அரசியல் நிர்ணயசபையாக கூடியது நாடாளுமன்றம்; நிபுணர்குழு வரைபு சமர்ப்பிப்பு; தலைவர்களின் கருத்துக்கள்!

அரசியல் நிர்ணயசபையாக நாடாளுமன்றம் இன்று 11) கூடியது. இதன்போது, நிபுணர்குழுவின் அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

பிரதமர் உரையாற்றியபோது- “புதிய அரசிலமைப்பிற்கான நிபுணர்குழுவின் அறிக்கையை இன்று சமர்ப்பிக்கிறேன். நாம் நாட்டை துண்டாட முனைவதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த நாடு துண்டாடப்படாமல் இருப்பதற்காகவே இந்த யாப்பு உருவாக்கப்படுகிறது.

மக்கள் பிரதிநிதிகளின் கையில் இந்த விவகாரத்தை ஒப்படைக்கிறோம்“ என்றார்.

இதன்பின்னர் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு விவகாரத்தை ஆராய ஆட்சேபணை தெரிவித்தார்.

“புதிய அரசியலமைப்பை கொண்டு வர இந்த நாடாளுமன்றம் ஏற்புடையதல்ல. நாம் உடனடியாக நாடாளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு செல்வோம். புதிய அரசியலமைப்பு தொடர்பான உங்கள் யோசனை வரட்டும். நாங்களும் எமது யோசனையை முன்வைக்கிறோம். தேர்தலிற்கு செல்வோம். மக்கள் ஒரு முடிவை எடுக்கட்டும். புதிய நாடாளுமன்றத்தில் தீர்மானிப்போம்“ என்றார்.

இதன்பின்னர் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மஹிந்த ராஜபக்சவின் கருத்திற்கு ஆட்சேபணை தெரிவித்தார்.

“புதிய அரசியலமைப்பை கொண்டுவர பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டுமென நீங்கள் கூறுவது சட்டத்திற்கு முரணானது. புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு சர்வசன வாக்கெடுப்புக்கு செல்லும். அப்போது எல்லா இன மக்களும் அதற்கு தமது அபிப்பிராயத்தை தெரிவிப்பார்கள். அப்படியிருக்க தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டுமென நீங்கள் கோருவது அநீதியானது.

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை தருவதாக நீங்கள் கூறியதால் தான் புலிகளை ஒழிக்கும் உங்களது முயற்சிக்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்பை வழங்கியது. சர்வதேசத்திற்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியை மறக்க வேண்டாம்.

இந்த புதிய அரசியலமைப்பு ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீராத பட்சத்தில் – அரசியலமைப்பு வராத பட்சத்தில்- நாடு ஒரு இக்கட்டான நிலைக்கு செல்லுமென்பதை கூறிவைக்க விரும்புகிறேன்” என்று காட்டமாக குறிப்பிட்டார்.

இதன் பின்னர் ஜே.வி.பியின் தலைவர் ஆநுரகுமார திசாநாயக்க உரையாற்றினார்.

“புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு 83 அமர்வுகளை நடத்தினாலும் ஒரு இணக்கப்பாடு ஏற்படவில்லை. மறுபுறம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இதைப்பற்றி தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. நாடு பிளவுபடாத, ஒன்றுபட்ட நாட்டுக்குள் அதிகாரங்களை பகிர கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்“ என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here