையில் இருந்து விலக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர்.

இந்த அதிர்ச்சி சம்பவங்களையடுத்து, தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு பேச்சு நடத்தினர்.

நாளை பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து இதை ஆராய்ந்து முடிவெடுப்பதென்றும், பாடசாலை ஆசிரியர், மாணவர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இ்த சம்பவத்தின் பின்னர் பாடசாலை பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here